Cinema

சூரரைப் போற்று நாயகியின் அடுத்த அவதாரம் சுந்தரி கார்டன்ஸ்.. படம் எப்படி?

சூரரைப் போற்று படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அபர்ணா பாலமுரளி. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘சுந்தரி கார்டன்ஸ்’. நாயகி முக்கியத்துவம் கொண்ட படமாக சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. லைட் ஹார்ட்டான ஒரு திரைப்படத்தை விரும்புகிறீர்களென்றால், நிச்சயம் சுந்தரி கார்டன்ஸ் உங்களுக்கானது.

கதைஇதுதான்... மலையாளக் கரையின் அழகியலைச் சொல்லும் மற்றுமொரு அழகான நகரம். அங்கே, விவாகரத்துக்குப் பிறகு, அம்மாவுடன் வசித்துவருகிறார் நாயகி அபர்ணா. படித்தப் பள்ளியின் நூலகம் ஒன்றில் லைப்ரரியனாக பணியாற்றிவரும் இவர், அதே பள்ளியில் புதியாக வந்து சேரும் ஆங்கில ஆசிரியரின் மீது ஈர்க்கப்படுகிறார். அபர்ணாவின் காதல் கைகூடியதா, இந்த லைஃப் நமக்காக என்னென்ன ஆச்சரியங்களை எல்லாம் வைத்துக் கொண்டிருக்கும் என்பதே படத்தின் கதை.

நரைத்த முடியையும், தொப்பையையும் அவ்வப்போது பார்த்து ஃபீல் செய்வதாகட்டும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஓட்காவையும் ஒயினையும் நாடுவதாகட்டும், யாருக்குப் பிரச்னையென்றாலும் தன் தலையில் போட்டுக் கொள்வதாகட்டும் என எதார்த்தமாக மனதில் நிறைகிறார் அபர்ணா. பொம்மியாக நம்மை ரசிக்க வைத்தவர், இந்த முறை சுந்தரியாக அசத்துகிறார்.

பசுமைக்கு குறைவில்லாத நகரத்தின் காட்சியமைப்பு, பழைமையான பள்ளியின் தோற்றம், படத்தில் இடம்பெறும் மனிதர்கள் என படம் முழுவதும் பாசிட்டிவ் எனர்ஜி. ஆக்‌ஷன் அதகளம், துப்பாக்கி வயலன்ஸ், ஹாரர், செண்டிமெண்ட் என்று இந்தப் படத்தில் எதுவுமில்லை. ஆனால், படத்திற்குள் ஒரு லைஃப் இருப்பதை உணரமுடியும்.

ஆங்கில ஆசிரியராக மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடித்திருக்கிறார். அபர்ணாவுடனான இவரின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. இருவரின் நடிப்பும் எதார்த்தமாகவும், ரியலாகவும் தெரிகிறது.

விவாகரத்தான ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படியெல்லாம் பார்க்கும், மறுவாழ்க்கையைப் பற்றி யோசிப்பதே புனிதமற்றதாக அணுகும் சமூகத்தின் கட்டுகளை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் சார்லஸ் டேவிஸ். வழக்கமான stereotype ஆன விஷயங்களை உடைத்து ஒரு விஷயத்தைப் பேசியிருப்பது சிறப்பு.

அபர்ணாவின் பாஸ்ட் லைஃப் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில கதாபாத்திரங்கள் எதற்கு வருகிறது என்றே தெரிவதற்கு முன்பே காணாமல் போய்விடுகிறது. அத்தகைய கதாபாத்திரங்களால் படத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. மற்றபடி, செம கூல் ஆன, பனிப்பொழிவின் இதத்தைப் படம் நிச்சயம் தரும்.

எத்தனை முறை வாழ்க்கையில் வீழ்ந்தாலும், நம்பிக்கை துளிர்விட்டால் போதும். புது வசந்தம் வருவது நிச்சயம். ஜாலியான, Soulfull ஆன, ரொமாண்டிக் காமெடி ஜானரில் ஒரு படத்தை ரிலாக்ஸாக பார்க்க விரும்பினால் ‘சுந்தரி கார்டன்ஸ்’ சூப்பர் சாய்ஸ்.

Also Read: "இந்தி சினிமா குழப்பத்தில் இருக்க காரணமே இந்த படம்தான்" - பிரபல இயக்குனர் விமர்சனம் !