Cinema

"வெறும் U1 இல்ல.. டாக்டர் U1.." - சிம்புவை தொடர்ந்து டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ! - எதனால் தெரியுமா ?

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா, தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் 1997-ம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதையடுத்து வெளியான காதல் கொண்டேன், வல்லவன், மன்மதன், நந்தா, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பில்லா, மங்காத்தா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். மேலும் இவரது பின்னணி குரலிலும் இசையிலும் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பொதுவாக சிம்பு படத்திற்கு இவர் இசையமைத்தால் அந்த படம் ஹிட் கொடுக்கும் என்று சொல்வது போல், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிம்புவின் 'மாநாடு' படத்திற்கும் இவர் தான் இசையமைத்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் தற்போது தனது 25 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜாவின் கலைச் சேவையை பாரட்டி, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு 'கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கி கெளரவித்துள்ளது. இன்று நடைபெற்ற சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் இவருக்கு 'கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கியுள்ளது அக்கல்லூரி. இதனால் அவரது ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

டாக்டர் பட்டம் பெற்ற யுவனுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இயக்குநர் சங்கர், நடிகர் சிம்பு 'கெளரவ டாக்டர் பட்டம்' பெற்றிருந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க "-போலிக்கணக்கை வைத்து PTR-ஐ விமர்சித்து மாட்டிகொண்ட பாஜக!