Cinema
"காதல் ஒரு அரசியல்.." காதலின் வழியே அரசியலை பேசியிருக்கும் ரஞ்சித்தின் நட்சத்திரங்கள் திரையில் ஜொலித்ததா?
பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா, காளிதாஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. அரசியல் கண்ணோட்டத்துடன் திரைப்படங்களை அணுகும் ரஞ்சித், இந்த முறை காதலின் வழியாக அரசியலைப் பேசியிருக்கிறார். ரஞ்சித்தின் நட்சத்திரங்கள் திரையில் ஜொலித்ததா?
கதை என்னவென்றல், காளிதாஸ், துஷாரா, ஹரி கிருஷ்ணன், வினோத் உள்ளிட்ட பலருடன் நாடகக்குழு ஒன்று இயங்கிவருகிறது. சினிமாவில் ஹீரோ ஆக வேண்டுமென்ற கனவுடன் புதிதாக நாடக்கழுவில் வந்து இணைகிறார் கலையரசன்.
இந்தக் குழுவில், காளிதாஸ் - துஷாராவின் முறிந்த காதல், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் தன்பாலின ஈர்ப்பு ஜோடிகளின் காதல், ஆணுடனான திருநங்கையின் காதல், முத்த வயதுகொண்டவரின் காதல் இவற்றின் இடையே, சமூகம் சார்ந்த எந்த புரிதலும் இல்லாத ஆதிக்க பின்புலத்திலிருந்து வந்திருக்கும் கலையரசனின் காதல் என இத்தனை கதைகள் உலாவுகிறது. இந்த நாடகக் குழுவினர் இணைந்து காதலை மையமாக் கொண்ட அரசியல் நாடகமொன்றை அரங்கேற்ற திட்டமிடுகிறார்கள். அந்த நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியதா, இக்குழுவினர்களிடையே இருந்த முரண்களுக்குத் தீர்வு தீர்வு எட்டப்பட்டதா என்பதே படத்தின் கதை.
Love is Political என்று ஓபன் ஸ்டேட்மெண்டுடன் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். நம்பிக்கையின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் புனிதத்தினை கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாகவும் சமூகத்தில் நிலவும் சிக்கல்களை விவாதிக்கிறார். இந்த சமூகத்தில் பேசக்கூடாதென மறைத்துவைக்கப்படும் ஏரியாக்களை விவாதத்தின் ஊடாக திறந்துவிட்டிருக்கிறார். இந்தச் சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் அனைத்திலும் இருக்கும் சிக்கலென்ன, அதன் பின்னணியில் இருக்கும் முரண்களை பேசியிருக்கிறார். காதலை மையமாக் கொண்டு வித்தியாசமான கோணத்தில் ஒரு படத்தைக் கொடுத்ததற்கே ரஞ்சித்திக்குப் பாராட்டுக்கள்.
ரேனெவாக துஷாரா, இனியனாக காளிதாஸ், அர்ஜூனாக கலையரசன், சேகராக சார்லஸ் வினோத், யஸ்வந்திராக ஹரிகிருஷ்ணன், கற்பகமாக சுபத்ரா என ஒவ்வொருவருமே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள். நாடகத்திற்குத் தயாராகும் நாடகக் குழுவினரின் வாழ்க்கையின் வழியாக ஒரு எதார்த்தமான படமாக நிறைகிறது. குறிப்பாக, துஷாராவின் கதாபாத்திரத்தின் வழியாகப் பேசப்படும் அரசியல் மிக முக்கியமானது.
கலையின் ஊடாக சமூக நீதியைப் பேச முயலும் இரஞ்சித்தின் கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் தென்மா. பாடல்களாகட்டும், காட்சியமைப்பாகட்டும் இசையில் புது அனுபவம் உறுதி.
நாடக ரிகசல் நடக்கும் இடத்திலேயே பெரும்பாலான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். குறைவான லொக்கேஷன் என்றாலும், ஒவ்வொரு காட்சியிலும் கேமிரா ஒர்க் ஆக அசத்தியிருக்கிறார் கிஷோர் குமார்.
உணர்வூட்டும் உமாதேவி, அறிவின் பாடல் வரிகள், கதைக்கேற்ற செல்வா RK-வின் படத்தொகுப்பு என காஸ்ட்யூமில் துவங்கி நடனம் வரை படத்தை அழகியலாக்க அனைவருமே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
காதலுக்கு மதமோ, இனமோ கிடையாது. மனதிலிருந்து பூக்கும் காதலென்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், காதல் வருவதற்கான முதல் காரணமென்ன என்று சொன்னதாகட்டும், லவ் இஸ் லவ் என வழக்கமான புனிதமான பின்பங்களை உடைத்தெறிவதாகட்டும் என பேசத்தயங்கும் நிறைய விஷயங்களைப் பேசிய இடத்தில் கவனம் ஈர்க்கிறது.
சினிமாவாக இந்தப் படத்தை அணுகும் போது சில சிக்கல்களும் இருக்கிறது. உரையாடலாகவும், ஆவணப் படத்துக்கான சாயலும் படத்தில் இருக்கிறது. கலையரசன் மனம் திருந்தும் இடத்தை அழுத்தமாகச் சொல்லவில்லை, சபீர் கேரக்டரை இன்னும் கொஞ்சம் கூட எதார்த்தமாக்கியிருக்கலாம் என தோன்றுகிறது. அதோடு, தன்பாலின ஈர்ப்பாளரின் கதை, திருநங்கையின் காதலென்பதெல்லாம் கதையில் மேலோட்டமாகவே வந்துபோகிறது.
வழக்கமான ஒரு சினிமாவாக நிச்சயம் இருக்காது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உரையாடலை இந்தப் படம் ஏற்படுத்தும். ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும் . இறுதியாக, ‘நட்சத்திரம் நகர்கிறது’.... இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!