Cinema

விமர்சிப்பவர்களை தற்குறிகள் என்று சொன்னேனா? : பத்திரிகையின் தலைப்பு குறித்து மிஷ்கின் விளக்கம் !

தமிழில் முன்னணி இயக்குநர்களில் பிரபலமானவர் மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பினாலும் ரசிகர்களுக்கிடையே வரவேற்பும் கிடைத்து வருகிறது. 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தின் மூலம் இயக்குநரான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு நரேன், அஜ்மல் நடிப்பில் வெளியான 'அஞ்சாதே' திரைப்படதிற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை கிடைத்ததோடு, விருதுகளும் கிடைத்தது.

இதையடுத்து பல படங்கள் தோல்வியை தழுவினாலும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', பிசாசு', 'துப்பறிவாளன்' போன்ற படங்கள் ஹிட் கொடுத்தன. ஹிட் கொடுத்த படங்களின் அடுத்த பாகங்களான 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதன் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே 'துப்பறிவாளன்' படம் ஹிட்டுக்கு பிறகு இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக இதன் அடுத்த பாகத்தை தானே எடுப்பதாக கூறி விஷால் உரிமையை தட்டி சென்றுள்ளார். இவர் திரைப்படம் ரீதியாக மட்டுமல்லாமல், இவரது சர்ச்சை பேச்சினாலும் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள்" என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது தனது பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

Also Read: "ஏழையின் சிரிப்பில் இறைவன்.." - அண்ணா பொன்மொழியை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !