Cinema
சுணக்கம் கொடுக்கதாக web series - Breaking Bad சீரிஸ்ஸின் யுனிவெர்ஸ்ஸை கொண்ட Better Call Saul : விமர்சனம்!
Better Call Saul என ஓர் இணையத் தொடர். நெட்ஃபிளிக்ஸ்ஸில் இருக்கிறது. மொத்தம் 6 சீசன்கள். 6வது சீசனின் கடைசி அத்தியாயம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜிம்மி என்கிற வக்கீல் ஒருவனைப் பற்றியக் கதைதான் பெட்டர் கால் சால். ஜிம்மிக்கு தொடக்கத்தில் வக்கீல் தொழிலில் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. அவனது அண்ணன் சக் மெக்கில் செய்யும் வக்கீல் தொழிலால் ஈர்க்கப்பட்டு வக்கீலாகிறான். ஆனால் அண்ணன் சக் மெக்கில் மிகவும் மதிக்கத்தக்க, நம் ‘கெளரவம்’ படத்தில் வரும் அப்பா சிவாஜி போன்ற கதாபாத்திரம். அவருக்கு ஜிம்மி மீது பெரிய மதிப்பு இருக்காது. ஏனெனில் அவனுடைய வழிமுறை அவருக்குப் பிடித்தம் இல்லை. அவன் ஒரு கீழ்த்தனமான மோசடிக்காரன் என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கி இருக்கிறது.
வக்கீல் ஆனதும் அண்ணன் பங்குதாரராக இருக்கும் HHM நிறுவனத்தில் இணைய முயற்சிக்கிறார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. அதற்குக் காரணமாக அவரது அண்ணனே இருக்கிறார். அதே நிறுவனத்தில் இருக்கும் கிம் வெக்ஸ்லருக்கு ஜிம்மி மீது ஈர்ப்பு இருக்கிறது. ஜிம்மிக்கு எதிராக செயல்படும் அண்ணன் மீதும் பிற பங்குதாரர்கள் மீதும் அவளுக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. அதனாலேயே அவள் பந்தாடப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவள் நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்தமாக வழக்குகள் எடுத்து வழக்காடத் தொடங்குகிறாள். ஜிம்மியும் அந்தக் கட்டத்தில் ‘சிறு குற்ற’ வழக்குகளை எடுத்து வழக்காடிக் கொண்டிருக்கிறான்.
இருவரும் இணைந்து ஒரு நிறுவனமாக தொடங்கி வழக்குகள் பெற்று வழக்காடத் தொடங்குகின்றனர். ஜிம்மியின் அண்ணனாலும் எதிர்பாராமல் சேரும் வில்லங்களாலும் ஏற்படும் பாதிப்புகளை ஜிம்மி எப்படி வெல்கிறார் என்பதே இணையத் தொடரின் மிச்சக் கதை.
பெட்டர் கால் சால் தொடரின் சிறப்பம்சமே அது ப்ரேக்கிங் பேட் (Breaking Bad) சீரிஸ்ஸின் யுனிவெர்ஸ்ஸை கொண்டிருப்பதுதான். ப்ரேக்கிங் பேட் சீரிஸில் வரும் நாயகப் பாத்திரமான வால்டர் ஒயிட்டின் வழக்கறிஞராக வரும் பாத்திரம்தான் சால் குட்மேன். ப்ரேக்கிங் பேட் தொடரில் பல பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் வழக்கறிஞர் சால் பாத்திரத்தில் நடித்திருந்த பாப் ஓடன்கிர்க்கின் நடிப்பு பலரையும் ஈர்த்திருந்தது. எனவே அந்தப் பாத்திரத்துக்கான முன் கதையாக ஒரு கதை யோசிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு தனி இணையத் தொடராக எடுக்கப்பட்டதே பெட்டர் கால் சால் தொடர்.
ப்ரேக்கிங் பேட் தொடரில் பலரும் ரசித்த கஸ் ஃப்ரிங், ஹேங்க், மைக் போன்ற பாத்திரங்கள் இத்தொடரிலும் இருக்கின்றன. பெட்டர் கால் சால் முடியும் தறுவாயில்தால் ஜிம்மி தன்னுடைய மொத்த இயல்பையும் உடைத்துக் கொண்டு புதிய மனிதனாக மாறி 'Saul’ என்கிற அடையாளத்தைச் சூட்டுகிறான். தொடரின் இறுதியில் அவன் எப்படி சால் பாத்திரமாக மாறுகிறான் என்பதை கண்டறிவதற்கு நாம் பார்க்கத் தொடங்கினாலும் தொடரின் பிற சீசன்கள் எதுவும் சுணக்கம் கொடுக்கவில்லை.
நிச்சயமாக தொடர் பார்க்கும் ரகம். எனவே பார்த்துவிடுங்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!