Cinema
கமர்ஷியல் கலந்து கேரள கம்யூனிசம் பேசும் சகாவு படம்.. திரை விமர்சனம்!
மலையாள சினிமா யதார்த்த சினிமாவுக்கு பெயர்பெற்றது. அதே போல, கம்யூனிசம் சார்ந்த படங்களுக்கும் மலையாளத் திரையுலகம் பெயர் பெற்றது. பல கம்யூனிசத் திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தார்போல் வெளிவந்தப் படம்தான் சகாவு.
கிருஷ்ணகுமார் ஒரு கம்யூனிஸ்ட். இன்றைய தலைமுறையினன். அவனுக்கு மார்க்ஸோ லெனினோ பிடலோ எவர் கருத்தியலிலும் ஈர்ப்பு எல்லாம் இல்லை. இருக்கும் வாய்ப்புகளையும் பதவியையும் வைத்துக்கொண்டு கையை காலை பிடித்து வளர்ந்து முதலமைச்சராகி விட வேண்டும். அவ்வளவுதான். அப்படிப்பட்ட ஒருவன் ஆஸ்பத்திரியில் ரத்தம் கொடுக்க போய், சகாவு கிருஷணனை பற்றி தெரிந்து கொள்கிறான்.
சகாவு கிருஷ்ணன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அவனை பற்றி அவன் மகள், மனைவி, நண்பர்கள் என பலரிடம் கேட்டறிகிறான் கிருஷ்ணகுமார்.
ஒரு எஸ்டேட்டில் முதல் தொழிலாளர் சங்கத்தை பல போராட்டங்களுக்கு பிறகு கம்பெனிக்காரர்களை எதிர்த்து உருவாக்கிய பெருமை கொண்டவன் சகாவு கிருஷ்ணன். அதுபோல் பல ஊர்களில் பல பிரச்சினைகளில் முன் நின்று போராடி இருக்கிறான். நடுவே சக போராளியை மணம் முடிக்கிறான். மகள் ஊடக நிருபர் ஆகி, தன்னளவில் நியாயங்களுக்கு குரல் கொடுக்கிறாள். வயதாகி ஒரு கை விளங்காமல் போகிறது. கிருஷ்ணன் தொழிற்சங்கம் கேட்டு போராடிய கம்பெனிக்காரன் சில வருடங்களில் கம்பெனியை மூடி விட்டதால், தொழிலாளர்கள் வாழ்க்கைப்பாடு சிக்கலில் இருக்கிறது. தன் நண்பன் ஒருவரை அந்த எஸ்டேட்டை வாங்க சொல்கிறான்.
கிருஷ்ணன் மீதுள்ள மதிப்பில், எஸ்டேட்டை வாங்குகிறான் நண்பன். தொழிலாளர் பிரச்சினை திரும்ப வந்துவிட கூடாது என்பதற்காக கிருஷ்ணனையே தொழிலாளர் நலனுக்கான பொறுப்பில் இருக்க வைக்கிறான் நண்பன். அந்த எஸ்டேட்டின் ஒரு பகுதியில் ரிசார்ட் அமைத்து ஆக்கிரமித்திருக்கும் ஒருவனுக்கும் சகாவு கிருஷ்ணனுக்கும் பிரச்சினை ஆகிறது. அந்த பிரச்சினையில் சகாவு கிருஷ்ணன் குத்துப்பட்டுத்தான் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அறுவைசிகிச்சையில் சகாவு கிருஷ்ணன் பிழைக்கிறான். அவர் கதையை கேட்ட சந்தோஷத்துடன் நிறைவுடன் கிளம்புகிறான் கிருஷ்ணகுமார். சகாவு கிருஷ்ணன் விட்டு சென்ற வேலையை கிருஷ்ணகுமார் தொடர்கிறான்.
படத்தை பொறுத்தவரை வசனங்கள் பிரமாதம். கம்யூனிஸ்ட்டு கதையை காலத்துக்கு தேவையான கமர்ஷியல்தனங்களுடன் சொல்லி இருக்கிறார்கள். கிருஷ்ணனை கடைசி வரை அடுத்தவரின் வாய்மொழி கதை வழியாகவே ப்ளாஷ்பேக்கில் காண்பித்துவிட்டு, காணும் சந்தர்ப்பம் வரும்போதும் கிருஷ்ணகுமார் பார்க்காமல் "எனக்குள் சகாவு கிருஷ்ணன் வந்துவிட்டார்" என சொல்லிவிட்டு கிளம்புவது அழகு. அடுத்தவரின் கதைவழியே சொல்லப்படும் சகாவு கிருஷ்ணனின் வாழ்க்கை Jim Carrey நடித்த Majestic போல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. இசையும் அற்புதம்.
படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!