Cinema
“எதிர்காலத்தில் மனித குலத்திற்கு இயந்திரங்கள்தான் துணையாக இருக்குமா?” : ‘Finch’ படம் சொல்வது என்ன ?
ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்த இப்படம், கடந்த வருடம் வெளியானது. உலக அழிவுக்குப் பிறகு நடக்கும் கதையாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
உலக அழிவுக்குப் பின் நடக்கும் களங்களைப் பற்றி ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல வகைக் கற்பனைகளுடன் அப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்னவெனில் உலகம் ஒருநாள் அழியப் போகிறது என்பதுதான்.
டெர்மினேட்டர், ட்வெல்வ் மங்கிஸ், எலிசியம், புக் ஆஃப் எலை, வாட்டர் வோர்ல்ட், மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோட், ஐயம் லெஜெண்ட், சில்ட்ரன் ஆஃப் மென், ஸ்னோபியர்சர், மேட்ரிக்ஸ், இண்டெர்ஸ்டெல்லார் என வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். உலக அழிவு உண்மை எனில் என்ன காரணமாக இருக்கும்? இயந்திரங்களின் ஆதிக்கம், காலநிலை மாற்றம், வர்க்க வேறுபாடு என அதற்கும் ஒரு பட்டியலை ஹாலிவுட் திரையுலகம் கொண்டிருக்கிறது.
ஃபிஞ்ச் படம் கொஞ்சம் வேறு வகை. காலநிலை மாற்றத்தின் விளைவாக நேரும் உலக அழிவு என சொன்னாலும் மனிதர்களுக்கு இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளை கேள்வி கேட்பதாக படத்தின் கதை விரிகிறது.
கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ படம் போன்ற ஒரு road travel படம் தான். அன்பே சிவம் போலவே மனிதத்தின் ஆழங்களை நோக்கி இப்படமும் பயணிக்கிறது. அப்படம் போலவே எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மனித விழுமியங்களை இப்படம் ஆராய்கிறது.
இந்த படத்தின் கதாநாயகனான டாம் ஹாங்க்ஸின் பெயர்தான் ஃபிஞ்ச். படத்தில் அவர் வசிக்கும் ஒரு கட்டடத்தில் அவருடன் ஒரு சிறு இயந்திரமும் நாயும் இருக்கின்றன. அவர் கூடுதலாக ஒரு ரோபோவையும் உருவாக்குகிறார். அச்சமயத்தில் மழை, புயல், சூறாவளி போன்ற பல 10-க்கும் மேற்பட்ட காலநிலை நிகழ்வுகள் அவர் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
அவருக்கு வேறு வழியில்லை. அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். எனவே வேன் போன்றவொரு வாகனத்தில் அவரும், அவர் உருவாக்கி வரும் ரோபோவும், நாயும், எந்திரமும் ஏறிக் கொள்கின்றனர். கலிஃபோர்னியாவின் கோல்டன் கேட் பாலத்தை நோக்கி செல்வதுதான் இலக்கு.
பயணத்தினூடாக ரோபோ இயங்க வேண்டிய முறையை ஃபிஞ்ச் கற்பித்துக் கொண்டே வருகிறார். ஏனெனில் ரோபா உருவாகி சில மணி நேரங்களே ஆகியிருக்கிறது. ஒருவேளை தான் இறந்துவிட்டால் தன் வளர்ப்பு நாயைப் பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்றே அந்த ரோபோவை உருவாக்கியிருக்கிறார் ஃபிஞ்ச்.
பயணத்தினூடாக மனிதம் எது, இயந்திரத்தன்மை எது, மானுட அழிவு நேர்ந்ததற்கு காரணமாக இருந்த மனித குணம் எது என்பதெல்லாம் விவரிக்கப்படுகிறது. ரோபோவுக்குக் கற்றுக் கொடுக்கும் வழியில் இவை விவரிக்கப்படுவதால், துயரமாக தத்துவப் பூர்வமாக எல்லாம் தெரியவில்லை.
அழகான நகைச்சுவையினூடாக அவற்றின் ஆழம் நமக்குள் எதிர்பாராதளவுக்குத் தாக்கத்தைக் கொடுத்து மென்மையாக விரியும் அனுபவத்தை அளிக்கிறது. படத்தைப் பார்த்துவிடுங்கள். எந்திரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் எதிர்காலம் நமக்கு நேரலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!