Cinema

ஊடகங்களின் செய்தி மோகம்.. அரசியல் சிக்கலை நகைச்சுவையாக பேசும் ‘Peepli Live’ திரைப்படம் செல்வது என்ன?

ஒரு குறிப்பிட்ட அரசியல் சிக்கலை நகைச்சுவையாக நமக்குள் கடத்த முடியுமா?

முடியும் என்கிறது பீப்ளி லைவ் திரைப்படம்.

அமீர் கான் தயாரிப்பில் அனுஷா ரவி இயக்கிய இப்படம் 2010ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

கதைப்படி பீப்ளி என்பது ஒரு கிராமம். அங்கு நதா தாஸ் என ஓர் ஏழை விவசாயி வசிக்கிறார். அண்ணனின் குடும்பத்துடன் அவர் வசிக்கிறார். விவசாயத்துக்காக அண்ணனும் தம்பியும் வங்கிக் கடன்கள் வாங்கியிருக்கின்றனர். என்ன விதைத்தும் விளங்கவில்லை. நஷ்டங்கள்தான்.

எனினும் வீட்டில் படுத்தப் படுக்கையாக கிடக்கும் அம்மாவும் அண்ணியும் வருமானமின்றி இருப்பதற்காக இரு சகோதரரரையும் கரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வசவுகளிலிருந்து தப்பிக்கவே தினமும் அவர்கள் விவசாயம் பார்க்கப் போவதாக பொய்ச் சொல்லிக் கிளம்பி விடுகின்றனர். ஆனாலும் வருமானத்துக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.

விரைவில் தேர்தலும் நடக்கவிருந்தது. ஆளும்கட்சி மீது ஏழ்மையைத் தடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டுகிறது. தொழில் மயமாக்கமே விடியல் தரும் எனப் பேசும் எதிர்கட்சி தேர்தலில் தனக்கு வாய்ப்பு இருக்குமென நம்புகிறது.

வறுமையிலிருந்து பிழைக்க அண்ணனும் தம்பியும் ஊர்த்தலைவரிடம் உதவி கேட்கப் போக, அவரோ ‘விவசாயி செத்தால்தான் பணம் நஷ்ட ஈடாக கிடைக்கும்’ எனப் பேசுகிறார். நதாவுக்கு அது நல்ல யோசனையாகத் தெரிகிறது. தற்கொலை செய்வது குறித்து அண்ணனிடம் ஒரு டீக்கடையில் அமர்ந்து நதா பேசிக் கொண்டிருக்கிறார். அந்த விஷயம் இன்னொருவரின் காதில் விழுகிறது.

அந்த இன்னொருவர் ஒரு செய்தித் தொலைக்காட்சியின் நிருபர். ‘விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் ஒரு விவசாயி தற்கொலை செய்யவிருக்கிறார்’ என செய்தியை தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அனுப்பி விடுகிறார். நிறுவனமும் செய்தியை ஒளிபரப்பு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அச்செய்தியை தூக்கி சுமக்கின்றன. முதல்வருக்கு சிக்கல் ஏற்படுகிறது.

தற்கொலை செய்யவிருக்கும் விவசாயி ஒரு சிறந்த செய்தியாக இருப்பார் என நினைத்துக் கொண்டு நகரத்தின் மொத்த

தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களின் ஒளிபரப்பு வாகனங்களுடன் பீப்ளி கிராமத்தில் குவிந்து விடுகின்றன. நொடிக்கு நொடி நதாவின் செயல்பாட்டை போட்டி போட்டு ‘லைவ்’ செய்கின்றன ஊடகங்கள்.

இவ்வளவுதான் களம்.

நதாவை நேரகாணல் எடுக்க தொலைக்காட்சி நிருபர்களுக்கு இடையேயானப் போட்டி, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி, அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல்கள், குடும்பத்துக்குள் இருக்கும் சூழல் என எல்லா பிரதான விஷயங்களும் பின்னப்பட்டு கதைக்களம் சுவாரஸ்யமாக விரிகிறது.

கண் முன்னே நம் வாழ்வில் சந்தித்து ஏதும் செய்ய முடியாமல் கடக்கும் அரசியல் நிலைகளை முகத்தில் அடிக்கும்படி கதை நேர்கிறது. இருந்தும் என்ன செய்ய முடியும் என்கிற கையறு நிலையே மிஞ்சுகிறது.

முக்கியமாக ட்ரெண்டிங் நியூஸ், ப்ரேக்கிங் நியூஸ் ஆகிய பரபரப்புகள் மட்டுமே செய்திகளாகக் ஆக்கப்பட்டிருக்கும் சூழலில் உண்மை மற்றும் தீர்வு ஆகியவற்றுக்கான வழி என்ன என்பதை முன் வைத்துப் படம் நிறைவடைகிறது.

Peepli Live திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.