Cinema

Peaky Blinders.. 6-வது சீசனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்: அப்படி என்ன இருக்கு இந்த தொடரில்!

கோவிட் காலத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத சூழலில் உலகெங்கும் ஓ.டி.டி தொடர்கள் பிரபலம் அடைந்தன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், சோனி லைவ், ஹாட்ஸ்டார் எனப் பல ஓடிடி தளங்களில் பல வகை இணையத் தொடர்கள் வெளியாகுகின்றன. தமிழ்ச்சூழலுக்கு சற்று புதிதாக இருந்த ஓ.டி.டி தள பயன்பாடு, மெல்ல பிரபலமடைந்து தற்போது அதிக பயன்பாட்டை எட்டியிருக்கிறது. பல தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்திலே வெளியாகும் அளவுக்கு ஓ.டி.டி வாசகர் பரப்பு அதிகரித்திருக்கிறது.

உலகெங்கிலும் பெரும் வரவேற்பை அடைந்த பல ஓ.டி.டி தொடர்களில் முக்கியமானதாக கருதப்படும் தொடர்தான் பீக்கி ப்ளைண்டர்ஸ்.

இத்தொடரின் நாயகப் பாத்திரம் தாமஸ் ஷெல்பியாக நடித்திருப்பவர் சிலியன் மர்ஃபி. இவர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ், டார்க் நைட் ரைஸஸ் போன்றப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் பெரிய நடிகராக அறியப்படாதவர். பீக்கி ப்ளைண்டர்ஸ் தொடரும் நெட்ஃப்ளிக்ஸ்ஸால் தயாரிக்கப்பட்டதல்ல. முதன்முதலில் இத்தொடர் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு பிபிசி 2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. தொடருக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு முதல் தர ஒளிபரப்புக்காக ஐந்தாம் சீசனிலிருந்து பிபிசி 1-ல் தொடர் ஒளிபரப்பானது. 2014ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் இத்தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய பிறகு, உலகம் முழுக்க வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்பகுதியாக சீசன் 6 ஏற்கனவே பிபிசி 1-ல் வெளியாகிவிட்டது.

ஸ்டைலிஷாக எடுக்கப்பிட்டிருக்கும் பீக்கி ப்ளைண்டர்ஸ் தொடருக்கான வரவேற்பு அதன் கதையம்சத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். பீக்கி ப்ளைண்டர் என ஒரு சிறு அளவிலான தாதா குழு உண்மையிலேயே முதல் உலகப்போருக்கு பின்னான காலக்கட்டத்தில் இயங்கியது. அக்குழுவின் பாத்திரங்களைக் கொண்டும் அக்கால சமூக - அரசியல் சூழலைக் கொண்டும் பின்னப்பட்டக் களம்தான் தொடருக்காக உருவாக்கப்பட்டக் களம்.

அடிப்படையில் பீக்கி ப்ளைண்டர்ஸின் தலைவனாக தாமஸ் ஷெல்பி இருக்கிறார். குதிரைப் பந்தயம், அடிதடி முதலிய வழிகளில் வருமானம் ஈட்டி இயங்கும் குழுவில் பிரதானமாக குடும்பத்தினரே உறுப்பினர்களாக இருக்கின்றனர். கதையின் சுவாரஸ்யம் கூடுவது இக்குழுவினர் அனைவரும் ஜிப்சி இனக்குழுவினர் என்பதில்தான்.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதியில் வசிப்பவர்கள் பீக்கி ப்ளைண்டர்ஸ். ஆலைகள் இருக்கும் பகுதிதான் அவர்களின் வசிப்பிடம். அவர்கள் இயங்கும் சமூகம் உழைக்கும் வர்க்கத்தினாலான சமூகம்.

உழைக்கும் வர்க்கம், புறக்கணிக்கப்படும் இனக்குழு என இரண்டும் ஒன்று சேர்ந்து பீக்கி ப்ளைண்டர்ஸ் இயங்கும் தளத்தில் இரண்டு வழிகளை வாழ்வதற்கான வழிகளாக முன்னிறுத்துகிறது. சோசலிச அரசுக்கான போராட்டம் அல்லது அதிகாரத்தை எதிர்த்து அடித்து உறவாடி உயரும் தாதாத்தனம்!

பீக்கி ப்ளைண்டர்ஸ் கதை தொடங்குவது 1919ம் ஆண்டில். சோவியத் யூனியனில் உலகின் முதல் உழைக்கும் வர்க்க அரசு ஆட்சியில் ஏறி விட்டது. பிரிட்டன், அமெரிக்கா என உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்துக்கான அரசியல் வேகமாக படர்ந்து கொண்டிருந்த நேரம். உழைக்கும் வர்க்க அரசியலுக்கு எதிராக பாசிசமும் ஆளும் வர்க்கங்களால் முடிக்கி விடப்பட்டிருந்தச் சூழல். இரண்டும் ஒரே நேரத்தில் பிர்மிங்காமுக்குள் வருகிறது.

சங்கம் வைத்து உழைக்கும் மக்களை அரசியலாக்கும் தங்கையின் காதலனை ஷெல்பி கேலி பேசுகிறான். எனினும் அவனுக்குள்ளே ஓர் ஓரத்தில் உழைக்கும் வர்க்கப் பிரதிநிதியாகவே தன்னை அவதானிக்கிறான். அவன் மட்டுமின்றி, பீக்கி ப்ளைண்டர்ஸின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சமத்துவம் பேசுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள்!

அடா, பாலி போன்ற பெண் குடும்ப உறுப்பினர்கள் பிற (உயர்) வர்க்கக் குடும்பப் பெண்களைப் போல் ஆண் அதிகாரத்தின் கைப்பாவைகளாக இல்லை. ஆண் அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறார்கள். இணை அதிகாரம் கட்டுகிறார்கள். ஒரு காட்சியில் பீக்கி ப்ளைண்டர்ஸ் குழு இன்னொரு குழுவுடன் எதிரெதிரே நின்று சுட்டுக் கொள்ளும் தருணத்தில் அடா தன் கைக்குழந்தையுடன் குறுக்கே வந்து, ‘இங்கு யார் கொல்லப்பட்டாலும் ஒரு குழந்தை தகப்பனை இழக்கும்’ என வாதிடுகிறாள்.

ஜிப்ஸி இனக்குழு என்பதாலேயே சமூக அதிகாரம் நிராகரிக்கப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ தொடர் அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது.

குதிரைப்பந்தயத்தில் பணம் ஈட்டும் சிறு அளவு தாதாவாக இருக்கும் ஷெல்பி, காவலர்களின் ஒடுக்குமுறையைத் தாண்ட வணிகனாக முயலுகிறான். கடத்தல் வேலைகளை செய்து பணமீட்டி, பெரு வணிகனாக லண்டனுக்கு செல்கையில் ஒரு நட்சத்திர விடுதியில் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தொடர்ந்து அவன் செய்யும் வணிகம் பிற உயர் வர்க்க வணிகர்களாலும் அவர்தம் அரசியல் செல்வாக்காலும் ஓரம் கட்டப்பட்டு ஒடுக்கப்படுகிறது. சமூகத்தில் ஒரு பெரு வணிகனாக நிச்சயமான இடத்தை அடைய வேண்டுமெனில் அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என ஷெல்பி புரிந்து கொள்கிறான். பிரிட்டனின் தொழிலாளர் கட்சிப் பிரதிநிதியாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பிரிட்டனின் பாராளுமன்றத்திலும் கட்சியிலும் கூட அவர் ஒதுக்கப்படுகிறார். இறுதியில் தன் வணிகம், வாழ்க்கை, குடும்பம் எல்லாவற்றையும் காக்க பாசிசத்தை நோக்கி அவர் ஓட வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்படுகிறது.

ஜெர்மனியில் அதிகாரமேறிய ஹிட்லரின் தாக்கம் பிரிட்டனுக்கும் விரிவடைகிறது. யூத வெறுப்பு, வெள்ளையின ஆதிக்கம் ஆகியவற்றைப் போதிக்கும் அரசியலுக்கு ஏதுவானவற்றை செய்து கொடுக்கும் இடத்தை அடைகிறான் ஷெல்பி. அதுவரை அவன் இருந்து, வாழ்ந்து, பழகிய வாழ்க்கையின் குரூரத்தைக் காட்டிலும், ஏன் அவன் அறிந்த குரூரங்களைக் காட்டிலும், பாசிசம் பெருங்குரூரமாக இருக்கிறது. குடும்பம், உறவு, மனிதம் என எல்லாவற்றையும் மறுத்துக் மனிதமின்மையின் கொழுப்புக் கட்டியாக பாசிசம் இருக்கிறது. அதற்குள் இருக்கும் போது ஷெல்பி தடுமாறுகிறான். மூச்சு முட்டுகிறது. பெரும் அருவருப்புகளின் தொகுப்பாக அது இருக்கிறது. அவனுக்குள் இருக்கும் உழைக்கும் வர்க்கப் பிரதிநிதி துணுக்குற்றுக் கொண்டே இருக்கிறான்.

இச்சூழலில்தான் பீக்கி ப்ளைண்டர்ஸ் 6ம் சீசன் வெளியாக இருக்கிறது. உலகெங்கும் வலதுசாரியமும் பாசிசமும் பரவிக் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தை பீக்கி ப்ளைண்டர்ஸ் காலத்துடன் எளிதாக ஒப்பிட்டுப் பார்க்கும் உலகச் சமூகம் ஷெல்பி என்ன முடிவுக்கு வந்தான் என்பதைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

ஜூன் 10ம் தேதி ஷெல்பி தன் முடிவை அறிவிக்கவிருக்கிறான்.

தவற விட்டுவிடாதீர்கள்!

Also Read: ‘3% இருக்குப் பார்த்துக்கோங்கோ..’ : பரபரப்பாக பேசப்படும் ‘குத்துக்கு பத்து’ - எப்படி இருக்கிறது?