Cinema

“மத நல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடும்” : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு தடை விதித்த சிங்கப்பூர் அரசு!

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகி பெரும் விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப்படம் சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்களால் பாராட்டப்பட்ட இந்தப்படம் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 1990களில் காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் முஸ்லிம்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காகவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறி அப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.

இந்த படத்தை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு, அதை அனுமதிக்ககோரி சிங்கப்பூர் அரசிடம் விண்ணப்பித்தது. இந்த நிலையில், இந்தப்படம் சிங்கப்பூரின் திரைப்பட வழிகாட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் இந்த படத்தை வெளியிட அனுமதி அளிக்க முடியாது என Infocomm Media Development Authority கலாச்சார சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம், ஒரு தரப்பினரை ஆத்திரமூட்டும் வகையிலும், ஒருதலைப்பட்சமாகவும் சித்தரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை வளர்க்கு வகையில் உள்ளது. அதனால், இது சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடும் என்பதால் தடைவிதித்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் ஆளும் கட்சியால் விளம்பரப்படுத்தப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம், சிங்கப்பூர் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். சசி தரூரின் இந்த பதிவு ஏமாற்றம் அளிப்பதாக இந்து ஆர்வலர் சுஷில் பண்டிட் தெரிவித்துள்ளார். இந்தப்படம் ஒரு சமூகத்தினருக்கு மகிழ்ச்சியையும், இன்னொரு சமூகத்தினருக்கு எரிச்சலூட்டும் விதமாகவும் அமைந்துள்ளாதால் படத்தை வெளியிட மற்ற நாடுகளும் யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1990ல் நடந்தது ஆளுநர் ஆட்சி.. ‘The Kashmir Files’ அப்பட்டமான பொய் - விளாசிய முன்னாள் முதல்வர்!