Cinema

'கடைசி விவசாயி' திரைப்படம் எப்படி இருக்கிறது? - என்ன சொல்ல வருகிறது?

கடைசி விவசாயி படம் எப்படி இருக்கிறது?

ஒரு கிராமத்தில் இருக்கும் வயதான விவசாயி மாயாண்டி. வயது 80-களில் இருக்கும். ஒற்றையாய் வீட்டுக்குள் வசித்து வருகிறார். விவசாயம் மட்டுமே வாழ்க்கை. வறட்சியில் இருக்கும் ஊரில் இடி விழுந்து ஒரு மரம் கருகுகிறது. தெய்வக் குத்தம் என நினைத்து குலதெய்வத்துக்கு திருவிழா எடுக்க முடிவு செய்யப்படுகிறது. குலதெய்வத்துக்கான நெல்லை மாயாண்டி கொடுக்க வேண்டுமென ஊர்க்காரர்கள் வேண்டுகின்றனர். அவரும் சம்மதித்து நெல் விதைக்கிறார். ஒருநாள் அவரின் வயலுக்கு அருகே இரு மயில்கள் இறந்துக் கிடக்கின்றன. அவற்றை எடுத்துச் சென்று அருகே புதைக்கிறார். அதை ஒருவர் பார்த்து புகார் கொடுக்க, காவல்துறை வந்து மாயாண்டியைக் கைது செய்கிறது. கொன்று புதைத்ததாக பொய்க் குற்றச்சாட்டு பதிகிறது. நீர் பாய்ச்சுவது முதலிய வேளாண் வேலைகளை செய்ய முடியவில்லை என்கிற பதைபதைப்பு முதியவருக்கு.

நீதிமன்றம் மாயாண்டி மீது பொய்க் குற்றச்சாட்டு பதியப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறது. பெண் நீதிபதி காவலர்களை வழக்கு முடிப்பதற்கான கோப்புகளை தயார் செய்யச் சொல்கிறார். அதுவரை முதியவரை ரிமாண்ட் செய்கிறார். விளைச்சலைப் பற்றி முதியவர் சொன்னதும் ஒரு கான்ஸ்டபிளை நீர்ப்பாய்ச்சவும் பயிர்களைப் பார்த்துக் கொள்ளவும் உத்தரவிடுகிறார் நீதிபதி.

இவற்றுக்கிடையே காதலியை இழந்துவிட்டு, காதலி இருப்பதாக நம்பிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றும் முருக பக்தனாக ராமய்யா வருகிறான் (விஜய் சேதுபதி). முதியவரும் ராமய்யாவும் மிகுந்த நெருக்கம் கொண்டவர்கள். முதியவர் கைது செய்யப்பட்ட தகவல் ராமய்யாவுக்கு தெரியவில்லை.

கோப்புகள் தயாராகாமல் இன்னொரு 15 நாட்களுக்கு முதியவர் ரிமாண்டில் இருக்கிறார். ஊர்க்கார இளைஞர்கள் பயிரை பராமரிக்கிறார்கள். அவ்வப்போது பராமரிப்புக்கான யோசனைகளை முதியவரிடம் கேட்கின்றனர். பயிரின் முனை கருகாமல் இருக்க நிலவேம்பும் பிற மூலிகைகளும் கலந்த நீரைத் தெளிக்கச் சொல்கிறார் முதியவர். நிலவேம்பு மட்டும் கிடைக்கவில்லை. இருந்த ஒற்றை மரமும் டெங்கு வந்தபோது வெட்டப்பட்டு விட்டது. பராமரிக்கும் இளைஞன் முருகனிடம் தீர்வு கேட்கப் பழனிக்குச் செல்கிறான். இன்னொரு இளைஞன் காலாவதியான செயற்கை மருந்தை வாங்கி வந்து பயிருக்குத் தெளிக்கிறான். முதியவரின் வழக்கு என்னவானது, பயிர் என்னவானது என்பதே மிச்சக்கதை!

இப்படத்தை இயக்கியவர் மணிகண்டன். இதற்கு முன் காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை போன்றப் படங்களை இயக்கியவர்.

கடைசி விவசாயி படத்தைப் பொறுத்தவரை பெயருக்கேற்ப விவசாய வாழ்க்கையைப் படம் முன்வைக்கிறது. ஆனால் சத்தமான ‘பஞ்ச்’ வசனங்கள், கேவல்கள், உணர்ச்சி வயப்படும் காட்சிகள் எல்லாம் இல்லை. மிக எளிமையாக ஒரு கதையை இயக்குநர் முன்வைக்கிறார்.

படத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விவசாயத்தைப் பொருட்படுத்தாமல் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபடுவோரும் கார்ப்பரேட் உரம் மற்றும் விதைகள் விற்பவரும் முக்கியமான விமர்சனங்களுக்குப் படத்தில் உள்ளாகின்றனர். எனினும் படம் இவை எதையும் பற்றி அல்ல.

விவசாயம் என்பது அதனளவில் ஒரு பொருளாதாரத்தையும் வாழ்க்கை இயங்கியலும் உருவாக்கியிருக்கிறது. நாம் இன்றும் பயன்படுத்தும் ‘பண்பாடு’ என்கிற வார்த்தைக்கான மூலச்சொல் ‘பண் படுத்துதல்’ என்கிற அர்த்தத்திலிருந்தே உருவானது. எனவே விவசாயம் இருக்கும் இடத்தில் அது சார்ந்த பொருளாதாரமும் அது உருவாக்கும் வாழ்க்கை முறையும் இரண்டும் சேர்த்து உருவாக்கும் வழிபாடும் என ஒரு விவசாயச் சமூக இயங்குதளத்தை இப்படம் நம் முன் நிறுத்துகிறது.

ஓர் ஊரில் திருவிழா நடக்க விவசாயம் தேவைப்படுகிறது. விவசாயம் நடக்கவும் திருவிழா தேவைப்படுகிறது. முருகக் கடவுள் விவசாயத்துக்கான உருவகமாகவும் பழங்குடி வாழ்வின் அடையாளமாகவும் காட்டப்படுகிறார். மயில் முதலான எல்லா உயிரினங்களும் இறந்ததும் புதைக்கப்பட்டு வழிபடும் மரபின் நினைவு மீட்கப்படுகிறது. இத்தகைய ஒரு விவசாயக் கலாசாரச் சூழலை புரிந்து கொள்ளாமல் அரசு அதற்குள் தலையிட்டு சிதைக்கிறது.

இறுதியில் அரசே தலையிட்டு விவசாயத்தைச் செய்வதாக படம் முடிகிறது.

சாதியற்ற அல்லது சாதி சமத்துவம் பேசுகிற இத்தகைய ஒரு கிராமம் நிச்சயமாகக் கற்பனைதான். குறிப்பாக குறிப்பிட்ட சாதியினராக காட்டப்படும் ஊர் மக்கள் எந்தவொரு பிணக்குக்கும் உள்ளாகாமல் இருக்கிறார்கள் என்பதை நம்புவது மிகச் சிரமமான விஷயமாக இருக்கிறது. அவர்களின் குணமாக ஒன்றே ஒன்றுதான் சிறிய அளவில் பதிவாகி இருக்கிறது. அரசு மற்றும் அதன் நியமங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அலட்சியம்! அதே போல மாயாண்டியை இறுதியில் கையெழுத்து போடச் சொல்லி, அவர் கைரேகை வைத்து, ரேகையில் பதிந்த மையை அவர் போக்கத் தொடர்ந்து தேய்ப்பது ஒரு பெரும் வரலாற்று நினைவிலிருந்து தப்பிப் போதல்.

விவசாயத்தை கைவிட்டுவிட்டு, நிலத்தை விற்று, அந்தக் காசில் யானையை வாங்கி அதைப் பிச்சை எடுக்க வைத்து வாழும் யோகிபாபுவைக் கொண்டு சில மாதங்களுக்கு முன் வரை விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய முடியாதென மார்த்தட்டிக் கொண்டிருந்த இந்திய ஒன்றிய அரசாக அவதானித்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் சாதியெல்லாம் கடந்து அரசின் உண்மையான அக்கறையுடன் விவசாயம் அதன் கலாச்சாரத்தோடு மீட்டெடுக்கப்பட வேண்டுமென விரும்புகிறார் ‘கடைசி விவசாயி’.

Also Read: ’இயக்குநர் மணிகண்டனை கொண்டாட வேண்டும்’ : 'கடைசி விவசாயி' படம் பார்த்து கண்ணீர் விட்ட மிஷ்கின்!