Cinema

OTT தளங்களிலும் பொய்ப் பிரசாரம் செய்யும் பா.ஜ.க... ‘Delhi Crime’ சீரிஸின் உள் அரசியல் என்ன?

சினிமா சிறந்த பிரச்சார ஊடகம். அதற்குள் சொல்லப்படும் விஷயங்கள் யாவும் நேரடியாக நம் மனங்களை ஊடுருவி மூளைகளில் பதிவாகின்றன. பிற எந்த விஷயங்களுக்கும் நாம் பகுத்தறிவை பயன்படுத்தி கேள்விகள் கேட்டு, சரிபார்த்து, மனதில் தகவலைப் பதிவு செய்வோம். சினிமாவில் அதற்கு வாய்ப்புக் கிடையாது.

சினிமா மற்றும் காட்சி ஊடகங்களின் வலிமையை சரியாகப் புரிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தொடர்ச்சியாக தன்னுடைய பிரச்சாரத்தை சினிமா மற்றும் காட்சி ஊடகங்களின் வழியாக செய்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட Kashmir Files படத்தில் திரிக்கப்பட்ட உண்மையை பயன்படுத்தி தனக்கான இஸ்லாமிய துவேஷத்தை மக்கள் மத்தியில் அக்கட்சி செய்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். சினிமா மட்டுமின்றி ஓடிடி தளங்களிலும் பொய்ப் பிரசாரங்களை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது என்பதை சார்ந்துதான் இப்பதிவு.

ஓட்டி தளங்களில் பலவிதக் கருத்துகள் கொண்ட தொடர்கள் வருவது உண்மை. பாஜக மற்றும் காவி அரசியலை விமர்சிக்கும் தொடர்கள் கூடப் பல இருக்கின்றன. அதனாலேயே ஓடிடி தளங்களுக்கு சென்சார் கொண்டு வர வேண்டுமென பா.ஜ.க கூக்குரலிட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. அதாவது பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துகள் ஓடிடி தளங்களில் வருவதாகவும் அதை எதிர்கொள்ளவே பா.ஜ.கவால் முடியவில்லை என்பது போலவும் திட்டமிட்டப் பரப்புரை!

அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சிக்கு பொய் பிரசாரம் செய்வது எளிதா அல்லது அதை எதிர்ப்பவர்களுக்கு எளிதா?

பா.ஜ.க ஓடிடி தளத்திலும் தன்னுடைய தகிடுதத்தத்தை இறக்கி பல நாட்களாகிறது என்பதற்கான உதாரணம்தான் Delhi Crime!

டெல்லி க்ரைம் தொடர் அடிப்படையில் நிர்பயா வன்புணர்வைக் கையாளும் தொடர். நிர்பயாவின் மரணத்தையே காங்கிரஸ்ஸுக்கு எதிரான தனது பிரசாரமாக பா.ஜ.க மாற்றிய நிகழ்வுகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. பிறகு பா.ஜ.க ஆட்சியேறிய பிறகு நடந்த உன்னாவ் வன்புணர்வு சம்பவம், சிறுமி ஆசிஃபா வன்புணர்வு சம்பவம் ஆகியவற்றிலெல்லாம் அக்கட்சி வெட்கமே இன்றி குற்றவாளியின் பக்கம் நின்ற காட்சிகளையும் பார்த்தோம்.

ஆனாலும் வெட்கமில்லை. மீண்டும் டெல்லி க்ரைமில் புரட்டையும் தன் அரசியலையும்தான் சொல்லி இருக்கிறது.

தில்லியில் ஒரு கடமை தவறாத கண்ணியமான பெண் போலீஸ் அதிகாரி. அவரின் மகள் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பு கொடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டுபவள். அச்சமயத்தில் சாலையோரத்தில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் குற்றுயிரும் குலையுயிருமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். நிர்பயா!

பிறகு என்ன நடந்தது என்பதை அந்தப் பெண் போலீஸ் அதிகாரி துப்பறிந்து குற்றவாளிகளை கைது செய்வதுதான் கதை!

இதில் பிரச்சாரம் எங்கே வந்தது?

இருக்கிறது.

நிர்பயா சம்பவம் நடந்தபோது தில்லியின் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. தில்லியின் முதல்வர் நிர்பயா பிரச்சினைக்குக் காரணம் காவல்துறையின் அலட்சியம்தான் என அரசியல் செய்வது போல் தொடரில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமையை ஆற்று ஆற்றென ஆற்றும் தன்னலம் பாராத காவல்துறையை அரசியல்வாதிகள்தான் குறை கூறுகிறார்கள் என்கிற டைப் கதை சொல்லல்!

நிர்பயா காலத்தில் மட்டுமல்ல, பிறகு வந்த கெஜ்ரிவால் ஆட்சிக்காலத்திலும் தில்லி முதல்வர் தில்லி காவல்துறையை குறை கூறினார். காரணம் ஒன்றுதான். தில்லி யூனியன் பிரதேசம். யூனியன் பிரதேசத்தின் காவல்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு யூனியன் பிரதேச காவல்துறையைப் பயன்படுத்தி யூனியன் பிரதேச அரசாங்கம் செயல்படவில்லை என்கிற சித்திரத்தை உருவாக்கலாம். அல்லது எதிர்க்கட்சி யூனியன் பிரதேச அரசாங்கம் செயல்படவில்லை எனப் பிரச்சாரம் செய்யலாம். அல்லது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு யூனியன் பிரதேச அரசின் உத்தரவுக்கு செயல்படாத காவல்துறையை யூனியன் பிரதேச முதல்வர் குறை கூறலாம். அடிப்படையில் அரசியல்ரீதியாக இருக்கும் நிர்வாகச் சிக்கல் இது.

எனவே தில்லி முதல்வர் தில்லியின் காவல்துறையை நிர்பயா பிரச்சினையில் குறை கூறியதற்குக் காரணம், அரசியல் செய்வதற்காக அல்ல. நிர்வாகச் சிக்கலை விவாதத்துக்குக் கொண்டு வருவதற்காக! ஆனால் அதை மறைத்து தில்லி முதல்வர் அரசியல் செய்வதாக/செய்ததாக சொல்லி அப்போதும் இப்போதும் பிரசாரம் செய்யும் பாஜகதான் அரசியல் செய்கிறது.

தில்லி க்ரைம் தொடரில் வரும் போலீஸ் அதிகாரியின் மகள் இப்போது பாஜக ஆட்சிக்காலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரானக் குற்றத்தைப் பார்த்திருந்தால் இந்தியாவை விட்டே சென்றிருப்பார்.

Also Read: “குதிரையும் இல்லை.. வாலும் இல்லை.. ‘குதிரைவால்’ படம் பேசும் அரசியல் இதுதான்” : சினிமா விமர்சனம்!