Cinema
‘வலிமை’ அஜித்தின் படமா? - இயக்குநரின் படமா? - எது உண்மை? : விமர்சிக்கப்படும் கருத்துகள் என்னென்ன? #Review
வலிமை எப்படி இருக்கிறது?
வலிமை படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. அஜித் ரசிகர்களே பலர் படம் நன்றாக இல்லையெனும் சூழலும் இருக்கிறது. பொதுவானவர்கள் பலர் படம் நன்றாக இருக்கும் சூழலும் நிலவுகிறது. படத்தைப் பற்றி பொதுவான வைக்கப்படும் சில கருத்துகள்:
‘இயக்குநர் அஜித் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்’
‘படத்தில் குடும்பக் காட்சிகள் இல்லாதிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’
‘பைக் ஓட்டிக் கொண்டே இருக்கிறார்கள்’
‘அஜித்துக்கு நடிப்பு வரவில்லை’
‘நல்ல ஆக்ஷன் படத்தில் செண்டிமெண்ட்கள் ஒட்டவில்லை’
கிட்டத்தட்ட படம் அஜித்துக்கான படம், இயக்குநருக்கான படம் என்ற இருமுனைகளில் விமர்சிக்கப்படும் சூழலே இருக்கிறது.
அதென்ன அஜித்துக்கான படம்?
அஜித்துக்கு என பெரும் திரளில் ரசிகர்கள் இருக்கின்றனர். அஜித்தின் தனிமனித நடத்தைக்காகவும் அவரின் ஸ்டைலுக்காகவும் எனப் பலக் காரணங்களைக் கொண்டு அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள் அவர்கள். அஜித்திடம் அவர்கள் ஏதோ எதிர்பார்ப்பதாக பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. ‘ஏதோ’ என்பது வேறு ஒன்றுமில்லை, வழக்கமாக நாயக பிம்பம் அமைந்த ஒரு நாயகனுக்கு கொடுக்கப்படும் ‘பில்ட் அப்’கள், ஆக்ஷன் காட்சிகள், குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் காட்சிகள் போன்ற கமர்ஷியல்தனங்கள்தாம்.
இரண்டாவதாக இயக்குநருக்கான படம். இயக்குநரின் படம் என்கிற சுட்டலில் நமக்கு சொல்லப்படுவது என்னவெனில், மேற்சொன்ன கமர்ஷியல்தனங்கள் ஏதுமின்றி, இயக்குநர் எழுதிய கதையின் போக்கில் மட்டுமே படத்தை எடுப்பது. அதாவது நாயக பிம்பத்துக்காக கமர்ஷியல்தனங்கள் சேர்க்காமல், கதை என்ன கேட்கிறதோ அந்த அளவுக்கான விஷயங்களை மட்டும் கொண்டு இயக்கப்படும் படத்தை இயக்குநரின் படம் என்கிறோம். மணிரத்னம், பாலா, ரஞ்சித், வெற்றிமாறன் முதலியோர் இந்த ரகத்தில் வருவார்கள். அவர்களின் படங்களில் உச்ச நாயகர்களே நடித்தாலும் கதைதான் பிரதானமான பங்கு வகிக்கும். இயக்குநர் ஹெச்.விநோத்தும் அவர்களைப் போலவே அஜித் என்ற உச்ச நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு எந்த கமர்ஷியல்தனமும் சேர்க்காமல் கதையை மட்டும் எடுத்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டப்படுகிறார்.
இரண்டு வாதங்களில் எது உண்மை? ‘வலிமை’ அஜித்தின் படமா? விநோத்தின் படமா?
‘வலிமை’ படத்துக்கு முன்பு அஜித்தை வைத்து விநோத் இயக்கிய படம் ‘நேர் கொண்ட பார்வை’. இந்திப் படமான ‘Pink’ படத்தின் தமிழ் ரீமேக். அஜித்தின் கதாபாத்திரத்தை இந்தியில் அமிதாப் ஏற்றிருந்தார். ஆனால் தமிழ் பதிப்பில் சில மாற்றங்கள் வைக்கப்பட்டன. ஓர் அடிதடி சண்டைக் காட்சி தமிழில் இடம்பெற்றது. இந்திப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை. முழுக்க முழுக்க கதையை சார்ந்தே இந்திப்படம் இயக்கப்பட்டிருந்தது. எனவே நாயகபிம்பத்துக்கான ‘கமர்ஷியல்தனம்’ என்பது அஜித்தை வைத்து ஹெச்.விநோத் இயக்கிய முதல் படத்திலேயே வந்துவிட்டது. ‘வலிமை’ படத்திலும் அத்தகைய கமர்ஷியல்தனம் தொடர்வதே இயல்பு. ஆகவே, வலிமை படத்தை இயக்குநர் படமாக அவதானிக்கும் வாய்ப்பு கிடையாது. ஏனெனில் அவர் இயக்கிய ‘தீரன்’ படத்தில் கதையின் நாயகனாக கார்த்தி இருந்தபோதும் கதையைத் தாண்டிய பெரிய அளவிலான கமர்ஷியல்தனங்கள் இல்லாமல் படத்தை விநோத் இயக்கியிருந்தார். ஆனால் ‘வலிமை’யில் கமர்ஷியல்தனங்கள் தூக்கல்!
உதாரணமாக,
படம் துவங்குகையில் பைக்கர்களின் அட்டூழியங்கள் காட்டப்படுகின்றன. மனம் நொந்து போகும் காவல்துறை அதிகாரி, ஓர் இரவு நேரத்தில் அடுக்குமாடியின் உச்சியில் சென்னையின் பெரும்பகுதி தெரியக் கூடிய பால்கனியில் நின்று ‘சென்னைக்கு உழைக்கறதுக்காக பல மக்கள் வர்றாங்க. அவங்கள காப்பாத்தறதுதான் எங்க வேலை’ என மைண்ட் வாய்ஸில் பேசி காவல்துறை கொண்டிருக்கும் நோக்கத்தை நமக்கு உணர்த்த முனைகிறார். மைண்ட் வாய்ஸ்ஸின் ஊடாக, பைக்கர்களின் கொட்டத்தை ஒடுக்க ஒரு சரியான போலீஸ் தேவை என்கிறார். ‘சரியான போலீஸ்’ என்பதற்கான இந்த பீடிகை காட்சி, எம்.ஜி.ஆர் காலத்துக் காட்சி. ஆனாலும் படத்தில் இடம்பெறுகிறது.
அந்த நேர்மையான போலீஸ் யாராக இருப்பார் என நாம் யோசிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றாலும் இயக்குநர் வைக்கும் பீடிகையை மதித்து யோசிப்பதற்குள் கதை மதுரைக்கு செல்கிறது. அங்கே சித்திரைத் திருவிழாவில் ஒரு நபர் கொல்லப்படுவதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. அந்த நபரைக் கொல்ல ஸ்கெட்ச் போடுபவர்கள் விவரமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அந்த நபரை சரியாக அவர்கள் சுற்றி வளைக்கும்போது அந்த நேர்மையான போலீஸ் தோன்றுவார் என்பது பக்கத்து தியேட்டரில் ஓடிய ஆங்கிலப் படத்தில் நடித்த துணை நடிகருக்குக் கூட தெரிந்திருக்கும். அவ்வண்ணமே நேர்மையான போலீஸ் தோன்றுகிறார். அஜித்!
கொல்ல முயற்சி எடுக்கப்பட்ட நபர் யார், ஏன் அவரைக் கொல்ல நினைத்தார்கள், அஜித் எப்படி சம்பந்தப்பட்டார் என முன் கதை, பின் கதை, பக்கவாட்டுக் கதை எல்லாம் எதுவும் இல்லை. அடித்து முடித்த பிறகு, சித்திரை திருவிழாவில் நடனக் கலைஞர்களுடன் ஒரு பாட்டுக்குக் கஷ்டப்பட்டு அஜித் ஆடுகிறார். டான்சராக பகுதி நேர வேலை எதுவும் செய்கிறாரா என்ற விளக்கம் கூட கொடுக்கப்படவில்லை.
பிறகு ஒரு குடிகார அண்ணன், வேலை கிடக்காத தம்பி, அவமானப்படுத்தும் சம்பந்தகார வீடு, ஏழ்மையான குடும்பம், அன்பான அம்மா என ஒரு குடும்பத்தில் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறார் அஜித் குமார். ஏனென்றே தெரியாமல் கண்ணீர் விட்டுக் கொள்கிறார். அஜித்துக்கு ‘குடும்ப ஆடியன்ஸ்’ இருப்பதும் அவர்களுக்கு அவர் கருத்து சொல்ல வேண்டிய சமூகக் கட்டாயம் இருப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இவை யாவும் ‘வலிமை’ படம் கொண்டிருக்கும் ‘நாயக பிம்ப கமர்ஷியல்தனங்களில்’ சிலவைதான். இன்னும் நிறைய இருக்கின்றன. ‘வலிமை’ இயக்குநரின் படம் கிடையாது. நட்சத்திர நாயகனுக்கான படம். அதில் இயக்குநர் தன் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். நாயக பிம்பக் காட்சிகளை வைக்கச் சொல்லி அஜித் கேட்க வேண்டிய கட்டாயம் கூட இல்லை. தயாரிப்பாளர் கேட்டிருக்கலாம். இயக்குநரே ‘அஜித்தின் ரசிகர்களுக்காக’ என அத்தகைய காட்சிகள் வைத்திருக்கலாம்.
அடிப்படையில் நாயகபிம்பம் என்கிற பளுவால் படம் நொறுங்கியிருக்கிறது.
‘தீரன்’ படத்தில் பவேரியா கொள்ளைக் குழு என ஒரு புதுவகை வாழ்க்கைச் சூழலை நமக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் விநோத். அதே போல ‘வலிமை’ படத்தில் 'பைக்கர்கள்’ என ஒரு 'cult' மாதிரியான வழிபாட்டுக் குழுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அக்குழு பற்றிய காட்சிகள் சரியாக மெருகேற்றப்பட்டிருந்தால் ஆர்வத்தைத் தூண்டு விதத்தில் அமைந்திருக்கலாம். ஆனால் ஆங்கிலப் படங்களான ‘Fast & Furious', ‘Mission Impossible' போன்ற படக்காட்சிகளின் உதவியை நாடியிருக்கிறார் இயக்குநர். அதைக் காட்டிலும் பைக்கர்கள் இயங்குவதற்கு பின்னணியாக, ஆங்கிலப் படங்களில் வரும் ‘போட்டி’, ‘உளவாளி’ என்றெல்லாம் செல்லாமல் அரதப்பழசான போதை மருந்தை வைத்திருக்கிறார். அதில் Dark Web பரிவர்த்தனைகள் என்றும் சொல்கிறார்.
வில்லனை வடிவமைக்க முயன்றிருக்கும் விநோத் மீண்டும் ஆங்கிலப் படங்களை நாடியிருக்கிறார். Dark Knight படத்தின் ஜோக்கரையும் Dark Knight Rises வில்லனையும் கலந்து ஒரு வில்லனை உருவாக்கியிருக்கிறார். இரண்டு ஆங்கிலப் படங்களின் வில்லன் பாத்திர உருவாக்கமும் மிகப்பெரிய தத்துவார்த்த சித்தாந்த விவாதத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டவை. ஆதலால் அந்த பாத்திரங்களின் லாஜிக்குகளுக்குள் நம் மனம் போகாமல் விவாதத்தையே கவனிக்கும். ஆனால் ‘வலிமை’ படத்தில் தத்துவ விசாரணை எல்லாம் நடக்கவில்லை. போதைமருந்து கடத்தலுக்கு தத்துவம் வழங்க முயற்சித்திருக்கிறார்.
படத்தை தெளிவாக ஒருவர் மட்டும் புரிந்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான். படத்தைப் பார்த்துவிட்டு Dark Knight Rises படம் எனப் புரிந்ததும் எந்தவித அலட்டலுமின்றி, அப்படத்தின் இசையையே - குறிப்பாக, வில்லனை ஆராதிக்கும் Bane Anthem இசையை படத்தின் சேஸிங் காட்சிகளில் வைத்திருக்கிறார்.
‘வலிமை’ படம் நாயக பிம்ப வழிபாட்டுக்கு பலியாகி இருக்கும் மற்றுமோர் படம். அஜித்தின் படம் வெளிவந்தால் மட்டுமே போதும் என எதிர்பார்க்கும் ரசிகர்களை கொண்டு, எந்தவித அற்புதமான முயற்சியையும் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களேன தாங்களாக கற்பனை செய்து கொண்டு ‘நாயகபிம்பப் படத்தைக்’ கொடுத்து அவர்களையும் ஏமாற்றியிருக்கிறது ‘வலிமை’ படக்குழு. மேற்சொன்னக் குறைகளைத் தாண்டி படம் வசூல் செய்திருப்பதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அஜித்தைத் தவிர அஜித்தின் படத்தில் வேறெதையும் - கதை கூட - எதிர்பார்க்காத அஜித்தின் ரசிகர்களே!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!