Cinema
ஓஹ்.. நாயகன் இப்படியும் இருக்கலாமா?.. என்ன சொல்கிறது ஈரானிய திரைப்படம் A Hero?
நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவனுக்கே கிடைக்குதே’ என்கிற ’மகாநதி’ பட வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். நம் வாழ்க்கைகளிலேயே பல தருணங்களில் அந்த வசனத்தைப் பொருத்திக் கூட பார்த்திருப்போம். கிட்டத்தட்ட சமூகச் சூழலும் அதுவாகத்தான் இருக்கிறது. ‘நமக்கென’ நேராமல் இன்னொருவரின் வாழ்விலும் அதே நிலை நேர்கையில் நாம் என்னவாக அச்சூழலை அணுகுவோம்?
A Hero திரைப்படம் அதுதான்.
ஈரானியப் படங்கள் எப்போதுமே திரைப்படத் தரத்துக்கு பெயர் பெற்றவை. மிக எளியச் செலவில் வலிமையான மனித உணர்வுகளை வெகு யதார்த்தத்துடன் சொல்லக் கூடியவை ஈரானியப் படங்கள்.
Children of heaven, Song of Sparrows, Taste of cherry என ஏகப்பட்ட ஈரானியப் படங்கள் உலகத்தின் சிறந்த படங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. அத்தகைய வலுவான திரைமொழியில் வெளிவந்திருக்கும் முக்கியமான ஈரானியப் படம்தான் A Hero.
ரஹீம் சொல்தானி ஒரு கடனை அடைப்பதற்காக இரண்டு நாட்கள் விடுப்பில் சிறையிலிருந்து வெளியே வருகிறார். ரஹீமின் காதலிக்கு ஒரு பை கிடைக்கிறது. யாரோ மறந்து விட்டுச் சென்ற பை. அதற்குள் 17 தங்க நாணயங்கள் இருக்கின்றன. அதை சொல்தானியிலிடம் கொடுக்கிறாள் காதலி. நாணயங்களை விற்று கடனை அடைத்து விட நினைக்கிறான் சொல்தானி. ஆனால் தங்கத்தின் மதிப்பு குறைந்திருப்பதால் அவற்றை விற்றாலும் முழுக் கடன் அடையாது.
யோசிக்கும் சொல்தானி அந்தப் பையை உரியவரிடம் கொடுத்து விடுவது என முடிவெடுக்கிறான். பையைத் தொலைத்தவர் வந்து பையைப் பெற்றுக் கொள்கிறார். செய்தி பரவுகிறது. தொலைக்காட்சிகள் சொல்தானியைப் பேட்டி எடுக்கின்றன. அவனது தன்னலமற்ற தன்மை பெருமளவில் விதந்தோதப்படுகிறது.
அவனது கடனை அடைப்பதற்கான பணத்தை திரட்டவும் ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியதால் தான் சிரமப்படுவதாக சொல்தானி சொல்வதால், கடன் கொடுத்த பஹ்ராமுக்கு அதிருப்தி.
ஏனெனில் சொல்தானிக்கு பணத்தேவை இருக்கும்போது தன் மகளுக்கு வரதட்சணையாக இருந்தப் பணத்தை கூட யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தவர் அவர். ஆனால் அவப்பெயர் பெற்றுக் கொண்டிருந்தார். எனவே சொல்தானி நாடகம் போடுகிறானோ என எண்ணுகிறார் அவர். இவ்வளவுதான் கதை.
இதற்குள் மிக யதார்த்தமான பாத்திரங்களை மிக யதார்த்தமான மனங்களுடன் இயல்பாக உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். படத்தின் தலைப்பு ‘ஒரு நாயகன்’ என இருப்பதால், யார் அந்த நாயகன் என்றே நம் மனம் படம் தொடங்கும்போது தேடத் தொடங்குகிறது. படம் விரிந்து நகர்ந்து ஒரு புள்ளியை எட்டும்போது ‘அப்பழுக்கற்றத் தன்மையைக் கொண்டிருந்தால்தான் ஒருவன் நாயகனா’ என்கிற கேள்வி நாமறியாமல் நம் மனதுள் எழுகிறது. அதுதான் படத்தின் வெற்றி.
2021ம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. கேன்ஸ் திரைப்பட விழாவின் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை படம் பெற்றது பல திரைப்பட விழாக்களிலும் கலந்து பல விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது படம்.
படத்தை அஸ்கார் ஃபர்ஹாதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே About Elly, A Separation, The Salessman போன்ற பல புகழ்பெற்ற ஈரானியத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!