Cinema
’இன்னிசைக்கு பிரியாவிடை கொடுத்த இந்தியாவின் நைட்டிங்கேல்’ : லதா மங்கேஷ்கரின் சிறப்பும், பெற்ற கெளரவமும்!
இந்திய திரையுலகின் இசைத் துறையில் 70 ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து நைட்டிங்கேல், மெலடி ராணி போன்ற மரியாதைக்குரிய பட்டங்களை வென்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கரையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை.
கடந்த ஜனவரி 8ம் தேதி கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகளுடன் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் அண்மையில் சற்று உடல்நலம் தேரினார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் இன்று (பிப்.,06) காலை 8.12 மணியளவில் லதா மங்கேஷ்கர் காலமானார் என்ற செய்தி நாடெங்கும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தி அறிந்ததை அடுத்து பிரதமர், முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் லதா மங்கேஷ்கரின் திறமைகள் பற்றியும் இந்திய அரசு உட்பட திரையுலகம் அவருக்கு செய்த மரியாதை குறித்து அறிவோம். இந்தியாவின் மிக முக்கியமான மிகவும் மரியாதைக்குரிய பின்னணிப் பாடகிகளில் ஒருவரான லதா மங்கேஷ்கர், தேர்ந்த இசையமைப்பாளரும் ஆவார்.
36க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டு மொழிகளிலும் தனது இனியக் குரலால் பாடல்களை பாடியுள்ளார் லதா. இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்தியதை கெளரவிக்கும் வகையில் 1989ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பாடகி ஆவார்.
இதுபோக, பிரான்ஸ் அரசு அவருக்கு 2007 ஆம் ஆண்டு அரசின் உயரிய சிவிலியன் விருதான Officer of the Legion of Honor விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. மேலும், இந்தியாவின் 3 தேசிய விருதுகள், 15 பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள், சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிரிவில் நான்கும், வாழ்நாள் சாதனையாளர் மற்றும் இரண்டு சிறப்பு விருது என ஃபிலிம் ஃபர்-ல் மட்டும் இத்தனை விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சர்வதேச அளவில் 1974ம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர் ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர் லதா மங்கேஷ்கர். இசைஞானியான இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமான பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்தான். மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உடன்பிறவா சகோதரியாகவே இருந்தார் லதா மங்கேஷ்கர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 1929ம் ஆண்டு செப்டம்பர் 28ல் பிறந்த லதா மங்கேஷ்கருடன் பிறந்தவர்கள் நால்வர். அதில் மூத்தவர் லதா மங்கேஷ்கர். பாலிவுட், கோலிவுட்டில் பிரபல பாடகியாக இருக்கும் ஆஷா போஸ்லே லதாவின் சகோதரியாவார். இத்தனை பெருமைகளுக்கும் கெளரவத்துக்கும் உற்றவரான இன்னிசைக்குயில் லதா மங்கேஷ்கர் தற்போது நம்மிடத்தில் இல்லை என்பது வருந்தத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!