Cinema

பேராசை, அதிகார வெறி, வன்முறை, காதல் என தீப்பறக்கும் 'Mirzapur' - எப்படி இருக்கிறது இந்த வெப் சீரிஸ்?

Mirzapur, பலத்த வரவேற்பைப் பெற்ற இணையத் தொடர்.

உலகெங்கும் பல இணையத் தொடர்கள் வெளிவருகின்றன. அதில் பலவை நாம் பார்க்கிறோம். ரசிகர்களாகிறோம். Moneyheist, Peaky Blinders, Dark, Mindhunter, Breaking Bad என நம் மனங்களை கொள்ளை அடித்த பல உலகளாவிய இணையத் தொடர்கள் இருக்கின்றன. எனினும் இந்தியாவில் வரும் பெரும்பாலான இணையத் தொடர்களில் உலகளாவிய தொடர்களின் நேர்த்தியும் கதை சொல்லலும் நமக்குக் கிட்டவில்லை.

உலகுக்கே கதை சொன்ன இலக்கியங்களும் பெரும் சினிமா சந்தையும் இருந்தபோதும் இணையத் தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கியே இருக்கிறது. வெகு சில இந்திய இணையத் தொடர்கள் மட்டும்தான் ஓரளவுக்கேனும் புதுவகை கதை சொல்லல்களைக் கொண்டு பரவலான வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மிர்சாபூர் இணையத் தொடரும்.

உத்தர பிரதேசத்தில் இருக்கும் பகுதிதான் மிர்சாபூர். அரசியலுக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியத்துக்கும் உத்தர பிரதேசம் ஏற்கனவே பெயர் பெற்றது. அங்கிருக்கும் ஒரு பகுதியைக் களமாக கொண்டிருப்பதே மிர்சாபூரை நோக்கி நமக்கு ஏற்படும் ஈர்ப்புக்கு முதற்காரணமாக இருக்கிறது.

மிர்சாபூரில் இருக்கும் தொழிலதிபர் அகண்டானந்த் திரிபாதி. கம்பளம் ஏற்றுமதி செய்யும் வணிகம் செய்பவன். ஊருக்குள் அவன் பிரபலம். நல்லவன் என்பதால் அவன் பிரபலமாக இருக்கவில்லை, அவன் கட்டியெழுப்பியிருக்கும் நிழலுலகமே அவனது பிரபலத்துக்குக் காரணம். துப்பாக்கிகளுக்கான கள்ளச் சந்தையை அவன் நடத்துகிறான். அரசியல்வாதி தொடங்கி உள்ளூர் ரவுடி வரை அனைவரிடமும் அவனது துப்பாக்கி புழங்குமளவுக்கு செல்வாக்கு கொண்டவன். இயல்பாகவே அரசியல்ரீதியான தொடர்புகளும் அவனுக்கு இருக்கிறது. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் முன்னா.

ஊருக்குள் தாதாவாக இருப்பவரின் மகன் என்பதாலேயே முன்னா ஒரு முட்டாள் முரடனாக இருக்கிறான். ஊருக்குள் சண்டியர்த்தனம் பல செய்கிறான். திரிபாதிக்கு மகன் மீது பெரிய நம்பிக்கை கிடையாது. அத்தகைய சூழலில் முன்னா ஒரு வம்பை விலைக்கு வாங்குகிறான்.

முன்னா செய்யும் ஒரு சம்பவத்தால் நேர்மையான வழக்கறிஞரான ராமகாந்த் பண்டிட் அவனுடன் மோத நேர்கிறது. வழக்கமான தன்னுடைய முரட்டுத்தனத்தில் அவரை முன்னா, மிரட்டப் போக, வழக்கறிஞரின் இரு மகன்களும் அவனை எதிர்த்து விரட்டுகின்றனர்.

குட்டுவும் பப்லுவும்தான் வழக்கறிஞரின் இரு மகன்கள். பப்லு சமயோசிதமானவன். எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்துச் செயல்படுபவன். குட்டு அப்படி கிடையாது. செயல்பட்டுவிட்டு நிதானமடைந்து யோசிப்பவன். அவர்கள் இருவரும்தான் முன்னாவை எதிர்த்து நிற்கின்றனர்.

முன்னாவின் அடியாட்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்து அகண்டானந்த் முன்னால் போடுகின்றனர். அவர் இருவரையும் அழைத்து சாப்பாடு போடுகிறார். முன்னாவின் முட்டாள்தனத்தை கடிந்து கொள்கிறார். இருவருக்கும் வேலை போட்டுக் கொடுக்கக் கேட்கிறார். அவர்களும் சம்மதிக்கின்றனர். இருவரின் அப்பாவுக்கும் அவர்கள் சம்மதித்ததில் பெரும் கோபம். ஆனால் அவர்கள் அவரைப் பொருட்படுத்தவில்லை. அகண்டானந்துடன் தொடர்கிறார்கள்.

ஒரு தாதா, அவருக்குப் பிடிக்காத மகன், மகனுக்குப் பிடிக்காத இருவர், இருவரைப் பிடிக்காத அப்பா என உருவாகும் பாத்திரங்கள் பேராசை, பதவி, வன்முறை, காதல் என்ற உணர்வுகளினூடாகப் பயணிக்கின்றன.

நாம் பார்த்த Godfather முதலிய பல நிழலுலகப் படங்களைப் போன்ற கதைதான் என்றாலும் இத்தொடரில் தாதாவின் குடும்பத்துக்குள் நடக்கும் அதிகார விளையாட்டு நமக்கு புதிது. அகண்டானந்தின் மனைவி, மாமனார், வேலைக்காரன், வேலைக்காரி, நம்பிக்கைக்குரிய ஏவலாள் எனக் காமத்தை அதிகாரத்துக்கான வழியாக குடும்ப உறவுகளிடையே இழையோட விட்டிருப்பது தொடரை தனித்தன்மை கொண்டதாக்குகிறது. கூடவே உத்தர பிரதேச கலாசார பின்புலம், சாதிய முறைகள், அரசியல் எல்லாம் கலக்கையில் ஒரு புதுவித வார்ப்பாக மிர்சாபூர் உருவாகி நமக்கு பிரமிப்பைக் கொடுக்கிறது.

திரைக்கதையில் பார்த்த காட்சிகள் எதுவும் இல்லை. அகண்டானந்தாக நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதி டான் கார்லியோன் போல மிக அடக்கமாக பேசினாலும் மிரட்டலான நடிப்பை வழங்குகிறார். முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம் தீ பறக்கிறது. தொடரின் இரண்டாம் பாகமும் வந்திருக்கிறது. முதல் பாகத்தைப் போல் இல்லையென்றாலும் அலுப்புத் தட்டவில்லை. இசை அற்புதம்.

இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் உருப்படியான இணையத் தொடர்களில் ஒன்றான மிர்சாபூரை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

Also Read: மனிதத்தை நோக்கிய மாற்றம்.. பேராசையும் அதிகாரமும் செய்யும் ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டிய ‘Platform’ படம் !