Cinema

சாதி அதிகார வெறியை முற்பிறவி என்கிற புனைவைக் கொண்டு பேசியிருக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்' - படம் எப்படி?

2021 டிசம்பர் 24 அன்று வெளியான தெலுங்குப் படம் ஷ்யாம் சிங்கா ராய்! சமூகதளங்களில் பரவலான பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றிருக்கும் இப்படம் மிக முக்கியமான களத்தைப் பேசியிருக்கிறது.

கதையின் நாயகனான வாசு சினிமா இயக்கும் ஆசையில் இருப்பவன். வாசுவின் வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும் சினிமாவுக்கான நுழைவுச்சீட்டாக ஒரு குறும்படம் இயக்க முயலுகிறான். குறும்படத்துக்கான நாயகியைத் தேடுகிறான். பல கட்டங்களை கடந்து இறுதியில் கீர்த்தியை சந்திக்கிறான். ஆனால் அவளுக்கு நடிப்பில் விருப்பமில்லை. வாசு விடுவதாக இல்லை. கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக ஒப்புக் கொள்ள வைக்கிறான். குறும்பட உருவாக்கம் தொடங்குகிறது. இடையில் படப்பதிவின்போது கீர்த்தியை சில ரவுடிகள் சீண்டுகின்றனர். அச்சமயத்தில் திடுமென அவன் வேறொரு நபராகி அவர்களை துவைக்கிறான். கீர்த்திக்கு வாசு மீது நல்லெண்ணம் ஏற்படுகிறது. குறும்படப்பதிவு முடிகிறது. தயாரிப்பாளருக்கு குறும்படம் பிடித்துவிடுகிறது. சினிமா வாய்ப்பு வழங்குகிறார்.

சினிமாவுக்கான திரைக்கதை எழுதுகிறான் வாசு. வாசுவுக்கும் கீர்த்திக்கும் காதல் அரும்புகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் திடீரென தன்னையறியாமல் ‘ரோசி’ என ஒரு பெயரைச் சொல்கிறான் வாசு. கோபப்பட்டு கீர்த்தி சென்று விடுகிறாள். திரைக்கதை முடிப்பதற்கான நாள் நெருங்குகிறது. இறுதிக்காட்சி எழுத முடியாமல் தவிக்கிறான் வாசு. அளவுக்கு மீறி மது குடிக்கிறான். திடுமென ஏதோவொரு எழுச்சியில் இறுதிக்காட்சியை சடசடவென எழுதி முடிக்கிறான். திரைப்படம் வெளியாகிறது. படம் பெரிய ஹிட்.

இந்தியில் படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு வருகிறது. இந்தித் தயாரிப்பாளருக்கு சந்தேகம். படத்தின் அறிவிப்பின்போது வாசு கைது செய்யப்படுகிறான். தெலுங்கு மற்றும் வங்க மொழிகளில் வெளியான நாவல்களின் கதையை திருடிவிட்டதாகக் குற்றச்சாட்டு. ஆனால் கதை திருடவில்லை என சாதிக்கிறான் வாசு. செல்லுபடி ஆகவில்லை. சிறைக்குச் செல்கிறான்.

காதலனுக்காக கீர்த்தி ஒரு பெண் வழக்கறிஞரை பணிக்கு அமர்த்துகிறாள். வழக்கறிஞர் சர்ச்சைக்குரிய புத்தகங்களை படித்துப் பார்க்கிறார். திரைப்படம் அப்படியே இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு வர, அங்கும் வாசு சொந்தக் கதை என சாதிக்கிறான். ஒரு வழியாக பிணை கிடைக்கிறது. வாசுவை மனதின் ஆழத்துக்கு சென்று ஆராய ஒரு மருத்துவரை அணுகுகிறாள் கீர்த்தி.

ஹிப்னாடிசம் என்கிற உத்தியின்படி, வாசுவை அரை மயக்கத்தில் செலுத்தி மனதின் ஆழத்தில் இருக்கும் விஷயங்களை சொல்லச் சொல்கிறார் மருத்துவர். ஒரு கட்டத்துக்கு மேல் அவன் ஒரு பெயரைச் சொல்கிறான்.

‘ரோசி!’

மருத்துவர் ஆச்சரியத்துடன் ‘யார் ரோசி’ எனக் கேட்க, ‘என் மனைவி’ என்கிறான் வாசு அரை மயக்கத்தில். ‘எந்த வருடம் திருமணம் நடந்தது’ எனக் கேட்க, ‘1969’ என்கிறான் வாசு.

1969-ல் வாசு பிறக்கக் கூடவில்லை. அவனுக்குள் இருப்பது முற்பிறவி நினைவு என நினைத்து, அவனது பெயர் என்ன என மருத்துவர் கேட்க, ‘ஷியாம் சிங்கா ராய்’ என்கிறான்.

ஷியாம் சிங்கா ராயின் கதை விரிகிறது.

ஷியாம் சிங்கா ராய் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன். இடதுசாரி சித்தாந்த எழுத்தாளன். சாதி எதிர்ப்பிலும் பழமை அழிப்பிலும் இயங்குபவன். அவனுக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. மைத்ரேயி! அவள் ஒரு தேவதாசி. கோவிலின் புரோகிதனான மகந்த் என்பவன் கோவில் தேவதாசிகளை தன் இச்சைக்கு பயன்படுத்துகிறான். இவற்றுக்கிடையே ஷியாம் சிங்கா ராய்க்கும் ரோசிக்கும் காதல் வளருகிறது. குடும்பம் எதிர்க்கும் என்பதால் இருவரும் கொல்கத்தாவுக்கு சென்று வாழ்வது என முடிவு செய்கின்றனர். அந்த நாளில் புரோகிதனுக்கும் ரோசிக்கும் பிரச்சினை ஏற்பட, ஷியாம் சிங்கா ராய் புரோகிதனை அடித்துக் கொல்கிறான். பிறகு இருவரும் கொல்கத்தாவுக்கு சென்று வாழ்கிறார்கள். நக்சல்பாரி இயக்கப் பத்திரிகையில் வேலை பார்க்கிறான்.

எல்லாம் சரியாக இருப்பதாக நினைக்கும் தருணத்தில், எதுவும் சரியில்லாமல் போகும் தருணம் ஏற்படுகிறது.

ஷியாம் சிங்கா ராய்க்கும் ரோசிக்கும் என்ன ஆனது, வாசுவின் வழக்கு என்னவானது என்பதே மிச்சக் கதை.

தேவதாசி வழக்கத்தையும் அதன் குரூரத்தையும் காட்டியிருக்கும் இயக்குநர், அங்கிருந்து முற்போக்கு தளத்துக்கு கதையைக் கொண்டு செல்கிறார். சாதியும் அதிகாரமும் என்னவாக இச்சமூகத்தில் ஊடுருவியிருக்கிறது என்பதை கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் இரண்டினூடாக முற்பிறவி என்கிற புனைவைக் கொண்டு பேசியிருக்கிறார். விமர்சனங்கள் பலவற்றினூடாக படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தெலுங்கு படங்களுக்கே உரிய மசாலாத்தனங்கள் இருந்தாலும் இன்றையச் சூழலில் பேசப்பட வேண்டிய கடந்த கால வரலாற்றை சுவாரஸ்யப் புனைவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Also Read: அமெரிக்காவை உலுக்கிய ‘பேய் வழக்கு’ : கொன்றது யார்? கடைசியில் நடந்தது என்ன?