Cinema
பிறந்து 6 மாதத்தில் சினிமா அறிமுகம்.. 10 வயதில் தேசிய விருது.. மறைவால் திரையுலகை துயரில் ஆழ்த்திய புனீத்!
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார். கிட்டதட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 300 சினிமா பாடல் மற்றும் 400 பக்தி பாடல்கள் பாடியுள்ளார். 1940 களில் இருந்து கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இவருந்த இவர் தனக்கு பிறந்த குழந்தையை பிறந்த 6 மாதத்தில் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். சினிமாவின் மீது அவருக்கு இருந்த காதல் அத்தகையது.
குழந்தை நட்சத்திரம் எனும் வார்த்தை சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஒன்று. அப்படியான குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் இளமைப் பருவம் அடைந்ததும் முன்னணி நடிகர்களான பலர் இத்துறையில் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் இதுபோன்று அறிமுகமானவர்கள் ஒரு 3 வயதிற்கு மேற்ப்பட்டே இருந்திருப்பர், ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னதாக பிறந்த 6 மாதத்தில் இருந்தே சினிமா வெளிச்சம் பார்த்தே வளர்ந்தவர் கைத்தட்டலின் ஆனந்தமும் விசிலடித்து கொண்டாடும் உணர்வுகளும் புரியாத வயதிலே பலரின் பாராட்டுகளை பெற்றவர்தான் புனீத் ராஜ்குமார்.
1976ல் ‘ப்ரேமடா கனிகே’ படத்தில் 6 மாத குழந்தையாக தன் அப்பாவின் பேரன்போடு சினிமாவிற்குள் வந்தவர் 1982ஆம் ஆண்டு ‘ச்சலிசுவா மொடகலு’ படத்தில் நடித்ததற்காக தனது முதல் விருதை வென்றார். அதுவும் சாதாரண விருதல்ல கன்னட ஸ்டேட் ஃபிலிம் அவார்ட் வென்றிருந்தார். அதன்பின் 1983ஆம் ஆண்டு மீண்டும் ‘எரடு நக்ஷத்ரகலு’ படத்திற்காக கன்னட ஸ்டேட் ஃபிலிம் அவார்ட் வென்றிருந்தார். இதனால் இவர் நடிக்கும் படங்கள் மீது தனி கவனம் விழத்துவங்கியது. இந்த விருதுகளின் எண்ணிக்கையும் நாளடைவில் அதிகரிக்கத் துவங்கின.
ஒரு நடிகராக மட்டுமின்றி 1981ல் இருந்து ஒரு பாடகராகவும் தன் தந்தையைப் போல் தன்னை சினிமாவில் மிளிரச் செய்துக்கொண்டார். 1981ஆம் ஆண்டு வெளியான ‘பாக்யவந்தா’ படத்தில் டி.ஜி.லிங்கப்பா இசையில் "Baana Dariyalli Soorya", "Amma Seethamma" ஆகிய பாடல்களை பாடினார் புனீத். அதனை தொடர்ந்து தனது அப்பா ராஜ்குமார் நடித்த Bhakta Prahlada, Eradu Nakshatragalu, Yarivanu ஆகிய படங்களில் இரண்டு மூன்று பாடல்கள் பாடி அசத்திருந்தார். புனீத்திற்கு சினிமாவின் மிது அதிகப்படியான ஈர்ப்பு வந்தது என்று சொல்வதை விட சினிமாவில் இருக்கும் பலருக்கு புனீத்தின் மீது ஒரு ஈர்ப்பு வர துவங்கியது. முன்பை விடவும் அதிக கவனமுடன் கதை தேர்வுகளில் ஈடுபட்டார். அதன் விலைவாக கிடைத்ததுதான் தேசிய விருது.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தேசிய விருதை வெல்ல இன்றும் பலர் போராடிக் கொண்டிருக்கும் போது சிறு வயதிலே அந்த விருதை தனதாக்கியவர் புனீத். ஆம், 1985ஆம் ஆண்டு வெளியான ‘பெட்டா ஹூவு’ படத்திற்காக குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை இவர் வென்றார். லக்ஷ்மிநாரயணன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து வெளியாகிருந்த இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக புனீத் லீட் ரோலில் நடித்திருப்பார்.
அச்சிறு வயதிலே கதையின் தேவையறிந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்திருந்த புனீத்திற்கு கிடைத்த பரிசு தான் தேசிய விருது. அதன் பின் கன்னட சினிமாவின் பல தயாரிப்பாளர்கள் புனீத் ராஜ்குமாரை தங்களின் படங்களில் கமிட் செய்ய வரிசைகட்டினர். ஆனால் தேசிய விருது வென்றதற்கு பிறகு பெரியதாக படங்களில் நடிக்க புனித் கவணம் செலுத்தவில்லை. பெற்றோரின் கட்டளைப்படி படிப்பில் கவனம் செலுத்தினார். கடைசியாக 1989ஆம் ஆண்டு ‘பரசுராம்’ எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அந்தப் படத்தில் அப்பு எனும் கதாப்பத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பின் படிப்பில் மட்டுமே முழு மூச்சாய் கவனம் செலுத்தியவர் அப்போதே முறையாக நடனத்தையும் கற்றுத்தேர்ந்தார். பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ படத்தில் அப்புவாகவே ரீ என்ட்ரியானார். ஆனால் இந்த முறை ஹீரோவாக. அடுத்தடுத்த ஆண்டுகளில் படங்கள் வரிசையாக வந்துகொண்டே இருக்க புனீத்தின் மார்கெட்டும் உயரத்துவங்கியது.
2007ஆம் ஆண்டு வெளியான ‘அரசு’ முதல் ஃபிலிம் ஃபேர் விருதை தேடித்தந்தது. தனித்துவமான நடனம் மற்றும் பாடி லேங்குவேஜ்களில் கன்னட ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டார். இவர் படங்களின் பாடல் காட்சிகள் பெரும் பாலும் ரசிகரகளை இருக்கையை விட்டு எழுந்து ஆட வைத்தது. அதனையடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியையும் விருதுகளையும் தேடித்தர புனீத் கன்னட சினிமாவின் உச்ச நடிகரானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘யுவரத்னா’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ், ட்விட்வா ஆகிய படங்களில் நடித்து வந்த இவர் தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஃபிட்னஸ் பிரியரான இவர் இன்று காலை வழக்கம்போல் தன் இல்லத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. நடிகர் புனீத் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல முகங்களின் மூலம் கன்னட ரசிகர்களை வசீகரித்து வைத்திருந்த புனீத்தின் மறைவு அவரின் குடும்பத்திற்கும் திரைத்துறையினருக்கும் மட்டுமல்ல அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் பெரும் துயரமாகவே அமைந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!