Cinema

இப்படியும் ஒரு காதல் கதை இருக்க முடியுமா? - ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘ஆமிஸ்’ திரைப்படம்!

இப்படியும் ஒரு காதல் கதை இருக்க முடியுமா என ஆச்சரியத்தை வழங்கும் படம் ஆமிஸ். அசாமிய மொழிப் படம்.

நிர்மாலி என்கிற மருத்துவருக்கும் ஆய்வுப்படிப்பு படிக்கும் சுமொனுக்கும் இடையில்தான் காதலுறுவு நேர்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் நிர்மாலி ஏற்கனவே திருமணமானவர். சுவாரஸ்யம் என்னவென்றால் இருவருக்குமான உறவு தொடங்கும் முறை. ஆமிஸ் என்கிற அசாமிய வார்த்தைக்கு அர்த்தம் ‘கறி’ ஆகும். ஆம். அசைவம்தான்.

சுமொன் வித்தியாசமான உணவுகளை தேடித் தேடி உண்ணுபவர். இன்றைய சூழலில் foodie என்கிற பெயர் பிரபலமாக இருக்கிறதல்லவா, அந்த ரகத்தைச் சேர்ந்தவர். அவரின் ஆய்வுப்படிப்புக்கான கருப்பொருளே அசைவ உணவுகள்தான். எதையோ உண்டு வயிற்றைக் கலக்கும் நண்பனுக்கு சிகிச்சைப் பார்க்க ஒருமுறை வீட்டுக்கு நிர்மாலியை அழைத்து வருகிறார் சுமொன். புதுவித அசைவ உணவை உண்டதால்தான் வயிற்றுக் கடுப்பு என தெரிந்து கொள்கிறார் நிர்மாலி. பலவித உணவுகளை தேடித் தேடி உண்பவர்கள் இருக்கும் ‘க்ளப்’பில் தான் இருப்பதாக சொல்கிறார் சுமொன். லேசாக ஆர்வம் படர, ஏதேனும் வித்தியாசமான உணவு உண்ணச் சென்றால் தன்னையும் அழைக்குமாறு சொல்கிறார் நிர்மாலி.

சுமொனும் ஆர்வமாகிறார். முதல் அசைவ உணவு வகை உண்ணும்போது நிர்மாலியை அழைத்துச் செல்கிறார். நிர்மாலிக்கும் அந்த உணவு பிடித்து விடுகிறது. அடுத்தடுத்து புது வகை உணவுகளுக்கு நிர்மாலியை அழைத்துச் செல்கிறார் சுமொன். தேடித் தேடி உணவு உண்ணும் வேட்டைத்தன்மை நிர்மாலிக்கு பிடித்து விடுகிறது. இருவரும் தொடர்ந்து பயணிக்கத் தொடங்குகின்றனர்.

நிர்மாலியின் கணவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதிகமாக வெளியூர்களில்தான் வேலை. வீட்டுக்கு வந்தாலும் மனைவியிடம் கவனம் இருக்காது. அதனால் தனிமையிலேயே உழன்று கொண்டிருப்பார் நிர்மாலி. அவருக்கு இருக்கும் ஒரு தோழியிடம் ஒரு சிக்கலான குணம் இருக்கும். தோழியும் மணமானவர்தான். எனினும் கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உறவு வைத்திருப்பார். நிர்மாலிக்கு தோழியின் நடத்தைப் பிடிக்காது. தோழியோ நிர்மாலியின் நிலை உணர்ந்து அவரும் அத்தகைய உறவை உருவாக்க ஊக்குவிப்பார். ஆனால் நிர்மாலி ஏற்க மாட்டார்.

இத்தகையச் சூழலில்தான் சுமொனின் அறிமுகம் நேர்கிறது. இருவருக்கும் பரஸ்பரம் பிடிக்கும் பொது விஷயமாகக் கறி இருக்கிறது. அதனாலேயே இருவருக்குள்ளும் அடுத்தவர் மீதான ஆர்வம் முளை விடத் தொடங்குகிறது. தோழியின் பாணியில் நிர்மாலி செல்லப் போகிறார் என நாம் ஒரு வழக்கமான ‘கள்ள உறவு’ படத்துக்கு காத்திருக்கும்போதுதான் படம் தடாலடியாக மாறுகிறது.

நிர்மாலி மீதான காதலில் உழலும் சுமொன் அதைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். ஒருநாள் ஒரு புது வகைக் கறியை சமைத்து எடுத்துச் செல்கிறார் சுமொன். நிர்மாலி ரசித்து சாப்பிடுகிறார். அந்தக் கறியின் சுவையை சிலாகித்தபடி ’என்ன கறி அது?’ என நிர்மாலி கேட்க, சுமொன் தன்னுடைய கால்சட்டையை விலக்கித் தொடையைக் காட்டுகிறார். தொடையில் கட்டு போடப்பட்டிருக்கிறது. உடனே நிர்மாலி வாந்தி எடுக்கிறார். சுமொன் நிர்மாலிக்குக் கொடுத்தது அவரின் சொந்தத் தொடையிலிருந்து அவரே வெட்டி எடுத்தக் கறி!

நிர்மாலி வாந்தி எடுத்தவுடன் கதை முடியவில்லை. மேலும் தொடர்கிறது.

இப்படியொரு தூக்கி வாரிப் போடும் கதையைக் கொண்டு மேலும் மேலும் படம் தொடர்கையில் வெவ்வேறு களங்களுக்கு நம் மனம் இழுத்துச் செல்லப்படுகிறது. காதல் என்பத் என்ன, கள்ள உறவுக்கு அடிப்படைக் காரணம் என்ன, இத்தகைய காதலுக்குள் நம் மனம் கொள்ளும் ருசி என்னவென பல கேள்விகள் மூளைக்குள் படபடக்கின்றன.

பல உலகத் திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்ட படம் ‘ஆமிஸ்’. Sony Liv ஓடிடி தளத்தில் இருக்கிறது. பாருங்கள், பார்க்க முடிகிறதா எனப் பாருங்கள்.

Also Read: இன்னும் விலகாத MH370 மர்மம்.. 239 பேரின் மரணத்திற்கு இவர்தான் காரணமா? - யார் இந்த சகாரி?