Cinema

மிஸ் பண்ணிடாதீங்க..! : ஆண்-பெண் உறவின் சூட்சுமம் சொல்லும் ‘சந்தோஷத்திண்டே ஒண்ணாம் ரகசியம்’!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உறவு கொள்ளும் திருப்பங்களும் வீழ்ச்சிகளும் உயரங்களும் எவராலும் அனுமானிக்கப்பட முடியாதவை. சூட்சுமங்கள் நிறைந்தவை. இருவருக்கும் இடையில் ஒரு வாழ்க்கை நேர்ந்து அந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்ற சூழல் அமைந்து அதில் சந்தோஷமும் வேண்டுமென விரும்பினால் அதற்கு அடிப்படைத் தேவையாக என்ன இருக்க முடியும்?

அதைத்தான் மலையாளப் படமான ‘சந்தோஷத்திண்டே ஒண்ணாம் ரகசியம்’ சொல்ல முயன்றிருக்கிறது. இப்படம் ஜூலை 2021-ல் Neestream ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் டான் பலத்தாரா.

படம் துவங்குவது ஒரு காருக்குள். மொத்தப் படமும் காருக்குள்தான் நடக்கிறது. மொத்தப்படமும் ஒரு ஷாட்தான்.

ஜிதின் மற்றும் மரியா என்கிற இரு கதாபாத்திரங்களைச் சுற்றி கதை சுழலுகிறது. மரியா ஒரு சினிமா செய்தியாளர். ஜிதின் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இருப்பவர். சிறுசிறு பாத்திரங்களில் நடித்திருப்பவர். நிலையான வருமானம் கிடையாது.

இருவரும் காதலுறவில் இருக்கின்றனர். இருவருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை. மரியாவுக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. எனவே கர்ப்பம் தரித்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்பதிலிருந்து படமும் காரும் கதையும் நகரத் தொடங்குகிறது. மருத்துவரைப் பார்க்கச் செல்லும் வரை நடப்பதுதான் கதை.

இரு வீட்டாருக்கும் காதலுறவு தெரியாது. ஜிதினின் நிலையற்ற வருமானம் ஒரு பிரச்சினை. திருமணமாகாமல் கர்ப்பமாகுதல் என்பது இன்னொரு பிரச்சினை. எல்லாமும் சேர்ந்து மரியா ஆரம்ப நிமிடங்களிலேயே ‘ஃபுல் கியரில்’ வேகமெடுக்கிறார். கர்ப்பமானதற்கு ஜிதினின் அஜாக்கிரதை உணர்வே காரணமென்கிறார். இன்னும் சரியான வருமானத்தைப் பெற முடியாத நிலையில் இருக்கும் அவரை கரித்துக் கொட்டுகிறார். பதிலுக்கு ஜிதின், வீட்டில் வேண்டுமானால் உறவை சொல்லிவிடலாம் என்கிறார். அதற்கும் திட்டு விழுகிறது. கருவை கலைத்துவிடலாமா எனக் கேட்கிறார் மரியா. ஒப்புக்கொண்டு திட்டு வாங்குகிறார். பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லி ஒரு முறை திட்டு வாங்குகிறார்.

ஜிதினின் தன்மையிலும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையிலும் மரியாவுக்கு பெரும் அதிருப்தி இருக்கிறது. அதை காட்டிக்கொண்டே வருகிறார். கர்ப்பம், திருமணம், குழந்தை என சடசடவென சுமைகள் கூட்டப்போகும் ஒரு அலட்சியம், மரியாவின் மூளைக்குள் நொடி நொடியாக கோபத்தை ஏற்றிக்கொண்டே செல்கிறது. நாம் காணும் ஆண்-பெண் முரண்கள் படத்தில் சரியாக விரிகின்றன.

இருவர் மட்டுமே இல்லாமல் விதவிதமாக பிற கதாபாத்திரங்களும் விதவிதமான வகைகளில் கதையினூடாக வந்து போகிறது. செல்ஃபோனிலேயே மரியாவுக்கு பேட்டி கொடுக்கும் ஒரு சினிமா இயக்குநர், காரில் லிஃப்ட் கேட்டு ஏறும் ஒரு பெண்மணி, மருத்துவரை பார்க்கச் சென்ற இடைவெளியில் ஜிதினிடம் செல்ஃபோனில் பேசும் ஒரு நண்பன் என அனைவருமே ஏதோவொரு வகையில் ஆண்-பெண் உறவைப் பற்றிய தங்களின் பார்வையை பதிவு செய்கின்றனர்.

விவாதமாகத் தொடங்கி, மோதலாக உச்சம் பெறும் உரையாடல் ஒரு கட்டத்தில் பேச்சே அறுந்து போகுமளவுக்கு இறுக்கம் அடைகிறது. இருவரும் பேசவில்லை என்றாலும் நாம் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன என பாவனைகளை கொண்டு அறியுமளவுக்கு கதையில் ஒன்றி விடுகிறோம்.

கதையின் போக்குக்கு இருவரும் பிரிவதற்கான சாத்தியங்களே அதிகமாக அடுக்கப்படுகிறது. ஆனால் படத்தின் இறுதியில் இருவரும் பிரியவில்லை. அதுதான் சூட்சுமம். அதுதான் ஆண்-பெண் உறவு கொண்டிருக்கும் சூட்சுமம். அதுதான் ‘சந்தோஷத்துக்கான முதலாம் ரகசியம்’.

Also Read: “சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?