Cinema

"கொங்குநாடு.. கேட்டாலே தலை சுத்துது” : நீண்ட இடைவெளிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு கிண்டல்!

தன் உடல் மொழியாலும், நகைச்சுவையாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவரின் உடல் மொழியும், பேச்சும்தான் இப்போதும் மீம் கிரியேட்டர்களுக்கு தீனியாக இருக்கிறது. நடிகர் வடிவேலு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அரசியல் பேசுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வை ஆதரித்துப் பேசினார். இதனால் நடிகர் வடிவேலுவுக்கு அ.தி.மு.க அரசு மறைமுக நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கியதால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தே வந்தார்.

இதனால், மக்களுக்கு வடிவேலுவைப் பார்ப்பதே ஒரு அதிசயம்போல் ஆகிவிட்டது. மேலும் அவ்வப்போது சில சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகட்டினார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை துவங்கிய நேரத்தில் நடிகர் வடிவேலு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில்," நீங்க எல்லாம் ஒரு வருடமாக வீட்டில் சும்மா இருந்தீங்க.. ஆனா நான் பத்து வருடம் சும்மா இருந்தேன்" என உருக்கமாகப் பேசினார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களையும் வடிவேலு சந்தித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் தி.மு.க ஆட்சியின் நடவடிக்கைகள் முதல் கொங்கு நாடு சர்ச்சைகள் வரை பல்வேறு கேள்வி கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் நடிகர் வடிவேலு தனது பாணியிலேயே பதில் அளித்தார்.

அப்போது, தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகளைப் பாராட்டினார். பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் சிறப்பான திட்டம் எனவும் நடிகர் வடிவேலு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டினார்.

தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாட்டை பிரிக்க வேண்டும் என பேச்சு உள்ளதே என கேட்டபோது, "ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கு. இவ்வளவு நாடுகளைப் பிரித்தால் அவ்வளவுதான். இதைக் கேட்கும்போதே தலை சுத்துது. தமிழ்நாடு நல்லாத்தானே இருக்கு." என தனது பாணியில் கிண்டல் அடித்துவிட்டு செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

Also Read: "நல்லா இருக்குற தமிழ்நாட்டை எதுக்கு பிரிக்கணும்?" : ரூ.5 லட்சம் கொரோனா நிதி அளித்த நடிகர் வடிவேலு பேட்டி!