Cinema

இறுதிகட்டத்தில் நானியின் பிரமாண்ட படம்.. ஒன்றிய அரசுக்கு எதிராகப் பொங்கியெழுந்த பிரபலங்கள்! #CineUpdates

இறுதிகட்டத்தை நெருங்கிய நானி நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட படம்!

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் 25வது படமான ‘வி’ நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தனது 26வது படமாக ‘டக் ஜெகதீஷ்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஒரு வரலாற்று பின்னணி உடைய கதையில் நடிக்க ஒப்பந்தமானார். ‘ஷாம் சிங்கா ராய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானியோடு சேர்ந்து சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் என மூன்று நாயகிகள் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

‘டாக்ஸிவாலா’ படத்தை இயக்கிய ராகுல் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். போன வருடம் டிசம்பர் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டது. தற்போது படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்காக ஐதராபாத்தில் கொல்கத்தா போன்று செட் அமைத்து படமாக்கி வருகின்றனர்.இது சம்மந்தமான அறிவிப்பை நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு திருத்த வரைவு சட்டத்திற்கு எதிராக பிரபலங்கள் கருத்து!

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2021-ஐ அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல" என பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகரும் தி.மு.க எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், “'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.” எனக் கண்டித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக இந்த சட்டத் திருத்த மசோதா மாறிவிடும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இன்னும் பல பிரபலங்கள் இந்த ஒளிப்பதிவு திருத்த வரைவு சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தனுஷ் பிறந்தாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்... ஷங்கர் மீதான வழக்கு ரத்து! #CineUpdates