Cinema

சினிமா தீர்ப்பாயம் கலைப்பு : “திரைத்துறைக்குச் சோகமான நாள்” என திரைத்துறையினர் கடும் கண்டனம்!

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது.

இதுவரை, தணிக்கை வாரியம் கொடுக்கும் சான்றிதழை ஏற்க முடியவில்லை என்றாலோ, படத்தின் இயக்குநரோ, படக்குழு சார்ந்தவர்களோ ஏற்க முடியாத அளவுக்கு படத்தில் மாற்றங்களை செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்தாலோ, படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு (Film Certification Appellate Tribunal) சென்று முறையிடுவார்கள்.

1983ல் அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி (ஏப்ரல் 4 முதல்) செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்துடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு இந்திப்பட இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சத்தா உட்பட பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர் விஷால் பரத்வாஜ் இது பற்றி, " திரைத்துறைக்குச் சோகமான நாள்" எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இயக்குநர் ஹன்சல் மெஹ்தா " நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா?

எவ்வளவு தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றத்தை நாடும் சக்தி இருக்கிறது? இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன அவசியம் இருக்கிறது?" என்று ட்வீட் செய்திருந்தார்.

தான் தயாரித்த ’ஹராம்கோர்’, இயக்கிய ‘உட்தா பஞ்சாப்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுக்கு முன் சென்சார் பிரச்சனைகளை தீர்ப்பாயத்தை நாடி சரி செய்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இது பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மத்திய அரசின் இந்த திடீர் முடிவு தயாரிப்பாளர்களைப் பயமுறுத்தும். ஏனென்றால் அவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை எவ்வளவு நேரத்தை விழுங்கும் என்பதை நினைத்துப் பயப்படுவார்கள். துணிச்சலான விசயங்களைப் பேச இயக்குநர்கள் தயங்குவார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுடில் சில பிரபலங்களாவது இது பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமா இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ, நடிகர்களோ இந்த நிகழ்வு பற்றி எந்தக் குரலும் எழுப்பாமல் மௌனமாக இருக்கிறார்கள்.

Also Read: ரிஷி கபூரின் வெற்றிடத்தை அமிதாப் நிரப்புவார்: மீண்டும் இணையும் ‘பிக்கு’ கூட்டணி!