Cinema
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதன் பிரதிபிம்பம் தெருக்குரல் அறிவின் ‘எஞ்சாயி எஞ்சாமி’ !
பொதுவாகவே தீயின் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு எப்போதும் இருக்கும்! கர்ணனில் நம் மனங்களையெல்லாம் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் மீண்டும் நம் மனங்களைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார்! இம்முறை மீண்டும் தான் யார் என்பதைத் தன் இசையின் வாயிலாக நிரூபித்திருக்கிறார்!
தனியிசைக்கென ஒரு தனியிடம் தமிழில் பெரிதாக உலகத் தரத்துக்கு இல்லையென்ற எண்ணம் எனக்கு எப்போதுமிருக்கும்! அப்படி இருக்கும் சில தனியிசைக் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகின் மாயையில் கலந்து காணாமல் போய்விடுகிறார்கள் எனும் நிதர்சனத்தையும் நாம் பார்த்து வருகிறோம்.
சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் செய்யும் இசைப்புரட்சி எனும் கலகக் குரலில் தன் மகளின் வாயிலாக அவர் இப்போது செய்திருக்கும் படைப்பு வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியாததொரு உணர்வை வழங்கியிருக்கிறது. என்னைக் கேட்டால் இப்பாடல் உலகத் தரத்திற்கு நம் தனியிசையை எடுத்துச் செல்லும் முதல் முயற்சியென்பேன். அதில் தோழர் அறிவின் வரிகளும் அது தாங்கியிருக்கும் மக்களின் பண்பாடும் அதை அப்படியே இசையாக்கிய சந்தோஷின் இசையும் தீயின் தீக்குரலுமே காரணம் என்றால் அது மிகையல்ல!
இவையெல்லாவற்றையும் தாண்டி அறிவும் தீயும் சேர்ந்து இந்தப் பாடல் பாடியதே ஒரு மிகப் பெரும் நகர்வாகத் தான் பார்க்கிறேன். இவர்கள் இருவரின் பின்னணியும் பார்த்தால் நான் சொல்லும் இவ்வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்குப் புரியும்! இவர்கள் இருவரையும் பாட வைத்த இடத்திலேயே சாதியம் நசுக்கப்படுகிறது!
"குக்கூ குக்கூ... தாத்தா தாத்தா களவெட்டி!
குக்கூ குக்கூ... பொந்துல யாரு மீன்கொத்தி!
குக்கூ குக்கூ... தண்ணியில் ஓடும் தவளைக்கி
குக்கூ குக்கூ... கம்பளிப்பூச்சி தங்கச்சி!"
என்று தீயின் கொஞ்சும் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போதே சிறுவயதில் கிராமங்களில் வளர்ந்த எல்லோருக்கும் தங்களை அறியாமல் ஒரு புன்னகை பூக்கும்! இப்படி நாட்டார் மக்களின் வாழ்வில் இருக்கும் ஒரு விளையாட்டுக் கூறை எடுத்துப் பாடல் இயற்றிய இடத்திலேயே அறிவின் அறிவு என்னை ஈர்க்கிறது. மக்களின் உணர்வுகளிலும் வாழ்வியலிலும் இருந்து வரும் செயற்கைத்தனமில்லா வரிகளுக்கு எப்போதும் வரலாற்றில் தனியிடமுண்டு!
அல்லி மலர் கொடி அங்கதமே!
ஒட்டார ஒட்டார சந்தனமே!
முல்லை மலர்க்கொடி முத்தாரமே!
எங்கூரு எங்கூரு குத்தாலமே! என்ற வரியில் எங்கூரு எனும் வழக்குச் சொல்லை தீ உச்சரிக்கும் போது அடடா அவளுக்காகவே இந்த வரி எழுதியது போல் இருக்கும்!
"அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி!" என்ற வரியைக் கேட்கும் போது
"அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக் கிளை!
ஒத்தக் கிளி நின்னாக் கூட
கத்தும் பாரு அவன் பேர!" என்று கர்ணன் பெயர் சொல்லும் அந்தக் கிளியைத் தான் தீ பாடுகிறாரோ என்ற எண்ணம் எழுகிறது!
"நல்லபடி வாழச் சொல்லி இந்த மண்ணக் குடுத்தானே பூர்வக்குடி!
கம்மங்கரை காணியெல்லாம் பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி!
நாயி நரி பூனைக்குந்தான் இந்த ஏரி குளங்கூட சொந்தமடி!"
எனும் வரிகள் தாங்கியிருக்கும் வரலாற்றை அத்தனை எளிதில் கடந்துபோய்விட முடியாது நல்லபடி வாழச் சொல்லி நமக்கு இந்த மண்ணைக் கொடுத்தப் பூர்வக்குடியை இன்றைக்கு நாம் எப்படி நடத்துகிறோம்? கம்மங்கரையெல்லாம் பாடித் திரிந்த அந்த ஆதிக்குடியை நாம் எப்படி இன்றைக்கு அடக்குமுறையால் அகற்றியிருக்கிறோம்! அவன் வாழும் போது இந்த ஏரியும் காடும் குளமும் உலகும், நாய்க்கும் பூனைக்கும் சொந்தமென்பதை உணர்ந்து வாழ்ந்திருக்கிறான் எனும் அறிவின் வரி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் வள்ளுவனின் பிரதிபிம்பம் தானே!
இன்றைக்கு நாம் அந்த ஆதிக்குடியையும் பூர்வக்குடியையும் அவன் இடத்தை விட்டு இடம்பெயரச் சொல்லிவிட்டு அவன் பாதுகாத்த இயற்கையைக் குத்திக் கொலை செய்து கொண்டு தானே இருக்கிறோம்! இந்தப் பாடல் முழுதும் அந்த ஆதிக்குடியின் சாயல் தான் எனக்குப் பட்டது இடையிடையே வரும் குலவையும் எஞ்சாயி எஞ்சாமி எனும் சொற்களும் பழங்குடி மக்களின் வழக்காற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களே அந்த உணர்வை அப்படியே தீயின் குரலும் அறிவின் வரியும் சந்தோஷின் இசையும் நமக்குக் கடத்துகிறது!
"எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி!
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி!"
என்பது மழை பொழிந்து செழிப்பாய் இருக்கும் போது இயற்கையை வேண்டி பழங்குடிகள் பாடும் மும்மாரி பொழிந்ததற்கான நன்றி தெரிவித்தல்!
"குக்கூ குக்கூ முட்டையப் போடும் கோழிக்கு!
குக்கூ குக்கூ ஒப்பணை யாரு மயிலுக்கு?
குக்கூ குக்கூ பச்சையப் பூசும் பாசிக்கு!
குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு!"
இதில் தீ, 'ஒப்பணை யாரு மயிலுக்கு' எனக் கேட்கும் இடத்தில் தேன் குழைத்த பலாவின் இனிமையாய் அடடா இவள் குரல் ஒரு மாயவலை என்பது போல் இருக்கும்!
"பாடுபட்ட மக்கா! வரப்பு மேட்டுக்காரா!
வேர்வத்தண்ணி சொக்கா! மினுக்கும் நாட்டுக்காரா!
ஆத்தாடிக் கருப்பட்டி ஊதாங்கோளு மண்ணுக்கட்டி!
ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரிகம்!
சஞ்சனச் சனக்குச் சக்க மக்களே!"
இந்த வரிகள் வேர்வை சிந்தி உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பேசினாலும், இதில் என்னைக் கவர்ந்தது 'ஆத்தாடிக் கருப்பட்டி' என்ற வரி தான்! தமிழர் பண்பாட்டில் கருப்பட்டி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாகவே இருந்திருக்கிறது! ஒரு பார்ப்பானிடம் கருப்பட்டிக் காப்பியைக் கொடுத்துப் பாருங்கள் அவன் குடிக்க மாட்டான்! ஏனெனில் கீழ்ச்சாதியினராகக் கருதப்படுபவர்கள் தம் கையால் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால் அதை அவர்கள் விரும்புவதில்லை! இன்னமும் பனங்கிழங்கை அவர்கள் உண்ணாமல் இருப்பதற்குக் காரணம் பூமிக்குக் கீழே விளையும் பொருளைச் சூத்திரனும் பன்றியும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று தானே! இப்படித் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ அறிவு எழுதிய வரியின் ஆழம் அவர் அறிவாரோ இல்லையோ நானறிவேன்!
அடுத்து தான் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!
"நான் அஞ்சு மரம் வளத்தேன்!
அழகான தோட்டம் வச்சேன்! தோட்டம் செழிச்சாலும்! என் தொண்டை..."
எனக் கிழவியின் குரல் பாட அதனோடு சேர்ந்து
"கடலே! கரையே! மனமே! குணமே! நிலமே! குளமே! இடமே! தடமே!" என்று தீயின் குரலைக் கேட்கும் போது அவள் பாடும் கடலும், கரையும், மனமும், குணமும், இடமும் எல்லாம் நம் மனக்கண்ணில் காட்சியாய் தடம் பதிக்கும்!
"பாட்டன் பூட்டன் காத்த பூமி!
ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி!
ராட்டினந்தான் சுத்தி வந்தா, சேவக் கூவுச்சி!
அதுபோட்டு வச்ச எச்சந் தானே காடா மாறுச்சி! நம்ம நாடா மாறிச்சி!
இந்த வீடா மாறிச்சி!" என்ற வரிக்கு விளக்கங்கள் ஏதும் தேவையில்லை தானே!
"என்னக் கொற? என்னக் கொற? எந்தீணிக் கரும்புக்கு என்னக் கொற?
என்னக் கொற? என்னக் கொற? எஞ்செல்லப் பேராண்டிக்கு என்னக் கொற?
பந்தலுல பாவக்கா! பந்தலுல பாவக்கா! வெதக்கல்லு விட்டுருக்கு!
ஒரு வெதக்கல்லு விட்டுருக்கு! அப்பன் ஆத்தா விட்டதுங்க! அப்பன் ஆத்தா விட்டதுங்க!"
என்று மீண்டும் அதே கிழவியின் குரல்! இந்தக் குரல் யாருடையதெனப் பார்க்க வேண்டிப் பாடியவர்களின் விபரம் பார்த்தால் தீயைத் தவிர வேறு பெண் யாருமில்லை! சந்தோஷ் நாராயணன், அறிவு என்று இரண்டுபேர் இருந்ததே சந்தோஷின் குரல் எங்கே என்று பார்த்தால் அந்தக் கிழவியே நான் தான் என்று சந்தோஷ் சிரிப்பது இறுதியாகக் கேட்கிறது!
"ஆ..கடலே! கரையே! மனமே! குணமே! நிலமே! குளமே! இடமே! தடமே!"
என மீண்டும் தீயின் குரலைக் கேட்கும் போது சட்டென இந்த வரி தீக்காக என்னிலிருந்து வந்தது!
"மயிலே! மலரே! குயிலே! குரலே! அழகே! அடியே! தீயே! நீயே!"
குக்கூ குக்கூ... என இறுதியாய் ஒரு முறை தீ எனும் குயில் கூவுவதோடு திகட்டாதத் தித்திப்புக் குரலாள் தான் கூவுவதை நிறுத்துகிறாள்! உன் கூவல் இன்னும் பலகோடி மனங்களைக் கொள்ளை கொள்ளட்டும்! தீ எனும் தீயே உனக்கு பேரன்பின் முத்தங்கள்...!
எழுத்து - அருண்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?