Cinema
"நூறு நாட்கள்... நூறு விநாடிகள்... நூறு பாடல்கள்" - ஊரடங்கு காலத்தில் இளைஞர்களின் புதிய சாதனை!
எல்லோருக்கும் தாம் பயணிக்கும் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்கிற வேட்கை இருக்கும். அப்படி தமது துறையில் உலகில் யாரும் செய்திடாத புதிய சாதனையை செய்திருக்கிறார்கள் பாடலாசிரியர் வடிவரசும், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையும்.
பத்திரிகைத் துறையில் நிருபராக பணியாற்றிய வடிவரசு, வாசிப்பின் மீதான ஆர்வத்தால் எழுத்து துறைக்குள் வந்தவர். அதுவும் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக தன்னுடைய பத்திரிகைத் துறை பணியையும் விட்டுவிட்டு முழுநேரமாக திரைத்துறையில் பாடலாசிரியராக பயணித்து வருகிறார். தற்போது அவரது எழுத்து மற்றும் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையின் இசையில் நூறு நாட்களில் நூறு பாடல்களை உருவாக்கி வெளியிட்டு ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.
அதுகுறித்து வடிவரசு நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
“சினிமாவுல வாய்ப்புத் தேடி அலையும் பல நூறு இளைஞர்களைப் போல நானும் ஒருவன் தான். புத்தகங்கள் வாசிக்கிறது எழுதுறதுன்னு இருந்த எனக்கு பாடலாசிரியர் ஆகணும்னு ஆர்வம் ஏற்பட்டுச்சு. செய்துகிட்டு இருந்த நிருபர் வேலையை விட்டுட்டு முழு நேரமா சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினேன். எல்லோருக்கும் போல எனக்கும் சினிமாவுல பெருசா வாய்ப்புகள் கிடைக்கலை.
அப்படி சோர்ந்து போயிருந்த தருணத்துல தான், போலவே சினிமாவுல இசையமைப்பாளர் ஆகணும்னு வேட்கையோட இருந்த நண்பர் ஷ்ரவன் கலையை சந்திச்சேன். ஒரு பாட்டுக்கு இசை ரொம்ப முக்கியம். அப்படி ஒரு இசையமைப்பாளரே கூட இருக்கும்போது நாமளே ஏன் பாடல்களை எழுதி வெளியிடக் கூடாதுன்னு தோணுச்சு.
அப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய தனிப்பாடல்களை (Album songs) உருவாக்கியிருக்கோம். அந்த பாடல்கள் பலருடைய வரவேற்பை பெற்றது. இதுக்கு நடுவுல எழுத்து மேல இருக்கிற ஆர்வத்துல எழுதத் தொடங்கினேன். அப்படி நான் எழுதிய முதல் புத்தகம் ‘ ஐயா எனும் 95 வயது குழந்தை’. என் தந்தையோட அனுபவங்களை எழுதி வெளியிட்டு அப்பாவுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தேன். விஜயா பதிப்பகத்துல வெளியான இந்த புத்தகம் ஆயிரம் பிரதிகளுக்கு மேல விற்பனையாகி பலராலும் பாராட்டப்பட்டது. அந்தப் பாராட்டுகள் கொடுத்த ஊக்கத்துல, கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல் கவிதை புத்தகம் எழுதினேன். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அடுத்து முகங்கள், அகத்திரியில் ஏற்றிய நெருப்பு என இரண்டு புத்தகங்கள் வெளியிட இருக்கேன். அதுக்கான வேலைகள் நடந்துகிட்டு இருக்கு.
ஒரு பக்கம் பாடலாசிரியர் பணி... இன்னொரு பக்கம் எழுத்துப் பணினு தொடர்ந்து எழுதிக்கிட்டு இருக்கேன். இப்படி என்னோட தொடர் முயற்சிகளுக்கு இடையில கொரோனா ஊரடங்கு காலம் எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது போல என்னையும் புரட்டிப் போட்டுச்சு. லாக்டவுனுக்கு முன்னாடி ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்துல வாய்ப்பு அமைஞ்சது. ஆனால், லாக்டவுன்னால அது இப்போதைக்கு நிறுத்து வைக்கப்பட்டிருக்கு.
இந்த சூழல்லதான் இந்த ஊரடங்கு காலத்தை ஏன் வீணாக்கணும். ஏதாவது புதுசா பண்ணனும்னு தோணுச்சு. ஏற்கனவே நானும் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையும் நூறு பாடல்களை எழுதி இசையமைக்கணும்னு திட்டம் போட்டிருந்தோம். அந்த திட்டத்தை இந்த லாக்டவுன் நேரத்துல செயல்படுத்தலாம்னு ஆரம்பிச்சதுதான் நூறு நாள்... நூறு நொடிகள்... நூறு பாடல்கள்.
என்னோட வரிகளுக்கு ஷ்ரவன் இசையமைப்பாரு.... அவரோட மெட்டுகளுக்கு நான் வரிகள் எழுதுறதுனு தொடர்ச்சியா ரெண்டு பேரும் சேர்ந்து வெற்றிகரமா நூறு பாடல்களை தினமும் எழுதி பாடவச்சு எடிட் செய்து 'shravan kalai' யூ டியூப் சேனல்ல வெளியிட்டோம்.
ஆரம்பத்துல வரவேற்பு இல்லையேன்னு சோர்வு தட்டினாலும். எடுத்து சபதத்தை முடிக்காம விடக்கூடாதுங்கிற உந்துதல்ல வெற்றிகரமா நூறு பாடல்களை நூறு நாள்ல எழுதி இசையமைச்சு வெளியிட்டோம். இப்போ நிறைய பேர் பாராட்டி கருத்து தெரிவிச்சிருக்கிறது உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. 2021 புத்தாண்டை நூறு பாடல்களோட சிறப்பானதொரு ஆண்டா தொடங்கி இருக்கோம்.”
திரைத்துறையிலும்.. எழுத்து துறையிலும் மேன் மேலும் சாதனை படைக்கட்டும் இந்த இளைஞர்கள்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!