Cinema

உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதுதான் மகிழ்ச்சி; OTTல் அல்ல - சூரரைப்போற்று ரிலீஸ் குறித்து ஹரி கருத்து

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் பொது போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு மட்டும் இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது.

ஏனெனில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் பரவும் அச்சம் காரணமாக அவற்றுக்கு தளர்வுகள் விடுக்கப்படாமல் உள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக வெளியீட்டுக்கு தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆனாலும் அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் அவ்வப்போது படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’சூரரைப் போற்று’ படமும் அமேசான் ப்ரைமில் வருகிற அக்டோபர் 30ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என வெளியான அறிவிப்பு தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் இதனால் பெருமளவில் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பல தரப்பினர் சூரரைப் போற்று படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு வரவேற்பு அளித்திருந்தாலும் சிலர் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அவ்வகையில் நடிகர் சூர்யாவை வைத்து 5 படங்களை இயக்கிய ஹரியும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “நாம் இணைந்து பணியாற்றிய படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதனை மறந்துவிட வேண்டாம்.

ஒரு ரசிகனாக தியேட்டரில் உங்கள் படத்தை பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “பேசாத மவுனம் மிகவும் ஆபத்தானது; காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க” - EIA 2020க்கு எதிராக சூர்யா ட்வீட்!