Cinema

“நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார்” - சோதனைக்குப் பிறகு வருமான வரித்துறை அறிக்கை!

‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிரடியாக விஜய்யை அழைத்துச் சென்று அவரது வீட்டில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விஜய் வீட்டிலும், பனையூர் 8வது அவென்யூவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சில அறைகள், லாக்கர்கள் மற்றும் டிராயர்களை வருமான வரித்துறையினர் சீலிட்டு மூடினர். இது தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான இடங்களிலும், சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில், ஏ.ஜி.எஸ் மற்றும் அன்புச்செழியனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு 3 வாகனங்களில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு சோதனை நிறைவுற்றதாக கூறியதோடு, சீலிடப்பட்ட அறைகள், லாக்கர்கள் சீல் அகற்றினர்.

vijay 

அதன் பிறகு ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களுக்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பள விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பிகில் படத்துக்காக ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்துக்காக ரூ.80 கோடியும் நடிகர் விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும், இவ்விரு படங்களுக்குமான வரியையும் அவர் முறையாகச் செலுத்தியுள்ளார் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Also Read: நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி ரெய்டு - முன்கூட்டியே கணித்த ‘இவன் தந்திரன்’ !