Cinema

’சேட்டிலைட் மேல் இருந்து ஹீரோ குதிக்கும் காட்சியைப் படமாக்க100 கோடி தேவை’ : விஷால் - மிஷ்கின் குஸ்தி ?

விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகி 2017ம் ஆண்டு வெளியான படம் ’துப்பறிவாளன்’. தனியார் துப்பறியும் நிபுணராக விஷால் நடித்திருந்த இந்த படத்தில் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா என பலர் நடித்திருந்தனர். படம் வெளியான சமயத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து, விஷால் நடித்த ’ஆக்‌ஷன்’ படம் போதுமான அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. தற்போது அவர், ’சக்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க திட்டமிட்ட விஷால் மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இதில், பிரசன்னா, கவுதமி, ரகுமான் உள்ளிட்டோர் நடிக்கவும், இசைஞானி இளையராக இசையமைக்கவும் ஒப்பந்தமானார்கள். மேலும், லண்டனில் துப்பறிவாளன் 2 படத்துக்கான ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தன. இந்தப் படத்தையும் விஷாலே தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் வெளியான மிஷ்கினின் ’சைக்கோ’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அவர் தனது சம்பளத்தை உயர்த்தியதாகத் தெரிகிறது. மேலும், துப்பறிவாளன் 2 படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளதாம். ஆகையால், படத்தின் பட்ஜெட் அதிகமான காரணத்தால் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும், எஞ்சியுள்ள படபிடிப்பு மற்றும் இயக்கும் வேலைகளை விஷாலே மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துப்பறிவாளன் 2ல் இருந்து மிஷ்கின் விலகியதையும், விஷால் மீதியை இயக்கப்போவது குறித்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக 40 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டீர்களா? என மிஷ்கினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”ஆமாம். பணம் அதிகம் கேட்டது உண்மைதான். ஆனால், 40 கோடியல்ல. 400 கோடி கேட்டிருந்தேன். ஏற்கெனவே 100 கோடியில் பாதி படத்தை முடித்துவிட்டேன்.

மீதி படத்தை முடிப்பதற்காக 100 கோடியும், கிளைமேக்ஸ் காட்சியில் விஷால் செயற்கைகோள் ஒன்றின் மீது இருந்து பூமியில் குதிப்பதுபோல், படம் பிடிக்க 100 கோடியும் கேட்டிருந்தேன்” என கிண்டலாகப் பதிலளித்துள்ளார். மிஷ்கினின் இந்த பதில் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.