Cinema
“இசையால் ரசிகர்களுக்குக் காதலூட்டிய ராஜா” : காதலர் தினமும் இளையராஜாவும்..!
பழைய சோற்றுக்கு வெங்காயமும் பரோட்டாவிற்கு சால்னாவும் எப்படியோ அதேபோலத்தான் காதலின் சுவையைக் கூட்டுவது இளையராஜாவின் இசை. எல்லோரும் யாரோ ஒருவரை காதலித்துக்கொண்டேதான் இருப்போம்; ஆனால் அந்தக் காதலே ஒருவரைக் காதலிக்குமென்றால் அவர் தான் ராஜா சார்.
கோலமில்லா வாசலும் நீலமில்லா வானமும் கலைநயமற்றுக் காணப்படும். அதேபோல் ராஜாவின் இசையில்லாக் காதல் ரசனையற்றதாக இருக்க வாய்ப்புள்ளது. வார்த்தைகளைப் பயன்படுத்தி கவிதைகளாகவும் உரைநடைகளாகவும் காதலை வெளிப்படுத்தவும் உணரவைக்கவும் எல்லோராலும் முடியும். ஆனால் வார்த்தைகளற்ற ஒலி மூலமாக மட்டுமே காதலை வெளிப்படுத்தவும் மற்றவர்களுக்கும் உணரவைக்க இவரது இசையால் மட்டுமே சாத்தியம்.
இளையராஜாவின் ‘தென்றல் வந்து தீண்டும்’ பொழுதிலும் ‘ஆச மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ’க்களிலும் காதல் மணமே வீசுகிறது. ராஜாவின் இசைக்கும் காதல் மணமுண்டு. எளிமையான கடைநிலை மக்களின் காதலை வெளிப்படுத்த இவரின் பாடல்களே பாலங்களாக அமைகின்றன.உயிரற்ற காதல்களும் உயிர்ப்பிக்கின்றன.
டவுன்பஸ், மினிபஸ் பாடல்கள் என சில இளையராஜா பாடல்கள் கிண்டலாக ஒதுக்கப்படும். ஆனால் எளிய மக்கள் பயணிக்கும் டவுன்பஸ்களில் கர கர மொட மொட சத்தத்துடன் ஜன்னல் காற்றுடன் வெளியே வேடிக்கை பார்க்கும் போது, ‘என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி... எனக்குச் சொல்லடி...’ என்று பாடிக்கொண்டே பக்கத்து சீட்டில் பயணிக்கிறார் இளையராஜா. டவுன்பஸ் பயணக்காதல்கள் வெற்றி பெற்ற கதைகளுண்டு ஏராளம்.
காதலர் தினத்தன்று ஏன் இளையராஜாவை இப்படி பாராட்டித்தீர்க்க வேண்டும்? வெவ்வேறு சத்தங்களாக, தாளங்களாக, வரிகளாக, சந்தங்களாக, ஆண் பெண் என்ற பாலினம் கடந்து வேறு கோணத்தில் என்னிடம் காதலை அறிமுகப்படுத்தியவருடன்தான் காதலர் தினம் கொண்டாடுவது முறையாக இருக்கும்.
முப்பொழுதுகளிலும் காதலுடன் உரையாட நமக்குக் கிடைத்த மொழி ராஜாவின் இசை. “ஏன்டா ரெண்டு பேரும் பார்த்து பேசிக்கிட்டு தான் காதல் பண்ணுவீங்களா பார்க்காமலும் பேசாமலும் என் பாட்டு மூலமாகமே லவ் பண்ணுங்களேன்டா” என்று திணறத் திணற காதலை இசையாக ஊட்டிய இவரின்றி காதலர் தினத்தை கடந்துசெல்ல முடியாது.
காடு கரை பார்த்து காதலித்து டூயட் பாடிய அந்தக்காலம் முதல் டிக்டாக்கில் டூயட் பாடும் இந்தக் காலத்து ஜோடிகள் வரை ராஜாவே இசை விருந்து படைக்கிறார். காதலர் தினத்தன்று பகிரப்படும் விலையுயர்ந்த சாக்லேட்டுகளும் ரோஜாப்பூக்களையும் பரிசுகளையும் விட இளையராஜா பாடல்கள் என்றும் நம் மனதோடு பற்றிக்கொள்கின்றன.
பலரது காதலிலும் முக்கிய அங்கமாக ராஜாவின் இசை திகழ்கிறபோது இவரின்றி காதலர் தினம் கொண்டாடினால் காதலர் தினமே நம்மீது கோபம் கொள்ளும். காதலர் தினத்தை கொண்டாடுவோம் ராஜா சாருடன்..!
- சரண் குமார்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!