Cinema
டிக்-டாக் யுகத்தில் காவியக் காதல் சினிமாக்களுக்கு இடம் இருக்கிறதா?
தேவதாஸ்.. வசந்த மாளிகை.. வாழ்வே மாயம் என காதல் ரசம் சொட்டும் திரைக்காவியங்களை ரசித்து வந்த தமிழ் காதலர்களின் மனப்போக்கு தற்போது மாறியிருக்கிறது. தெய்வீக காதல் படங்களை விரும்பும் நிலையில் 2020 ஆண்டின் நவீன காதலர்கள் இல்லை. இதன்காரணமாகத் தான் தமிழ் திரைப்படஙகளில் தற்போது காதல் முழுமையான காதல் களங்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாவதில்லை.
தமிழ் திரைப்பட உலகை ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவை காதல் திரைப்படங்கள். இந்திய அளவில் தேவதாஸ் என்ற திரைப்படம் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் போன்ற திரையுலகங்களை ஆண்டது.
வங்காள எழுத்தாளரான சரத் சந்திரரின் நாவல்தான் தேவதாஸ். இந்தியாவின் 90 சதவீத மொழிகளில் மகத்தான வெற்றி பெற்ற கதை. நாகேஸ்வரராவ் சாவித்திரி நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம். தேவதாஸ் எனும் பணக்கார வீட்டுப் பையனுக்கும் பக்கத்துவீட்டு பார்வதிக்கும் சிறுவயது முதலாகவே சிநேகம். வாலிப வயதில் காதலாக மாறுகிறது. பார்வதி, ஒரு பனி இரவில் புறப்பட்டு வந்து திருமணம் செய்துகொள்வோம் வா என தேவதாஸைக் கூப்பிடுகிறாள். 'எல்லாம் பெரியவர்கள் சம்மதத்துடன் நடக்கட்டும்' என மறுத்து விடுகிறான். தன் வீட்டார் பார்த்து வைத்துள்ள வயோதிக பணக்காரரை மணக்கிறாள். தேவதாஸ் தாடி வளர்த்துக் கொண்டு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றான். காதல் தோல்வியும் தேவதாஸ் தாடியும் உலகப் பிரசித்தம். 'உலகே மாயம்' பாடல் கண்டசாலாவின் குரலில் உலகமெங்கும் ஒலித்தது.
காதல் மன்னன் ஜெமினி கணேசன்- நவரச நாயகி சாவித்திரி நடித்த மிஸ்ஸியம்மா மாபெரும் காதல் காவியமாக ஜொலித்தது. செவிலியராக நடித்திருக்கும் சாவித்திரி பாடும்... வாராயோ வெண்ணிலாவே.. கேளாயோ எங்கள் கதையே.. என்ற காதல் சுவை ததும்பும் பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இசைத்தட்டுக்கள் மூலம் ஒலித்ததை அக்கால காதலர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இதைப்போன்று காதல் மன்னன் ஜெமினி கணேசனும், அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் நடித்த படம். ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான படம். தமிழ் சினிமாவின் முதல் ட்ரெண்ட் செட்டரான சி.வி.ஶ்ரீதரின் முதல் படம் கல்யாண பரிசு. ஹீரோயின், அக்காவின் அரவணைப்பில் வளர்கிறாள். ஹீரோயின் வீட்டில் குடியிருக்கும் ஹீரோவைக் காதலிக்கிறார் தங்கை. ஹீரோ தங்கையின் மீது அன்பு பாராட்டுகிறார். அதே வாலிபனை அக்காவும் மனதால் விரும்புகிறார். விரும்புவதோடு நில்லாமல் தன் காதலுக்கு துணை நின்று நிறைவேற்றிட, தங்கையிடமே கோரிக்கையும் வைக்கிறார். அக்காவின் ஆசையை நிறைவேற்றி, தன் காதலை தியாகம் செய்கிறாள் தங்கை. ஆனால், ஒரு குழந்தையைக் கொடுத்து அக்கா இறந்து போகிறாள்.
பல இடங்களில் அலைந்து திரிந்து தேடி, தன் பழைய காதலியின் திருமணத்தில் தன் குழந்தையை கல்யாணப் பரிசாக கொடுத்து விட்டு, விரக்தியுடன் நடந்து செல்கிறான் நாயகன். படத்தின், க்ளைமேக்ஸ் பாடலுக்கு எழுந்து நின்று கைதட்டியதோடு முதல் ஸ்டேண்டிங் ஓவேஸனை இந்தப் படத்துக்குத்தான் தந்தார்கள் ரசிகர்கள்.
கம் செப்டம்பர் ( Come September) ஆங்கிலப் படம் உலகம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கியதோடு, தமிழக நகரங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டது அன்பே வா திரைப்படம். ஆக்ஷன் படங்களாக எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் ஹீரோவாக நடித்த படம் அன்பே வா. படம் முழுவதும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஏழாம் பொருத்தம். ஊடல், கூடல் என நகரும் கலர்புல் காதல் கதை இது.
தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களில் பசுமரத்தாணி போன்று பதிந்த காதல் காவியம் வசந்தமாளிகை. காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. தெலுங்கில் நாகேஷ்வர ராவ் இதே கதையில் நடித்தார். இப்படத்தின் பாடல்கள் தேனினும் இனியவை. அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன் என்ற வைரவரிகளை முணுமுணுக்காத வாய்களே இல்லை.
வெள்ளந்தியாக அழகான கிராமியச் சூழலில் வாழும் கிராமத்துப் பெண் சுஜாதாவுக்கும், ஊருக்கு வாத்தியாராகப் பாடம் சொல்லித்தர வரும் சிவக்குமாருக்கும் காதல். இளையராஜாவின் முதல்படம். அத்தனைப்பாடங்களும், படக்காட்சிகளும் இப்படத்தை மாபெரும் காதல் படமாக்கியது.
தொலை தூரக் காதலையும் கலை வடிவத்தையும் மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் தில்லானா மோகனாம்பாள் மற்றும் கரகாட்டக்காரன். தகவல் தொழில்நுட்பம் இல்லா காலத்தில், பிரிந்து இருக்கும் காதலர்கள், சந்திப்புக்கு ஏங்கும் தருணங்கள், ரசிகர்களையும் ஏங்க வைத்தது. Long Distance Relationship-ல் இருக்கும் வலியையும், சுகத்தையும், ஏக்கத்தையும் இளைஞர்களிடம் கடத்தியது அந்த படங்கள்.
தமிழ் காதலர்களை மட்டுமல்ல, தமிழ் திரையுலகத்தையே அதிர வைத்தது ஒரு தலைராகம். டி.ராஜேந்தரின் கதை, வசனம் பாடல்கள் இசையில் உருவான காதல் காவியம். முழுக்கமுழுக்க மலையாள புதுமுகங்கள். ராபர்ட் ராஜசேகரின் ஒளிப்பதிவு என படம் மிகக்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
காதலின் அடுத்த பரிமாணத்தை எட்டினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இவரே தமிழ் திரையுலகத்தில் காதல் திரைப்படங்களை புதிய கோணத்துடன் அணுகியவர். இயக்கிய தெலுங்குப் படம் மரோசரித்ரா. கமல்ஹாசனும் சரிதாவும் இணைந்து நடித்த படம். பாலு சொப்னா இருவருமே பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள். பரஸ்பரம் பிடித்துப் போய் காதலர்களாகிறார்கள். இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தியதில், ஒரு வருட காலம் ஒருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டும், என்பது நிபந்தனை. பலவித போராட்டங்களுக்குப்பின் வைராக்கியமாக இருந்து சேரப்போகும் நிலையில் மிகப் பெரும் சோகத்துடன் படம் முடிவடைகிறது. தெலுங்கின் மரோசரித்திராவையும், இந்தியின் ஏக் துஜே கேலியே படத்தையும் கொண்டாடித் தீர்த்தார்கள் தமிழ் காதலர்கள்.
இதன் தொடர்ச்சியாக பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கமலஹாசனின் வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, கே.பாக்ய ராஜின், அந்த 7 நாட்கள், தூரல் நின்னுபோச்சு, டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னைக் காதலி மற்றும் கிளிஞ்சல்கள், தம்பிக்கு எந்த ஊரு, வைகாசி பொறந்தாச்சு ஆகிய சூப்பர் ஹிட் காதல் படங்களைத் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளில் காதலன், காதல் தேசம், இதயம், விஜய்யின் குஷி, லவ்டுடே, கண்ணெதிரே தோன்றினாள், ப்ரியமானவளே, அஜித்தின் ஆசை, அவள் வருவாளா, சூர்யாவின் நேருக்கு நேர், வருஷம் 16, வைதேகி காத்திருந்தாள், தென்றலே என்னைத் தொடு, இதயத்தை திருடாதே, காதல், மின்னலே, 12 பி, காதலுக்கு மரியாதை, விண்ணைத் தாண்டி வருவாயா, சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம் , 96 என காதல் படங்கள் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துள்ளன.
ஆனால், சமீபத்தில் தமிழில் காதல் திரைப்படங்கள் தற்போதைய 2020 காதலர்களை கவரவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்களில் கதாநாயகிகளை துரத்தி துரத்தி காதல் செய்பவர்கள், தங்கள் காதல் கைகூடியவுடன் அந்த பெண்ணை கைவிடுவது போன்று எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய படங்களை தற்போதைய 2 கே கிட்ஸ் எனப்படும், இக்கால காதலர்கள் ரசிக்கிறார்கள். இவர்களிடம் தூய்மையான காதல், தெய்வீக காதல், ஆத்மார்த்தமான காதல் ஆகியவை எடுபடவில்லை என்று திரை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
விஜய் தேவார கொண்டா நடித்து தெலுங்கில் சக்கைபோடு போட்ட, அர்ஜீன் ரெட்டி படம், தமிழில் ஆதித்ய வர்மா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் முடங்கிப் போனது. 90 கிட்ஸ்களின் காதல் சுவார்யஸ்களோடு வெளிவந்த 96 படத்தை, 2 கே கிட்ஸ் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தனர்.
அப்படியானால் 2020 காதலர்கள் எதிர்பார்ப்பது எதுபோன்ற படங்களை என்று பார்த்தால், மேலோட்டமான காதல் கதைகளையும், காதலிக்கும் பெண்களை பகடி செய்யும் படங்களையும்தான் என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். அத்தி பூத்தாற்போன்று பரியேறும் பெருமாள் போன்ற சமூகக்காதல் திரைப்படங்கள் வெற்றிபெற்றுள்ளன.
இருப்பினும், நவீன யுகத்தின் விளைவுகளான ஸ்மார்ட்போன்களும், இணைய தாராளங்களும் தூய்மையான காதல், உண்மையான காதல், காவியக்காதல் திரைப்படங்களை ஓரங்கட்டி விட்டன என்பதே உண்மை.
டிக்டாக்கில் காதல், லிவிங் டுக்கெதர் கலாச்சாரம், பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி என காதலுக்கும், நட்புக்கும் இடையிலான உறவுகள் முளைத்து காதல் திரைப்படங்கள் மீதான ரசனையை மாற்றியுள்ளன. இதன்காரணமாக தமிழ் திரையுலகில் காவியக்காதல் காவியங்கள் கரையேறுமா என்பது போகப்போகத் தெரியும்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!