Cinema

சும்மா இருந்த விஜய்யை சீண்டிப் பார்த்த பா.ஜ.க - ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது வருமான வரித்துறையினர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை நாள் விசாரணை நடைபெற்ற பின்னர் விஜய் வீட்டில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றப்படாத நிலையில் சோதனை நிறைவு பெற்றதாக அறிவித்தது வருமானவரித்துறை. இதையடுத்து விஜய் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டுவிட்டதாக கூறி பா.ஜ.க அரசைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் மீதான வருமான வரித்துறை வளையத்திற்கு பா.ஜ.கவே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 7ஆம் தேதி பா.ஜ.க-வினர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கும் பா.ஜ.க-வினர் இலவச விளம்பரம் செய்து வருவதாக ரசிகர்கள் பா.ஜ.க-வை சமூக வலைதளங்களில் கிண்டலாக விமர்சித்து வந்தனர்.

விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினசரி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டு வருகின்றனர். ரசிகர்கள் திரண்டிருப்பதைக் கண்ட விஜய், ஒரு வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நேற்றும் அங்கு கூடியிருந்த ரசிகர்களைச் சந்தித்துள்ளார் நடிகர் விஜய். அங்கிருந்த பேருந்தின் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரசிகர்களுடன் விஜய் அண்மையில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஜய். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்திய அளவில் ட்ரெண்டானது.

பா.ஜ.க-வினர், விஜய்க்கு எதிராக செயல்பட நினைத்து, அவருக்கு ஆதரவைத் திரட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : சமூக வலைதளங்களில் கலாய்த்த ரசிகர்கள்!