Cinema
இந்தப் படங்களை மிஸ் பண்ணிடாதீங்க... இந்த ஆண்டின் டாப் 10 மலையாள சினிமா! #Cinema2019
மலையாள சினிமா எப்போதுமே கொஞ்சம் ஆஃப் பீட்டாக நல்ல நல்ல, படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும் அப்படியான சிறந்த மலையாள படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் துவங்கி, தமிழில் பார்க்கவே கிடைக்காத ‘ஜூன்’ வரைக்கும் இந்த வருடம் மலையாளத்தில் வெளியான படங்களில் இருந்து தவறவிடக்கூடாத 10 சிறப்பான படங்களை தொகுத்துத் தருகிறோம். இது, 2019-ன் மிஸ் பண்ணக்கூடாத சிறந்த 10 மலையாளப்படங்கள்!
1. கும்பளாங்கி நைட்ஸ்
கும்பளாங்கி நைட்ஸ் வெற்றிக்கு காரணமாக தோன்றுவது, இந்த படம் தொடங்கியது ஷ்யாம் புஷ்கரன் எனும் எழுத்தாளரிடமிருந்து. மலையாளத்தின் மிகச் சிறப்பான பல படங்களை எழுதியவர் புஷ்கரன். அறிமுக இயக்குனரான மது நாரயணன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், ஷேன் நிகாம், சௌபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி மற்றும் பலர் கும்பளாங்கியில் தங்கிச் சென்றனர். அப்படித்தான் இருந்தது அவர்கள் நடிப்பு.
நிலத்தைக் கடந்து நம் ஒவ்வொருவரையும் கும்பளாங்கியுடன் தொடர்புபடுத்திய விதம்தான் படத்தின் வெற்றி. அங்கமாலி டைரீஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என கேரளத்தின் ஒவ்வொரு நிலப்பரப்பையும் மையப்படுத்திய திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கிவருகின்றனர். இவற்றிலிருந்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’ வித்தியாசப்படுவது, அந்த ஊரின் ஒதுக்கப்பட்ட மூலையில் எவரும் ஏற்றுக்கொள்ளாத ஒரு குடும்பத்தின் கதையைப் பேச முயற்சி செய்த இடத்தில்தான். சில படங்கள் நம் வாழ்க்கையைப் பேசி அதை விமர்சனம் செய்ய உதவும், அப்படியான ஒரு படம்தான் கும்பளாங்கி நைட்ஸ். நிச்சயம் தவறவிடக்கூடாதது.
2. மூத்தோன்
சினிமா நம்மை அதன் கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நாம் பார்க்கும் படங்களில் கோடியில் ஒரு படம்தான் அந்த அனுபவத்தை நமக்குத் தருகிறது. ‘மூத்தோன்’ அப்படியான ஒன்றுதான். அதற்கு ஏற்றாற்போல் கதை மாலத்தீவு, மும்பையின் இருட்டு என புதிய பக்கங்களில் பயணித்தது.
தனது முந்தைய படைப்புகளில் கவனம் ஈர்த்த இயக்குனர் கீது மோகன்தாஸ், படைப்புச் சுதந்திரம் முழுதாக கிடைக்கும் அனுராக் காஷ்யப் போன்ற ஒரு தயாரிப்பாளர், நிவின் பாலி, ஷோபிதா துல்லிபாலா, ஷஷாங் அரோரா, ரோஷன் மேத்யூ என பக்காவான நடிகர் பட்டாளம் என எல்லாம் கிடைக்க புகுந்து விளையாடியிருந்தார். முக்கியமாக ராஜீவ் ரவியின் கேமரா காட்டிய மேஜிக் அலாதியானது. படம் பேசும் அரசியலும், அதைப் பேசிய விதமும் 2019-ன் இந்திய சினிமாக்களில் முக்கியமான படமாக மூத்தோனை முன்னிருத்தியிருக்கிறது.
3. ஜல்லிக்கட்டு
மண் சார்ந்த, மெல்லிய உணர்வுகளைத்தான் மலையாள சினிமாக்கள் கையாளும் என்ற இலக்கணத்தை தொடர்ந்து உடைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஈ.மா.யூ, அங்கமாலி டைரீஸ் என ஒவ்வொரு படத்திலும் ஒரு அடி எடுத்துவைத்தவர் ஜல்லிக்கட்டுவில் எடுத்தது அசுரப் பாய்ச்சல். ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை, எடிட்டர் தீபு ஜோசப், இந்த கூட்டணியுடன் இணைந்து லிஜோ செய்த சினிமா தொழில்நுட்பரீதியாகவே உலகளவில் வியந்துபார்க்கும் படைப்பாக ஜல்லிக்கட்டை மாற்றியது.
தன் சொந்த ஊருக்குள் ஒரு எருது காணவில்லை என தொடங்கும் கதையை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கான அரசியல் பேசும் கதையாக முடித்ததில் தெரியும் லிஜோவின் தன்னம்பிக்கை, ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்குமானது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் 100 பேர், 200 பேர், ஆனால் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் எடிட்டிங் கட்டுகள், இருந்தும் அச்சுபிசகாமல் சினிமா மொழி பேசினார் லிஜோ. உலகின் பல திரைவிழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பாராட்டுகளை பெற்ற ஜல்லிக்கட்டு திரைப்படத்தை பார்ப்பது, சினிமா ரசனையின் உச்சம்.
4. வைரஸ்
ஒரு சினிமா தன் சமூகத்தில் இருக்கும் பிரச்னைகளை பேசுவது எத்தனை முக்கியமானதோ, அதேபோல்தான் அந்த சமூகம் வெற்றிகரமாக கடந்துவந்த ஒரு பிரச்னையை ஆவணப்படுத்துவதும். அது பின்வரும் சமூகத்திற்கு பெரும் நம்பிக்கையளிப்பதாக இருக்கும். 2018-ல் கேரளா முழுதும் பரவிய நிஃபா வைரஸ் தாக்குதலை அந்த அரசு மக்களோடு சேர்ந்து எத்தனை வெற்றிகரமாக கையாண்டது என்பதை பதிவு செய்வதற்காக ஆஷிக் அபு இயக்கத்தில், குஞ்சக்கோ போபன், பார்வதி, ஆசிஃப் அலி, டொவினோ தாமஸ், சௌபின் ஷாகிர், மடோனா செபாஸ்டியன் என மலையாள நடிகர்கள் பலரும் ஒன்றிணைந்து ஒரு அழகான கூட்டு முயற்சியாக இந்த படத்தை உருவாக்கினார்கள்.
இப்படியான ஒரு திரைப்படம் ஒரு ஆவணப்படமாக மாறும் வாய்ப்புகள் அதிகம், ஆனால் வைரஸ் ஒரு பக்காவான திரில்லர் படமாக, பார்ப்பதற்கு விறுவிறுப்பாக உருவாக்கிய விதம்தான் வைரஸை 2019-ன் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டுவந்திருக்கிறது. இந்த படத்திற்கும் கூட ஒளிப்பதிவு ராஜீவ் ரவிதான்.
5. இஷ்க்
படத்தின் முதல் காட்சியில் ஒரு காதல் ஜோடி ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மாண்டேஜ் காட்சிகளுக்கு வருபவர்கள், ஹீரோவும், ஹீரோயினும் இனிமேல்தான் வருவார்கள் போல என எண்ணிக்கொண்டிருந்தால், இல்லை இவர்கள்தான் ஹீரோ, ஹீரோயின் என அறிமுகப்படுத்திய இடத்திலேயே இஷ்க் கவனம் பெறத் தொடங்கிவிட்டது. திருமண அமைப்பை அத்தனை இறுக்கமாக வைத்திருக்கும் இந்த சமூகத்தில் காதலர்களுக்கான இடம் பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கியது. அதில் ஒன்றான, ஆனால் இதுவரை எந்த சினிமாவும் பேசியிராத ‘காதலர்களுக்கான ப்ரைவேசி’ என்ற விஷயத்தை பேச முயற்சித்த இயக்குனர் அனுராஜ் மனோகர் பெரும் பாராட்டுதலுக்குரியவர்.
இந்தக் கதைக்கு ஷேன் நிகாமைவிட பொருத்தமான ஹீரோ வேறுயாரும் இருக்கமுடியாது எனத் தோன்றும் அளவிற்கு சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார். ஆனாலும்கூட அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அத்தனை சுயமரியாதையோடு இருக்கும் கதாநாயகியாக நடித்திருந்த ஆன் ஷீடல் மனதில் நின்றுவிட்டார். படம் பெரும்பாலும் ஒரு காருக்குள்ளேயே இருந்தும் அதை நேர்த்தியாக செய்துமுடித்த படத்தின் தொழில்நுட்ப குழுவும் பெரும் பாராட்டுதலுக்குரியவர்கள்.
6. தமாஷா
இந்திய ஆண்கள் பெரும்பாலானோரிடம் இருக்கும் பெரிய கவலை தங்கள் முடி கொட்டுவது பற்றித் தான். அதைச் சுட்டிக்காட்டி, அப்படியான ஒருவருக்கு நிகழவேண்டிய ஒரு காதலை மெல்லிய அழகோடு சொன்ன திரைப்படம் ‘தமாஷா’. அஷ்ரஃப் ஹம்சா இயக்கத்தில் வினய் ஃபோர்ட், திவ்யா பிரபா, சின்னு சாந்தினி மற்றும் பலர் நடித்து வெளியான தமாஷா, மலையாளப் படங்களுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ‘லைட்-வெயிட்’ படம்தான்.
படத்தில் குறிப்பிடப்படும் முடி கொட்டுதல், குண்டாக இருத்தல் போன்ற விஷயங்களுக்கு அந்த இயல்பை உடைய நடிகர்களைத் தேர்ந்தெடுத்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இப்படியான விஷயங்களை பேசும்போது, இந்த பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கும் ‘திருமணம்’ என்ற இடத்தை கதையின் மையப் புள்ளியாக வைத்த விதத்தில் இயக்குனர் ஹம்சா கவனிக்க வைக்கிறார். படம் பார்த்து முடிக்கும்போது வழுக்கைத் தலையுடன் இருக்கும் வினய் ஃபோர்ட்டும், குண்டாக இருக்கும் சின்னு சாந்தினியும் நமக்கு அத்தனை அழகாகத் தெரிந்ததில் இருந்தது படத்தின் வெற்றி. சீக்கிரம் தமிழ் ரீமேக்கை எதிர்பார்க்கலாம்.
7. தண்ணீர்மத்தன் தினங்கள்
ஒரு பள்ளியைப் பற்றியும், அங்கிருக்கும் மாணவர்கள் பற்றியும், அங்கிருக்கும் ஆசிரியர்கள் பற்றியும், முக்கியமாக முதல் பெஞ்ச் மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றியுமென நமக்கு இவர்கள் மேலெல்லாம் இருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்குகிறது தண்ணீர் மத்தன் தினங்கள். பள்ளிப்பருவ காதலை படமாக்கும் படங்கள் கொஞ்சம் பயத்துடன் அதை அணுகி அதன் இயல்பை கெடுத்துவிடுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. அப்படியாக இல்லாமல் மாணவப் பருவத்தை அதன் இயல்பினூடே அணுகிய விதத்தில் தான் வெற்றிபெற்றது தண்ணீர் மத்தன் தினங்கள்.
வித்தியாசமான கதைகளைத் தேடியலையும் நடிகர் வினீத் சீனிவாசன், இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு கொள்ளை அழகானது. பள்ளிப்பருவம், அதில் மலரும் காதல், நடுவில் ஒரு ஆசிரியர் என கதையில் பெரிய அழுத்தம் எதுவும் இல்லாதபோது, அதை அழகான சினிமாவாக்கிய விதத்தில் இயக்குனர் கிரீஷ் பாராட்டுதலுக்குரியவர். ஷமீர் முகமது இசையில் பாடல்களும் பெரிய ஹிட். தன் பள்ளிப்பருவ நாட்களை நினைத்து அசைபோட எண்ணும் எவரும், அதற்கு இந்த படத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
8. உயரே
மனு அசோகன் எனும் அறிமுக இயக்குனர், மிகக் குறைவான பட்ஜெட், பத்தோடு பதினொன்றாக கடந்துபோகும் ஒரு படம் எடுப்பதற்குத்தான் வாய்ப்பு இருந்தது. ஆனால் பார்வதியின் நடிப்பும், கதையை திரைக்கதையாக மாற்றிய இடத்தில் செய்திருந்த வேலையும், உயரே படத்தை மிகச்சிறந்த படமாகவும், மலையாளத்தின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாற்றியது. பாபி-சஞ்சய்யின் வசனங்கள் குறிப்பிடப்படவேண்டியது. பார்வதிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் எனத்தெரிந்தும் அந்தப் படத்தில் டொவினோ தாமஸ் மற்றும் ஆசிஃப் அலி நடித்திருக்கும் ஆரோக்கியமான சூழல் இங்கும் தேவைப்படுகிறது.
படத்தின் மற்றொரு முக்கிய பலம் கோபி சுந்தரின் இசை, பாடல்கள் மட்டுமல்லாமல் பிண்ணனி இசையிலும் பெரிய உதவியை படத்திற்கு செய்திருந்தார். ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண் அதிலிருந்து மீண்டு வரும் கதை என்றால் அதில், “அந்த பெண் பரிதாபத்திற்கு உரியவள்”, “இதுவும் அழகுதான்” இப்படியான க்ளிஷேக்களே நிரம்பியிருக்கும். உயரே அப்படியாக இல்லாமல் பாதிப்புக்கு உள்ளானவரின் கண்கள் வழியாக அவர் வாழ்க்கையைப் பேசுகிறது. அந்த நேர்மைக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.
9. உண்டா
ஒரு பொலிட்டிகல் சட்டையர் படம் எப்படி இருக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் ‘உண்டா’ படத்தை எடுத்துக் காட்டலாம். இயக்குனர் ஹாலித் ரஹ்மான் தான் செய்தித்தாளில் பார்த்த ஒரு பெட்டிச்செய்தியை முழுப்படமாக மாற்றியிருந்தார். மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் நிறைந்த இடத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற ஒரு போலிஸ் குழுவிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. எனில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டனரா என்றால், உண்மையில் அங்கு மாவோயிஸ்டுகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
கடைசிவரை மாவோயிஸ்டுகளின் தாக்குதலை பார்க்காத போலிஸ் குழு, உள்ளூர் அரசியல் கட்சியினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதற்குள் எத்தனை அரசியல் நக்கல் இருக்கிறது என யோசித்துப் பாருங்கள். மம்மூட்டி எனும் அசாத்தியமான நடிகன் வாழ்ந்திருந்தார், ஒவ்வொரு காட்சியிலும் இந்தக் கதையை, தான் நடிக்கத் தேர்ந்தெடுத்தது எதற்காக என்ற காரணத்தை வலுப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப் படத்தை பார்ப்பதற்கு காரணமே வேண்டாம், கண்டிப்பாக பாருங்கள்.
10. ஜூன்
சிறுவயதில் ஒரு காதல் வரும், தவறில்லை, ஆனால் அதுகுறித்து ஏதேனும் முடிவெடுக்க அதற்கான வயது வரும்வரை காத்திரு. நம் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தரவேண்டிய பாடம் இவ்வளவு தான். ஆனால் இதைச் சொல்லிக்கொடுக்க முடியாமல் தொடர்ந்து திணறிக்கொண்டே இருக்கிறோம். அந்த வேலையை மிக அழகான சினிமா பார்க்கும் அனுபவத்தை தருவதோடு செய்து முடித்திருக்கிறது ‘ஜுன்’ திரைப்படம்.
அகமது கபீர் இயக்கத்தில், ரஜிஷா விஜயன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2019-ல் வெளியான திரைப்படம் இது. இஃப்தி இசையமைப்பில், ஜிதின் ஸ்டனிஸ்லாஸ் ஒளிப்பதிவில், லிஜோ பால் எடிட்டிங்கில் இந்த படத்தை உருவாக்கியிருந்தனர். திரையரங்குகளில் 100 நாட்களை கண்ட திரைப்படம். ஒரே காரணம், திரைக்கதை. பின்னோக்கிச் செல்லும் திரைக்கதை என்ற சவாலான விஷயத்தை தன் முதல் படத்திலேயே தைரியமாக செய்திருந்தார் கபீர். ரஜிஷா இந்த படத்திற்காக செய்த அர்ப்பணிப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும். நிச்சயம் தவறவிடக்கூடாத திரைப்படம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!