Cinema
2019ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்: Endgame முதல் Knives Out வரை... எண்ணிலடங்கா வசூலும் சாதனையும்!
சினிமா என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ஹாலிவுட்டாகதான் இருக்கும். ஏனெனில், ஹாலிவுட் துறைதான் பெரிய சினிமா துறையாக கருதப்படுகிறது. ஆகையாலேயே இந்தியா உள்ளிட்ட பல மொழிப்படங்களை உருவாக்குபவர்கள் ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டுக்கொள்கின்றனர். ஹாலிவுட் படங்களுக்குதான் உலகின் அனைத்து நாடுகளிலுமே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த அளவுக்கு பிரமிப்பும், பிரபலமும் கொண்ட ஹாலிவுட் படங்கள் நடப்பு 2019ம் ஆண்டில் வெளியானது என்னவோ குறைவாகதான் உள்ளது. அதில், சிறந்த 10 படங்களை பற்றிய தொகுப்புதான் இந்த Best of 2019 in Hollywood.
1) Avengers: Endgame - ஏப்ரல்
உலகமே வியந்து பார்க்கும் ஹாலிவுட் துறைக்கு இந்த ஆண்டின் தொடக்கம் என்னவோ அயர்ச்சியாகதான் இருந்தது. முதல் மூன்று மாதத்திற்கு எந்த படமும் பெரிதளவில் வெற்றியடையவில்லை. அதன் பிறகு, ஏப்ரல் மாதம் தியேட்டரை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர். மூன்று மாதங்கள் விட்டுவைத்த மொத்த வசூலையும் ஒரே படத்தின் மூலம் அள்ளியெடுக்கப்பட்டது. அதுதான் மார்வெல் ஸ்டூடியோஸின் ‘Avengers: Endgame’.
ஆண்டாண்டு காலமாக நாம் பழிவாங்கும் கதைகளை பார்த்து வந்தாலும் அதை சொல்லும் விதத்தினால் பல படங்கள் வெற்றியடைகிறது. அப்படி சிறப்பான முறையில் நிறைய அறிவியல் அம்சங்களை பயன்படுத்தி ரோஸோ ப்ரதர்ஸ் இயக்கிருந்த படம் இந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. எடுத்த எடுப்பில் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு அதன் கதை புரிந்து விடாது, குறைந்த பட்சம் முந்தைய மூன்று அவெஞ்சர்ஸ் அல்லது இன்ஃபினிட்டி வார் படத்தையாவது பார்த்திருக்க வேண்டும். மார்வெலின் 10 வருட பயணத்தின் முக்கிய பகுதி எண்ட்கேம் தான். பல கோடி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் இதுவரை இருந்த பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் அனைத்தையும் முறியடித்து முதலிடத்தை பிடித்தது. ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் படத்தை ரசிகர்களை கொண்டாட செய்தது.
2) John Wick: Chapter 3 - Parabellum - மே
ஏப்ரல் மாதம் வெளியான எண்ட்கேம் படத்தின் மீதான ஹாலிவுட் ரசிகர்களின் தாக்கம் குறைவதற்குள், மே மாதம் அதிரடியாக வந்திரங்கியது ஜான் விக் 3. ஜான் விக் படங்களின் வரிசையில் 3வது பாகமாக வெளியான இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பால் ஜான் விக் 3 படம், 350 மில்லியன் டாலர் வசூலித்தது.
ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கு இருக்கும் வரவேற்பும் எதிர்ப்பார்ப்பும் Chad Stahelski இயக்கத்தில் Keanu Reeves நடிப்பில் வெளியான ‘John Wick: Chapter 3’ படத்திற்கும் இருந்தது. பழிவாங்கும் கதையாக இருந்தாலும், ஜான் விக் சண்டையிடும் காட்சியும், பழிவாங்கும் விதமும்தான் படத்தை ஈர்க்க செய்துள்ளது. Characters எனும் நாவலை தழுவி படமாகிவரும் இந்த சீரிஸின் 4வது பாகத்திற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இந்த நான்காவது பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3) Aladdin - மே
தமிழில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கும் ஹாலிவுட்டின் அலாதின் படத்துக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. என்னவெனில், 2016ம் ஆண்டே டிஸ்னி அலாதின் படத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டு படபிடிப்புகளை முடித்தது. ஆனால், படம் வெளியானது 2019ல்தான். ஏனெனில் , படத்தின் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட சிக்கலும் தொய்வும் இருந்தது. இருப்பினும் படத்துக்கான வரவேற்புக்கு எந்த குறையும் இல்லாமல் இருந்தது.
கய் ரிட்சி இயக்கத்தில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயார்ப்பில் Will Smith, Mena Massoud, Naomi Scott ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ‘அலாதின்’. 1992ல் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான அனிமேஷன் திரைப்படம்தான் அலாதின். இந்த படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகையால் இந்த அனிமேஷன் படத்தை லைவ் ஆக்ஷன் படமாக மறுபடியும் டிஸ்னி தயாரித்தது. அலாவுதீன் கதை எல்லோரும் அறிந்ததாக இருந்தாலும் அதை திரைப்படமாக பார்ப்பதில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். அந்த சுவாரஸ்யம் இந்த அலாதின் படத்திலும் இருந்தது வெற்றிக்கு உதவியது.
4) Spider-Man: Far From Home - ஜூன்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்துக்கு பிறகு மார்வெல் படங்களின் பயணம் எப்படி இருக்கும் என்கிற ஆவல் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இருந்தது. அந்த சமயத்தில்தான் மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் ஒருவராக ஸ்பைடர் மேன் தனியாக வந்து இறங்கி பல கேள்விங்களுக்கு பதிலளித்தார்.
அவஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் சம்பவங்களுக்கு பிறகு அயர்ன் மேனின் இழப்புகளை தாங்க முடியாமல் இருந்த பீட்டர் (ஸ்பைடர் மேன்), தான் என்ன செய்வது என்பது தெரியாமல் திணறுகிறான். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண்ணை விரும்பும் பீட்டர் அவளிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். கல்லூரி சுற்றுலா செல்லுமிடத்தில் நிக் ஃப்யூரி மூலம் உலகை அழிக்கும் சக்திகளுக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறான். உலகை காப்பதோடு தன்னையும் அயர்ன்மேன் அவனுக்கு விட்டுச்சென்ற பணிகளையும் அவன் கண்டடைவதுதான் இப்படத்தின் கதை. ஜோன் வாட்ஸ் இயக்கிருந்த இந்த படம் ஸ்பைடர் மேன் பட வரிசைகளிளேயே அதிகம் வசூல் செய்த படமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் உலகளவில் 1.132 பில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
5) Once Upon a Time in Hollywood - ஜூலை
வரலாற்றின் கருப்பு பக்கங்களை சினிமா மொழியில் மாற்றியமைத்திருந்த ஒரு முயற்சிதான் அடுத்ததாக நாம பார்க்கவிருக்கும் படம். அமெரிக்காவின் வரலாற்றில் மாறாத Sharon Tate கொலைச் சம்பவத்தின் மையத்தில் இருந்து 1960களில் ஹாலிவுட் சினிமாவின் கதையை சொல்வதுதான் ‘Once Upon a Time in Hollywood’.
குவெண்டின் டேரண்டினோ. இந்தப் பெயர் உலக சினிமாவில் பிரசித்தம். சினிமா ரசிகர்கள், ஆர்வலர்கள், சினிமாவை கற்பவர்கள் என பலரின் ஆதர்சம். இவருக்கென ஒரு தனி திரைமொழியை உருவாக்கி வைத்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான படம் தான் இந்த ‘Once Upon a Time in Hollywood’. 1960 களில் ஹாலிவுட்டில் வசிக்கும் நடிகர் Rick Dalton அவரது ஸ்டண்ட் டூப், Cliff Booth இருவரும் ஹாலிவுட்டில் தங்கள் சினிமா வாழ்வின் அஸ்தமனத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். Rick Dalton-னின் பக்கத்து வீட்டுக்கு குடிவருகிறார்கள் Roman Polanski -யும் அவரது மனைவி Sharon Tate-ம். Rick Dalton, Cliff Booth , Sharon Tate மூவருக்கும் ஹாலிவுட் என்ன மாதிரியான அனுபவங்கள் கொடுக்கிறது, வரலாற்றில் மறையாத அந்த நாளில் என்ன நடக்கிறது என்பது தான் இந்தப்படத்தின் கதை. ஆனாலும் குவெண்டின் டேரண்டினோ தன் பாணியை விட்டுவிட்டு வரலாற்றின் பக்கத்தில் தான் பணிபுரியும் ஹாலிவுட்டை தன் பார்வையில் படைத்திருக்கிறார்.
6) The Lion King - ஜூலை
டிஸ்னியின் முயற்சியில அனிமேஷன் படமாக இருந்து லைவ் ஆக்ஷன் படமாக வெளியான படங்களில் அதிகபடியான ரசிகர்களை கவர்ந்திருந்த படம் தான் ‘தி லயன் கிங்’. ராஜா சூழ்ச்சியால் பின்னப்பட்டு இறந்து போக மகன் வளர்ந்து வந்து ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பது தான் இந்த படத்தின் கரு.
பைபிளில் இருந்து தழுவப்பட்டு உருவாக்கப்பட்ட குழந்தைகள் கதை தான் ‘தி லயன் கிங்’. இந்த கதை பல்வேறு வடிவங்களில் உலகமெங்கும் மீளுரு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது டிஸ்னி தயாரிப்பில் பல கோடிகளில் அனிமேஷன் வடிவம் கண்டிருக்கிறது. உலகம் முழுக்க குழந்தைகள் அதிகமுறை கேட்ட கதை தான். அதை மீண்டும் இக்கால தொழில்நுட்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். முஃபாஸா எனும் சிங்கம் காட்டை மிக நல்ல முறையில் ஆண்டு வருகிறது. அதன் வாரிசான சிம்பா, இளம் வயது கனவுகளுடன் இருக்கிறது, முஃபாஸா தம்பியான ஸ்கார் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்பட்டு முஃபாஸாவை திட்டமிட்டு கொலை செய்கிறது. மேலும் முஃபாஸாவின் மறைவுக்கு காரணம் சிம்பா தான் என சிம்பாவையே நினைக்க வைக்கிறது. மேலும் காட்டை விட்டு ஓடவைக்கவும் செய்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப அந்த சிம்பா வந்து ராஜ்ஜியத்தை பிடிப்பது தான் இந்த கதை. இதை உணர்வுப்பூர்வமான முறையில் Jon Favreau படமாக்கியிருந்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வட்டார மொழிகளுக்கு ஏற்ப வெளியிட்டதன் மூலம் உலக அளவில் 1.656 பில்லியன் டாலர் வசூல் செய்ய உதவியது.
7). Joker - அக்டோபர்
பேட்மேன் படத்தில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கே இருந்து வந்தான் என்று சொல்லாமல் வில்லத்தனம் செய்து வந்த ஜோக்கர் கதாப்பாத்திரத்துக்கு ஒரு பின்னணியை கொடுத்திருந்த படம்தான் நாம் அடுத்து பார்க்கவிருக்கும் படம்.
Todd Phillips இயக்கதில் வெளியான ஜோக்கர் படம், இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்திருக்கிறது. கோதம் நகரத்தின் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தில் கடந்த பல ஆண்டுகளில் சீஸர் ரொமெரோ, ஜாக் நிக்கல்சன், ஹீத் லெட்ஜர் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பாத்திரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்திருப்பார்கள். அதுபோலவே இந்தப் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கும் ஒரு புதிய, கண்ணீரும் ரத்தமும் தோய்ந்த வண்ணத்தைக் கொடுத்திருக்கிறார் ஜாக்வின் ஃபோனிக்ஸ். டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடித்த பிறகு, வேறு யார் அந்த அளவுக்கு ஜோக்கர் கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியும் என நினைத்திருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் சென்றுள்ளார் ஜாக்வின்.
8) The Irishman - நவம்பர்
ஹாலிவுட் இயக்குநர் martin scorsese'க்குனு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனாலேயே இவரோட இயக்கத்தில் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு அதிகபடியான வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படியாக சமீபத்தில் வரவேற்கப்பட்ட படம் தான் ‘தி ஐரிஷ்மேன்’.
எழுத்தாளர் Charles Brandt-ன் I Heard You Paint Houses எனும் நாவை தழுவி martin scorsese இயக்கிருந்த படம் தான் ‘The Irishman'. Robert De Niro, Al Pacino மற்றும் Joe Pesci ஆகியோர் கதாப்பாத்திரத்தில் நடிந்திருந்த இந்த படத்துக்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது. பல திரைப்பட விழா மேடைகளில் அரங்கேற்றப்பட்ட இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்திருந்தது. 1950களில் இருந்த கேங்ஸ்டர்களின் வாழ்வை மறு உருவாக்கம் செய்யும் விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருந்ததால் ஹாலிவுட் ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக கருதப்பட்டது.
9) Ford v Ferrari - நவம்பர்
உலக அளவில் பிரபலமான ஃபோர்ட் மற்றும் ஃபெராரி கார் நிறுவனங்களுக்கு இடையில் நடந்த கார் பந்தய போரை மையமாக வைத்து James Mangold இயக்கத்தில் உருவான படம் Ford v Ferrari.
கார் ரேஸ் வரலாற்றில் 1966 ஆம் ஆண்டு நிகழ்ந்த லீ மேன்ஸ் என்ற உலகப் புகழ் பெற்ற பந்தயத்தை மையாகக் கொண்டு 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படம் தான் ‘ஃபோர்ட் V ஃபெராரி’. லோகன் படத்தை இயக்கிய ஜேம்ஸ் மேன்கோல்டு இப்படத்தை இயக்கியுள்ளார். ஃபோர்ட் நிறுவனம் ரேஸ் கார்களில் சிம்ம சொப்பனமாக விளங்கிய போது தனது போட்டி நிறுவனமான ஃபெராரி காரை முந்தும் வகையில் ஒரு அதிவேக காரை தயார் செய்தது, ஃபோர்ட் நிறுவன கார் பந்தயத்தின் போக்கையே மாற்றிய 34வது கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவம் தான் ஆக்ஷன் பயோகிராபியாக தயாராகிருந்தது. கார் வடிவமைப்பாளராக மேட் டேமனும், கார் பந்தய வீரராக கிறிஸ்டியன் பேலும் நடித்திருந்தனர்.
10. Knives Out - நவம்பர்
படத்துக்கு படம் புதுவிதமான கதையம்சம் இருக்கும். ஆனால் Genre என்ற வட்டத்துக்குள்ள வரும் போது பெரும்பாலும் மிஸ்ட்ரி த்ரில்லர் வகையை சார்ந்த படங்கள் தான் அதிகமான ரசிகர்களை ஈர்க்கும் என்பதை தெளிவுப்படுத்தியிருந்த படம் ‘Knives Out’.
Rian Johnson இயக்கத்தில் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் Daniel Craig-க்கும், கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்து புகழ்பெற்ற Chris Evansனும் சேர்ந்து நடித்திருந்த படம் தான் ‘Knives Out’. ஒரு கொலை மற்றும் அதை சுற்றி இருக்கும் மர்மமான சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தின் கதை நகரும். படத்தில் துப்பறியும் கதாப்பாத்திரத்தில் வந்த டேனியல் க்ரேக் இதில் ஆர்பாட்டமில்லாமல் வந்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் லாபம் பார்த்த இந்த படம் 77வது Golden Globe விருதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!