Cinema

100 டிக்கெட் விற்றதை மறைத்த தியேட்டர் உரிமையாளர் : புகாரளிக்க முடியாமல் திணறும் ‘தம்பி’ பட விநியோகஸ்தர்!

‘கைதி’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் உருவான ‘தம்பி’ படம் கடந்த வாரம் ரிலீஸானது. ‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சத்யராஜ், ஜோதிகா, சௌகார் ஜானகி, நிகிலா விமல் எனப் பலரும் நடித்துள்ளனர்.

ட்ரெய்லர் வெளியான போதே ‘தம்பி’ படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் குடும்பப் படமாக மட்டுமே உள்ளது என பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ‘தம்பி’ படத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை அறிவதற்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அப்படத்தின் தமிழக உரிமையை பெற்றிருந்த விநியோகஸ்தர் சார்பில் தியேட்டர்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

அப்போது, ஒரு திரையரங்கில் 280 பார்வையாளர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் திரையரங்கம் சார்பில் 180 டிக்கெட்டுகளே விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரில் சென்று விசாரித்தபோது,100 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது மறைக்கப்பட்டுள்ளதை கண்டு விநியோகஸ்தர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கலாம் என முடிவெடுத்து சென்றவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அது என்னவெனில், டிக்கெட்டுகள் விற்பனையானதை மறைத்து முறைகேட்டில் ஈடுபட்ட தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதே அந்த விநியோகஸ்தர் சங்கத்தின் செயலாளர்தான் எனத் தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது, திரையரங்க உரிமையாளரின் முறைகேடுகள் குறித்து யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் ‘தம்பி’ படத்தின் தமிழ்நாடு உரிமையைப் பெற்ற விநியோகஸ்தர் திணறி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 125 கோடி வசூல் ரசிகர்களை குஷிபடுத்த சொன்னது; விஸ்வாசம் பட உண்மை வசூலை போட்டுடைத்த பிரபல விநியோகஸ்தர்!