Cinema

இது பரத்தின் கம்பேக் ஆட்டம் : ‘காளிதாஸ்’ சினிமா விமர்சனம்! #kaalidasReview

ஒரே மாதிரி நிகழும் தொடர்ச்சியான தற்கொலைகள். அவை நிஜமாகவே தற்கொலை தானா? இல்லை, திட்டமிட்ட கொலையா? கொலை எனில், செய்தது யார்? காளிதாஸ் அதை கண்டுபிடித்தாரா? அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திருமணமான ஓர் இளம்பெண், மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்து போகிறார். அவரைத் தொடர்ந்து இரண்டு பெண்கள் அதே பாணியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலை என முடிவுக்கு வருகிறார் போலிஸ் அதிகாரி பரத். ஆனால், கொலையாக இருக்கலாம் என விசாரணையை நீட்டிக்கிறார் உயரதிகாரி சுரேஷ் சந்திரமேனன்.

இதற்கு நடுவே தனிமையில் வாடும் பரத்தின் மனைவிக்கு, இன்னொருவரின் மீது காதல் ஏற்படுகிறது. விசாரணையின் முடிவில் கொலையாளியை காளிதாஸ் கண்டுபிடித்தாரா? பரத்தின் மனைவியாக வரும் அன் ஷேத்தலுக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.

இந்த வருடம் பரத்துக்கு இது மூன்றாவது படம். இந்த வருடம் வெளியான ‘சிம்பா’ பரத்தின் வித்தியாசமான முயற்சி. கூடவே, நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த ‘பொட்டு’ ரிலீஸானது. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, பரத்துக்கு ஒரு முழுமையான படமாக ‘காளிதாஸ்’ வெளிவந்திருக்கிறது. ஷார்ப்பான போலிஸ் அதிகாரியாக மிடுக்கும், விறைப்பும் காட்டுகிறார் பரத். சண்டைக் காட்சிகள், மாஸ் சீன்கள், பக்கம் பக்கமாக டயலாக்குகள் என எதுவும் பரத்துக்கு இல்லை. நேர்மையான போலிஸ் அதிகாரியின் கேரக்டரை நடிப்பில் கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார். இது பரத்துக்கு, பக்கா கம்பேக் திரைப்படம் என்றே கூறிப்பிடலாம்.

பரத்தின் மனைவியாக அன் ஷீத்தல் நடித்திருக்கிறார். வழக்கமான ஹீரோவின் மீது பயணிக்கும் கதையாக இல்லாமல், நாயகிக்கு வித்தியாசமான ஒரு ரோல். இவரது காட்சிகள் வரும்போதெல்லாம் பதட்டமும் பற்றிக் கொள்கிறது. தவிர, போலிஸ் உயரதிகாரியாக வரும் சுரேஷ் சந்திர மேனன், ஆதவ் கண்ணதாசன் மற்றும் ஏட்டு சிங்கம் என குறைவான கேரக்டர்கள் தான். ஆனால், கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

அடிக்கடி பாடல்கள், இடையிடையே காமெடி சீன்கள், சாரல் போல ரொமான்டிக் என த்ரில்லர் படத்தைக் கெடுக்கும் எந்த இடையூறும் படத்தில் இல்லையென்பது நிம்மதியான விஷயம். பின்னணி இசையிலும், இரண்டு பாடல்களிலும் தேவையான இசையை மீட்டியிருக்கிறார் விஷால் சந்திரசேகர். அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்திலின் திரைமொழி நன்றாகவே வந்திருக்கிறது.

வழக்கமான த்ரில்லர் கதையென்றாலும், எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் படத்தைக் கொண்டு சென்றதே பெரிய வெற்றி. தவிர, பரத் உட்பட அனைத்து கேரக்டர்களையும் சந்தேகப்படவைக்கும் திரைக்கதை கூடுதல் ப்ளஸ். யார் கொலையாளி என்பதை படத்தில் ஓவியக் குறியீடாக குறிப்பிட்டிருக்கும் இடமெல்லாம் வேற லெவல். ஸ்ரீசெந்திலுக்கு இது டீசன்ட் எண்ட்ரி. கதைக்கு ஊடாகப் பயணிக்கும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைத்துள்ளது. அது மட்டுமின்றி, நிகழ்காலத்தில் திருமணமான சில பெண்களின் மனநிலை மற்றும் அவர்களுக்கு இடையில் இருக்கும் புரிதலை மிக நேர்த்தியாக மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார் இந்த காளிதாஸ்.

தொடக்கம் முதல் இறுதி வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் கதை ஒரே மட்டத்தில் பயணிக்கிறது. பரத்தும், அன் ஷீத்தலும் ரசிகர்கள் மனதில் நிற்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சி இன்னும் வலுவாக இல்லை என்பது மட்டுமே குறை. ‘காளிதாஸ்’ சுவாரஸ்யமான த்ரில்லர். எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் பதட்டத்தோடு நகரும் கதை நிச்சயம் ரசிகனை மகிழ்விக்கும். இந்த வாரத்தில் சினிமா ரசிகர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் ‘காளிதாஸ்’.

- சபரி செல்வவிநாயகம்

Also Read: எளிய வாழ்வியலில் அரசியல் பேசும் ‘குண்டு’ - சினிமா விமர்சனம்