Cinema

’பாலியல் குற்றங்கள் நடக்கப் பெண்களே காரணம்’ : குற்றம்சாட்டும் வகையில் பேசி அதிர்ச்சி கொடுத்த பாக்யராஜ்

புது முகங்கள் நடித்திருக்கும் ’கருத்துகளை பதிவு செய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.,25) சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் என் கருத்துகளை துணிச்சலோடு முன்வைத்ததே சினிமாவில் நான் வெற்றியடைந்ததற்கு காரணம். அதனையே என் உதவியாளர்களையும் பின்பற்ற அறிவுறுத்துவேன்” என்று குறிப்பிட்டார் பாக்யராஜ்.

மேலும், பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.

பெண்கள் முறை தவறிய உறவுகளில் ஈடுபடுவதால் அவர்களின் கணவன்மார்களும் கொலை செய்யப்படுகிறார்கள். ஆனால், ஆண்கள் முறை தவறி போனாலும் முதல் மனைவிக்கு எந்த குறையும் வைப்பதில்லை. இது போன்ற செய்திகள் நித்தமும் பத்திரிகைகளில் வருவதை காணலாம்.

ஆண்களை மட்டுமே குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் எல்லாம் சரியாக அமையும். செல்போன்கள் வந்ததும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இல்லாமல் போய்விட்டது. அதனாலேயே பெண்களுக்கு சுயக் கட்டுப்பாடு வேண்டும் என கூறப்படுவதுண்டு.

பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆண்கள் செய்வது தவறென்றால், அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பெண்கள் மீதும் தவறு உள்ளது” என பாக்யராஜ் பேசியுள்ளார்.

இதனையறிந்த நெட்டிசன்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதற்கு எல்லாம் யார் காரணம் என்று பாக்யராஜுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.