Cinema

அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கும் ‘த்ரிஷ்யம்’ இயக்குநரின் படங்கள்... பாலிவுட் ரசிகர்களை ஈர்ப்பாரா?

மலையாள திரைத்துறையில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூலம் அனைத்து மொழி சினிமாத் துறையிலும் பிரபலமடைந்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

அதற்கு முன்னதாக மலையாளத்தில் 4 படங்களுக்கு கதை, திரைக்கதையை உருவாக்கி இயக்கியிருந்தாலும் மோகன்லால், மீனா நடிப்பில் த்ரில்லர் பாணியில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் ஜீத்து ஜோசப்புக்கு மிகப்பெரிய படிக்கல்லாக அமைந்தது. இந்தப் படம் கேரள அரசின் விருதும் பெற்றிருந்தது.

அதற்குப் பிறகு, த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தையும் ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். 2015ல் வெளியான இந்தப் படம் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் உருவாகியிருந்தது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், த்ரிஷ்யம் படம் இந்தி, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

மீண்டும் மலையாள சினிமாவுக்குச் சென்ற ஜீத்து ஜோசப் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நான்கு படங்களை எடுத்து முடித்திருந்த அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் முதன்முறையாக பாலிவுட்டுக்கும் சென்றுள்ளார் ஜீத்து.

தமிழில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து. தனக்கே உரிய பாணியான ஆக்‌ஷன் த்ரில்லரிலேயே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். படத்தின் டீசர் கடந்த 15ம் தேதி வெளியாகி 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இது வருகிற டிசம்பர் மாதம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, The Body என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பாலிவுட்டில் என்ட்ரியாகியுள்ளார் ஜீத்து ஜோசப். இது 2012ல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான El cuerpo படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். பிணவறையில் இருந்து காணாமல் போன பெண்ணின் சடலத்தை தேடுவது தொடர்பான த்ரில்லிங் நிறைந்த போலிஸாரின் விசாரணை குறித்த கதையே The Body.

இதில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரிஷி கபூர், இம்ரான் ஹாஷ்மி, ஷோபிதா துலிபாலா, வேதிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற டிசம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த நவ.,14ல் வெளியான The Body படத்தின் ட்ரெய்லரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தமிழில் தம்பி, இந்தியில் The Body என த்ரில்லர் ஜானரில் வெவ்வேறு கதைக்களத்தை கொண்ட ஜீத்து ஜோசப்பின் இரண்டு படங்களும் டிசம்பர் மாதத்தில் இரு வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவ்விரு படங்களும் மொழிகளை கடந்து சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்ப்பட்டு வருகிறது.

எப்போதும் போல, த்ரில்லரை கையில் எடுத்துள்ள ஜீத்து ஜோசப்பின் இந்தப் படங்கள் ரசிகர்களை இருக்கை நுணிக்கு இட்டுச்செல்லுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.