Cinema

“எல்லாம் இங்கே ஆரம்பிச்சது” - ‘அசுர’க்கலைஞன் வெற்றிமாறனின் முதல் படம்! #12YearsOfPolladhavan

“மூணு பேர வெட்டிட்டேன்! ரெண்டு பேருக்கு நெறைய அடிபட்டுருக்கு, இதெல்லாம் என் லைஃப்ல நடக்கும்னு, நான் நினைச்சுக் கூட பாக்கல! இதுக்குலாம் காரணம் நான் ஆசப்பட்டு வாங்குன இந்த பைக் தான்னு சொன்னா நம்ப முடியுதா” இப்படி தனுஷின் வாய்ஸ் ஓவர் வெளிவந்து இன்றோடு 12 வருடங்கள் ஆகிவிட்டது. எத்தனையோ முறை ‘பொல்லாதவன்’ திரைப்படம் குறித்து நாம் சிலாகித்துவிட்டோம். ஆனாலும்கூட இன்னும் பேச நிறைய இருக்கிறது.

எந்தவொரு நிலப்பரப்பிலும் எப்போதும் இரண்டு விதமான வாழ்வியல் இருக்கும். அதில் கவர்ச்சியானது எளிதாகவே சினிமாவாக மாறிவிடுகிறது. அதனால்தான் வெற்றிமாறன் போன்ற அதிசிறந்த இயக்குனர்கள் இந்த இரண்டு விதமான வாழ்வியல்கள் இணையும் புள்ளியிலிருந்து தங்கள் சினிமாவை படைக்கின்றனர். அந்த நிலையில்தான் அந்த சமூகத்தின் மிகச்சரியான குறுக்குவெட்டுத் தோற்றம் வெளிப்படுகிறது. ‘பொல்லாதவன்’ இந்த முயற்சியின் சரியான அடையாளம்.

இந்தப் படத்தில் அந்த கதாநாயகன் தன் நண்பர்களிடம், அவனது காதலியைப் பற்றியும், அவளுடனான உறவைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்கும் காட்சிகள், வசனங்கள் அனைத்தும் தமிழ் சினிமா சமூகம் என்றென்றைக்கும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது. அத்தனை முக்கியமான எழுத்து நடையைக் கொண்டிருப்பார் வெற்றி.

“இதெல்லாம் நமக்கு மேல ஏதோவொரு ஃபோர்ஸ்தான் டிசைட் பண்ணுதுல” இதுபோன்ற வசனங்கள்தான் இந்தப் படத்துடன் ரசிகனை ஒன்ற வைக்கிறது. பதின்ம வயது இளைஞர்கள்தான் இங்கு வெளியாகியிருக்கும் அத்தனை சினிமாக்களின் மையமும். ஆனாலும்கூட அவர்களுக்கு நெருக்கமான சினிமாவைத் தருவதற்கு வெற்றியைப் போன்ற இயக்குனர்கள் எப்போதாவது தான் வருகிறார்கள்.

தமிழ் மக்களுக்கு அவர்களைப் பற்றிய ஒரு கதை சொல்லும் வழக்கமான சினிமாதான் பொல்லாதவன். ஆனால் தன் களமாக வெற்றி எடுத்துக்கொண்டது மனித மனங்களின் ஆழத்தில் இருந்து வெளிப்படும் வன்மம். அந்த வன்மத்தை கதாநாயகன் தன் தந்தையிடம் எப்படி வெளிப்படுத்துகிறான்? காதலன் தன் காதலியிடம் எப்படி வெளிப்படுத்துகிறான்? வில்லன் தன் அண்ணனிடம் எப்படி வெளிப்படுத்துகிறான்? முக்கியமாக அந்த வில்லனிடம் தனக்கு இருக்கும் வன்மத்தை அந்த ஹீரோ எப்படி வெளிப்படுத்துகிறான்? இந்த கேள்விகளில் தான் அடங்கியிருக்கிறது அந்த சினிமா சொல்லப்பட்ட விதத்தின் சுவாரஸ்யம்.

பெரிதாக எந்தப் பின்புலமும் இல்லாத அந்த கதாநாயகன், வில்லனின் கண்களை நோக்கி எந்த பயமும் இல்லாமல் “அட்றா பாக்கலாம்” எனச் சொல்லும் அந்த காட்சியிலேயே முடிவாகிவிட்டது வெற்றிமாறன் என்னும் கலைஞன் எப்படிப்பட்ட சினிமாக்களை படைக்கப் போகிறான் என்பது, அதில் எந்தக் குறையும் வைக்காமல் ஜெயித்துக்கொண்டும் இருக்கிறார் வெற்றிமாறன்!