Cinema

‘இந்திய சினிமாவின் புதிய வெளிச்சம்’ : இயக்குநர்களின் இயக்குநர் ரித்விக் கட்டக்! - #HBD Ritwik Ghatak 

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவில் புதிய திரைமொழியை கையாண்ட இயக்குநர் மட்டுமல்லாது வங்கத்தின் ஆகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். திரையுலக மேதை நிமாய் கோஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர்.

இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ என்ற படைப்பில் நடிகராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

ரஷ்ய திரைமேதைகளான ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின் போன்ற படைப்பாளிகளின் மூலம் திரை அறிவை செழுமைப்படுத்திக் கொண்டவர். இதன்வாயிலாகவே, தனது முதல் படமான ‘நாகரிக்’கை 1952ல் உருவாக்கினார்.

தான் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு வேறொரு பகுதிக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டால் அல்லது அகதியாக வந்து வாழ்ந்தால் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஏற்படும் கையறுநிலை ரித்விக் கட்டக்கின் படங்களில் எதிரொலித்திருக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் அவர், சுதந்திரத்திற்கு முன்பாக 1925 ஆம் ஆண்டு வங்கத்தின் டாக்கா நகரில் பிறந்தவர். விடுதலைக்குப் பின்னர் மேற்கு வங்கத்திற்கு குடியேறுகிறார். தேச பிரிவினை என்பது ரித்விக் கட்டக்கை கடுமையாக பாதித்தது. புலம்பெயர்ந்தவர்களின் வலியை தன்னுடைய படங்களின் மூலமாக கடத்தியவர் இவர்.

எதார்த்தங்களை பேசின கட்டக்கின் மாற்று சினிமாக்கள். இவரது ‘மேகா தாகா தாரா’ இந்திய சினிமாவில் மகத்தான சினிமாவாக போற்றப்பட்டு வருகிறது. இந்த சினிமாதான் தமிழில் கே.பாலச்சந்தரால் பிற்காலத்தில் எடுக்கப்பட்ட ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற வெற்றிச் சித்திரம்.

தன்னைப்பற்றி தன் படங்கள் தான் பேச வேண்டும் என்ற கொள்கையில் உறுதியோடு இருந்தவர் கட்டக். அதனை செய்தும் காண்பித்தார். கட்டக் எப்படிப்பட்டவர் என்பதை அவரது படங்களை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். எதற்கும் சமரசம் கொள்ளாத கலைஞனாக வாழ்ந்தவர் அவர்.

ரித்விக் கட்டக்கின் ‘டிரையாலஜியான’ மேக தக்க தாரா [1961], கோமல் கந்தார் [ 1962 ], சுபர்ன ரேகா [ 1963 ] தொடர்ந்து வெளியாகியது. ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. கோமல் கந்தார் கதையும் அகதிகள் மனநிலையை பிரதிபலிக்கும் கலைஞர்களின் கதைதான்.

1958ல் வெளியான இவரது படமான ‘Bari Theke Paliye’ , ஒரு குறும்புக்காரச் சிறுவன், தனது கிராமத்திலிருந்து ஓடிப்போய், கல்கத்தாவுக்குச் சென்று அங்கே அடையும் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இவருடைய நண்பரான இயக்குநர் சத்யஜித் ரே, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தி, ரித்விக் கட்டக்கை பூனா பிலிம் இன்ஸ்டியூட் துணை முதல்வராக்கினார்.

1966ல் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூடில் நுழைந்த ரித்விக் கட்டக், தன்னைப்போலவே சுதந்திர சிந்தனையுள்ள, மாற்றுசினிமாவை நேசிக்கக் கூடிய கலைஞர்களை உருவாக்கினார்.

ஜான் ஆப்ரஹாம், அடூர் கோபாலகிருஷ்ணன், குமார் ஷஹானி ஆகிய, இவரிடம் திரைப்படக் கல்லூரியில் பாடம் படித்த மாணவர்கள் ஆவார்கள். தன் வாழ்நாளில் 8 சினிமாக்களை மட்டுமே எடுத்த ரித்விக் எத்தனையோ சினிமா வல்லுநர்கள் உருவாகுவற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

கலைப்படங்களை எடுத்துவந்த ரித்விக் கட்டக் வாழ்வில் அவரது கதை ஒன்று வணிக ரீதியில் இமாலய வெற்றி பெற்றது. கட்டக் கதை, திரைக்கதை எழுதி வங்காள இயக்குனர் பீமல் ராய் இயக்கத்தில் வெளியான ‘மதுமதி’ என்ற ஹிந்தி திரைப்படம் 1958ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாற்றுசினிமாவின் முன்னோடி ரித்விக் கட்டக், 1925 ஆம் ஆண்டு நவம்பர் 4ந் தேதி பிறந்து, 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ந் தேதியன்று காலமானார். வெறும் 50 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர், 25 ஆண்டுகள் திரையுலக வாழ்வில் புதிய பரிமாணத்தை அடைந்தவர்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் சிறந்த கதையாசிரியருக்கான விருதினையும், இயக்குநருக்கான விருதினையும் பெற்றவர். இந்திய அரசு 2007 ஆம் ஆண்டு அவரது நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளது.

அவருடைய திரைமொழி, காட்சிகளின் கோணம், யதார்த்தம் போன்றவற்றால் ரித்விக் கட்டக் மரபு என்ற புதிய வடிவம் இந்திய மாற்று சினிமாவில் உருவாகியுள்ளது. இதன்மூலமாக, கட்டக் என்றென்றும் இயக்குநர்களின் இயக்குநராக திகழ்ந்து வருகிறார் என்பதே உண்மை.