Cinema
விஜய் அண்ணனுக்கு சொன்னதைச் செய்தாரா அட்லி? - ‘பிகில்’ மேஜிக் நடந்ததா இல்லையா ? #BigilReview
’தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு, அட்லி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விஜய் நடித்து இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது ‘பிகில்’ திரைப்படம். விஜய் படங்களிலேயே சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது ஏ.ஜி.எஸ் நிறுவனம்.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொன்னதில் இருந்தே, படத்தில் கதைத் திருட்டு, தயாரிப்பு சிக்கல், அட்லிக்கு ரெட் கார்டு, சென்ஸார் சிக்கல், ரிலீஸ் தாமதம் என அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் வந்தன. இறுதியாக சிறப்புக்காட்சி திரையிடலுக்கும் சிக்கல் என்று வந்தபோது, எடப்பாடி எங்களுக்கு அப்பா மாதிரி என்று விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்ல, எப்படியோ திட்டமிட்டபடி அக்டோபர் 25ம் தேதி படம் ரிலீஸ் ஆனது.
படம் எப்படி இருக்கும் ? புதிதாக என்ன செய்திருக்கிறார் அட்லி ? விஜய் எப்படி இருக்கிறார் ? பெண்ணியம் பேசும் ஸ்போர்ட்ஸ் சினிமா கதையா ? என பல்வேறு கேள்விகளோடு உள்ளே சென்று அமர்ந்த ரசிகர்களுக்கு, தன்னுடைய ‘வெறித்தனத்தை’ காட்டி விருந்து வைத்திருக்கிறார் அட்லி.
வழக்கமான ஸ்போர்ட்ஸ் சினிமாவில் வரும் கதை என்றாலும், ஏற்கனவே சக்தே இந்தியா, லீ, கனா, ஜீவா, நட்பே துணை, தளபதி என பல்வேறு திரைப்படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும் (இன்னும் சில படங்களும் நினைவுக்கு வரலாம்!) அதை வேறு விதமாக, புதிதாகக் கொடுக்க முயன்று இருக்கிறார் இயக்குநர் அட்லி.
பெண்கள் கால்பந்து அணியின் கோச்சாக இருக்கும் கதிர், ஒரு சிறு விபத்தினால் கோச் பதவியில் தொடர முடியாமல் போக, அவருடைய நண்பனும், ரவுடியுமான மைக்கேல் அந்த அணியின் கோச் ஆகி, அந்தப் பெண்களை எப்படி ஊக்கப்படுத்தி வெற்றி பெற வைக்கிறார் என்பதே படத்தின் கதைக் கரு.
இதில் ரவுடிக்கும், கால்பந்துக்கும் என்ன சம்பந்தம்? கதிருக்கும், மைக்கேலுக்கும் என்ன தொடர்பு ? பிகில் யார்? என விரியும் ப்ளாஷ்பேக்கில் இருக்கிறது மீதிக் கதை.
யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், தீனா, மனோ பாலா, தேவதர்ஷினி, செளந்தரபாண்டியன் ஆகியோர் இல்லாவிட்டாலும் கதைக்கு (எந்த படத்தின் கதை என்பதை கேட்காதீர்கள்!) எந்த பாதிப்பும் இருக்காது. அந்த அளவு தான் அவர்கள் கதையில் அவர்களது முக்கியத்துவம் இருக்கிறது.
மேலும் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி ஆகியோரோடு இந்துஜா உட்பட 10 கால்பந்தாட்ட வீராங்கனைகளையும் உப்பு சப்பில்லாமல் நடிக்க வைத்து வேற லெவல் ஆக்கி இருக்கிறார் அட்லி!
ஏற்கனவே சொன்னது போல ஏற்கனவே பார்த்த படங்களில் கலவையாக இருந்தாலும் அதை எப்படி நிகழ்த்தி காட்டி இருக்கிறார் என்பதில்தான் அட்லி மேஜிக் இருக்கிறது.
படத்தின் முதல் பாதியில் ஒரு கதை, இரண்டாம் பாதியின் முதலில் ஒரு கதை, இறுதியில் ஒரு கதை, க்ளைமேக்ஸ் பகுதியில் ஒரு கதை என பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் இயக்குநர். (அட.. கலாய் இல்லைங்க.. சீரியஸ்)
மாஸ் படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதை 1001-வது முறையாக இந்தப் படத்தில் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இது என்ன மாதிரியான படம் என்று கேட்டால் விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் தலை சுற்றித் தான் போகும்.
எளிய மனிதர்களின் வாழ்க்கை, பெண்ணியம், விளையாட்டில் அரசியல், உருவகேலி என எதைஎதையோ தொட்டுச் செல்லும் பிகில், எதிலுமே முழுமையாகவில்லை. ஒரு சில மாஸ் காட்சிகளைத் தவிர படத்தில் கதை என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில், பாதி நேரத்தை கால்பந்து விளையாட்டைக் காட்டியே நேரம் கடத்துவது எல்லாம் படு போர்.
6 சண்டைக்காட்சிகள், 6 பாடல்கள், 5 கால்பந்து போட்டிகள் என 3 மணி நேரத்திற்கு நீளும் படம் சாதாரண சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். படத்தில் வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்களைத் தவிர வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை, தீம் ஆகிய இரண்டிலுமே ரஹ்மான் தெரியவில்லை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நபர் ஜி.கே.விஷ்ணு, படத்தின் ஒளிப்பதிவாளர். மைக்கேல் விஜய் படு ஃப்ரெஷ், ஸ்டைலிஷ் என்றால் ராயப்பன் விஜய் மாஸ். குறிப்பாக வெறித்தனம், சிங்கப்பெண்ணே பாடல்களை படமாக்கிய விதம். உண்மையிலும் ’வெறித்தனம்’.
இத்தனை விஷயங்கள் இருந்தாலும், தியேட்டருக்குள் இருக்கும்போது இது எதையுமே யோசிக்க வைக்காத ஒரே விஷயம் விஜய். எப்போதும் போல எனர்ஜியாக, இளமையாக இருக்கும் விஜய் எல்லா ஃப்ரேமிலும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக விஜய்யின் டான்ஸ் கவனம் ஈர்க்கிறது. வயதுக்குண்டான எந்த ஒரு சிரமும் இன்றி எளிதாக நடனமாடி அசத்தும் வகையில், விஜய்யின் ஃபிட்னஸ் லெவல் பிரமிக்க வைக்கிறது. விஜய் என்ற ஃபேக்டரை வைத்துப் பார்க்கும் போது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது எல்லோருக்கும் இந்தப் படம் ஒரு ட்ரீட்.
இறுதியாக ஒரே விஷயம்தான். படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அட்லி, ‘எங்கண்ணனுக்கு நான்தான் செய்வேன். நான் மட்டும்தான் செய்வேன்’ என்று பேசினார். உண்மையில், அண்ணனுக்கு சொன்னதை அட்லி செய்திருக்கிறாரா என விஜய் ரசிகர்களைக் கேட்டால் ’பிகில்’ அடிப்பார்கள். பொதுவான சினிமா பார்வையாளர்களைக் கேட்டால் இது சுமாரான செய்கை என்பதே பதிலாக இருக்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!