Cinema
“சூப்பர்ஹிட் என்ட்ரி.. சூப்பரான ரீ-என்ட்ரி” : இளசுகளின் இளவரசி ஜோதிகா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
ஹீரோயின் என்றால் அளவான உடல்வாகு, ஆர்ப்பரிக்கும் அழகு, மனதைக் கொள்ளைக் கொள்ளும் கவர்ச்சி என சில நிபந்தனைகளுக்குள் சிக்கி இருந்த தமிழ் சினிமாவில் தனது மைனஸ்கள் அனைத்தையும் ப்ளஸ்ஸாக மாற்றி கண்களாலேயே பல கவிதைகள் சொல்லி ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிகா எனும் ஜோ.
இன்றைய இளைஞர்களிடம் க்யூட்டாக துருதுருவென இருக்கும் ஹீரோயின்ஸ் யாரையாவது சொல்லுங்கள் என்றால் நிச்சயம் நஸ்ரியா, ஜெனிலியா பெயரைத் தான் சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி ஜோதிகா தான் என்பதை கோலிவுட்டை முழுமையாகத் தெரிந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது. கோலிவுட் திரையுலகில் பத்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளான இன்று அவருக்கான பிறந்தநாள் நல்வாழ்த்துகளோடு கூடிய ஒரு சின்ன ரீ-கேப்பை காணலாம்.
1998ம் ஆண்டு டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘டோல் சஜா ரக்னா’ என்ற பாலிவுட் படம் மூலமாக சினிமா எனும் பெரும் வட்டத்திற்குள் அழைத்து வரப்பட்டார் ஜோதிகா. பின்னர் அடுத்த ஆண்டே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வாலி’ படத்தில் சிறிய கேரக்டரில் சோனாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் ஜோதிகா. ரம்பா, சங்கவி, நக்மா, சிம்ரன் என கவர்ச்சி காட்டி நடித்த முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் அதை முன்வைக்காமல் வந்திறங்கினார் ஜோதிகா.
தமிழில் முதல் படமே அமோக வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால் அந்த வெற்றி ஜோதிகாவுக்கு சொந்தமானதாக அமையவில்லை. காரணம் கதையில் அஜித்துக்கும் சிம்ரனுக்குமான ஆளுமையே அதிகமாக இருந்தது. பின்னர் அதே ஆண்டில் சூர்யாவுடன் சேர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் நடித்திருந்தார். ஜோதிகாவை பார்த்த முதல் பார்வையிலேயே சூர்யாவிற்கு காதல் மலர அந்தப் படம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த படமாக அமைந்தது.
அடுத்தடுத்து வெளியான ‘முகவரி’, ‘குஷி’, ‘ரிதம்’, ‘தெனாலி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுத்தந்தன. முகவரியில் அஜித்தின் கனவை நனவாக்கத் துடிக்கும் காதலியாக வந்தவர் அடுத்த படத்திலே விஜய்க்கு ஜோடியாகி ‘குஷி’யில் ஜெனியாக வந்து அவரின் முதல் கேரக்டரான சோனாவை மறக்கச் செய்திருந்தார்.
ஆணாதிக்கம் நிறைந்த சினிமா உலகில் என்ட்ரியான அடுத்த ஆண்டே ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்துவிடும் தைரியம் எந்த ஹீரோயினுக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஆனால் ‘சிநேகிதியே’வில் அதையும் செய்து காட்டியிருந்தார் ஜோதிகா. அறிமுகமானது முதல் உச்ச நடிகர்களுடனேயே ஜோடியாக நடித்ததாலோ என்னவோ ஜோதிகாவிற்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகவே இருந்தது.
அந்த வெற்றி சோலோ ஹீரோயினாகும் போதும் இவருக்குக் கைகொடுத்தது. தொடர்ந்து 90களின் முக்கிய நடிகர்களாக இருந்த அஜித், விஜய், மாதவன், பிரஷாந்த், சிம்பு, ஷாம், சூர்யா,விக்ரம் என அனைவரோடும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் ரசிகர்களின் மனதில் எளிதில் சென்று சேர்ந்துவிட்டார். போட்டியாக எத்தனையோ நாயகிகள் இருந்தும் ஜோதிகா அவர்களிடமிருந்து ரசிகர்களின் கண்களுக்குத் தனித்துத் தெரிந்திருந்தார்.
ரஜினியுடன் ‘சந்திரமுகி’, கமல் ஹாசனுடன் ‘தெனாலி’, ‘வேட்டையாடு விளையாடு’, அஜித்துடன் ‘வாலி’, ‘முகவரி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, விஜய்யுடன் ‘திருமலை’, ‘குஷி’, சரத்குமாருடன் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, சிம்புவுடன் ‘சரவணா’, ‘மன்மதன்’, என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
சூர்யாவுக்கு மிகப் பொருத்தமான ஜோடி என கருதப்பட்டதால் அவருடன் மட்டும் ஆறு படங்கள் ஜோடியாக நடித்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் தொடங்கி உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் R, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் பக்காவாக இருந்தது. குறிப்பாக ‘காக்க காக்க’ படத்தில் நடித்தபோதுதான் சூர்யாவின் காதலுக்கு ஜோதிகா சம்மதம் தெரிவித்திருந்தார். திரையில் பொருத்தமான ஜோடியாக இருந்த சூர்யா-ஜோதிகா பின்னர் நிஜத்திலும் ஜோடியாகினர்.
திருமணத்திற்குப் பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015ம் ஆண்டு ‘36 வயதினிலே’ என்ற படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இயற்கை காய்கறி மற்றும் திருமணமான பெண்களின் தனிமை குறித்த விழிப்புணர்வு திரைப்படமான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இவருக்கான பட வாய்ப்புகள் மீண்டும் குவியத் துவங்கின. ஆனால் தனது கதைத் தேர்வுகளில் ஜோதிகா அதிக கவனம் செலுத்தினார். ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ஜாக்பாட் என அடுத்தடுத்து சோலோ ஹீரோயினாக வெற்றி கண்ட இவர் மணிரத்தினத்தின் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தார்.
அந்தப் படமும் வசூலில் சக்கைப்போடு போட்ட பின்னர் வெளியான ‘ராட்சசி’ ஜோதிகாவை சீனா வரை கொண்டு சேர்த்துள்ளது. இந்தப் படத்துக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அரசுப்பள்ளி ஆசிரியர்களை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தப் படம் தற்போது சீனாவில் சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் பங்கேற்கிறது. திரையுலகம், குடும்பம் என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, திரையுலகில் இன்னும் பல சாதனைகளையும் விருதுகளையும் குவிக்க இந்த இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!