Cinema
“ஒன் மேன் இண்டஸ்ட்ரி” - அமிதாப் பச்சன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. ஆனாலும் இங்கு சில கலைஞர்கள் மொத்த சினிமாவிற்கும் தனியொரு மனிதனின் முகத்தை மாட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு முகம் தான் அமிதாப் பச்சன். இது வெறும் புகழ்ச்சிக்காக சொல்லப்பட்டதல்ல. 1970 மற்றும் 80களில் இருந்த இந்திய சினிமாவைக் கண்ட ஒரு பிரெஞ்சு இயக்குனர் உண்மையாகவே அமிதாப்பச்சனை பார்த்து 'ஒன் மேன் இண்டஸ்ட்ரி' என்று கூறினார்.
சிலருக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தை அளவிடுவது மிகக் கடினமானது. தமிழகத்தில் உச்சபட்ச புகழை ரஜினி அளவிற்கு புகழ்பெற்றவர் என்று கூறுவதைப்போல் தான் இந்தியாவில் அமிதாப்பச்சன் பெற்றிருக்கும் புகழ்.
ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொல்லவேண்டுமானால் ஒரே ஒருமுறை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது கொண்ட நட்பால் தேர்தல் அரசியலில் களமிறங்கினார் அமிதாப் பச்சன். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை யாரும் பெற்றிராத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். கொஞ்சம் ஆழமான உதாரணம் வேண்டுமென்றால் ஒன்று சொல்லலாம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை உச்சத்திலிருந்த 70-80 காலகட்டத்தில் இவர் உருவாக்கிய 'ஆங்க்ரி யங் மேன்' கதாபாத்திரம் அப்போதைய இந்திய இளைஞர்களின் அடையாளமாக மாறியது. சாதாரண இளைஞர்கள் மட்டுமல்ல, அப்போது வளர்ந்து கொண்டிருந்த மற்ற ஹீரோக்கள்கூட 'ஆங்க்ரி யங் மேன்' கதாபாத்திரத்தை தங்கள் படங்களில் ஏற்று நடித்து அவர்களை வளர்த்துக்கொண்டனர்.
'ஷன்ஜீர்', 'ஷோலே', 'அக்னீபாத்' என அப்போது இவர் நடித்த படங்களின் ஹிட் என்பது வெறும் வசூலாக மட்டுமல்லாமல், இவற்றில் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் ரோல்மாடல்களாக வலம்வந்தவை. சரியாகச்சொன்னால் அதன்பின்னான இந்திய சினிமாவை வடிவமைத்தவை. எனவே அந்த காலகட்டங்களில் முயற்சித்த மாற்றுசினிமாக்கள் என்பதன் உண்மைப்பொருள் அமிதாப் பச்சனின் சினிமாவிற்கு நேரெதிர் திசையில் நிற்பதுதான்.
இங்குதான் நாம் அமிதாப் எனும் அதிசயத்தை உணரமுடியும். நிகழ் சினிமாவில் செய்யப்படும் மாற்றுசினிமா முயற்சிகளில் மீண்டும் அமிதாப் தேவைப்படுகிறார். 'பிக்கு', 'ஷமிதாப்' போன்றவை அதன் உதாரணங்கள்.
அமிதாப்பின் மிகமுக்கிய அடையாளம் அவரது குரல். இத்தனை வருடங்கள் அவர் சினிமாவிற்கு செய்த பணிக்கு பலனாக அவர் குரலுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம்தான் ஷமிதாப். இப்படி இதனினும் அதிகமாக அவரைக் கொண்டாட வேண்டும்.
அமிதாப்பின் தந்தை ஹரிவன்ஷிராய் பச்சன் ஒரு அபாரமான இந்திக் கவிஞர். அவர் முதலில் ‘இன்குலாப்' என்றுதான் பெயர் சூட்ட ஆசைப்பட்டார். ஆனால் ஒரு நண்பரின் யோசனையால் 'அமிதாப்' எனப் பெயரிட்டார். அதற்கு 'நிலையான ஒளி' என்று பொருள். எத்தனை பொருத்தமான பெயர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இந்த ஒளி நிலைத்து ஒளிர்கிறது. ஒரு கலைஞனின் வாழ்வியல் என்பது ஒருகட்டத்திற்குப் பிறகு வெறும் இயங்கியலிலேயே அடங்கியிருக்கிறது. இன்னும் இன்னும் தொடர்ந்து இயங்குங்கள் அமிதாப்!
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!