Cinema

“நடிப்பும் நக்கலும்” : நடிகர் சத்யராஜ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூப்பர் ஹிட் படம் Identification-ஆக இருக்கும். ஆனால் கோலிவுட்டின் புரட்சி தமிழனுக்கு ஒவ்வொரு படமும் தனி அடையாளம் தான். இவரது ஒவ்வொரு கதைத் தேர்விலும் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது, ஏற்று நடிக்கும் அனைத்துப் படத்திலும் தனக்கான பாணியில் கதையை நகர்த்திச் செல்லும் இவரே பல படங்களுக்கு அடையாளமாக இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த நடிகன் தான் இன்று பிறந்தநாள் காணும் சத்யராஜ்.

சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில்தான் பெரும்பாலும் நடித்து வருகிறார். அதைப் பார்க்கும்போது ஒரு காலத்தில் பட்டாஸாக நடித்த நடிகர் சத்யராஜா இவ்வளவு அமைதியாக என்று வியப்பு ஏற்படுகிறது. சத்யராஜ் நடித்து பிரபல இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய திரைப்படம் ‘மக்கள் என் பக்கம்’. இதில் வில்லன் போல தோற்றமுடைய ஹீரோதான் சத்யராஜ். ரவுடி என்றால் எப்படி நடை உடை பாவனைகளை திரைப்படத்தில் வெளிப்படுத்த வேண்டும் அதிலும் ஒரு ஸ்டைலான ரவுடி எப்படி இருப்பார் என்ற வகையில் மிக ஸ்டைலாக சாம்ராஜ் என்ற கதாபாத்திரத்திலேயே வாழ்ந்திருப்பார் சத்யராஜ்.

சத்யராஜின் நடிப்பைப் பார்த்து வியந்து, தான் நடிக்காமல் சத்யராஜை நடிக்க வைத்து தனது கம்பெனியான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தனது ஆஸ்தான இயக்குனரையே இயக்க வைத்து ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற அற்புத திரைப்படத்தை தயாரித்தவர் கமல்ஹாசன். இதற்கு காரணம் சத்யராஜின் ஸ்டைலான நடிப்பு, அதற்கு முன்பு கமலுடன் இணைந்து நடித்திருந்த காக்கி சட்டை, விக்ரம், எனக்குள் ஒருவன், சட்டம் என் கையில் படங்களில் சத்யராஜின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

அதிலும் ‘காக்கி சட்டை’ படத்தில் இடம்பெற்ற தகடு தகடு வசனம் மிகப் புகழ் பெற்றது விக்ரம் படத்தில் ராக்கெட் கடத்தல்காரனாக ஸ்டைலிஷான வில்லனாக மிரட்டி இருப்பார். “சொக்கலால் பீடி குடிச்சுக்கிட்டு இருந்த நீ மதகுருவா” என வில்லன் ஒருவனை பார்த்து நக்கல் வசனம் பேசுவார். கொங்குத் தமிழ் பேச்சை நகைச்சுவை கலந்து தனக்கேயுரிய பாடி லாங்வேஜில் வெளிப்படுத்துவதில் சத்யராஜுக்கு நிகர் அவரே.

இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் பெஸ்ட் காம்போ. வில்லனாக தொடர்ந்து நடித்து வந்த சத்யராஜை முதலில் ஹீரோவாக நடிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ரகுநாத். ஆனால் இதிலும் வில்லத்தனம் கலந்த ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருப்பார். சத்யராஜை முதன்முதலில் வில்லத்தனம் இல்லாத முழுமையான ஜனரஞ்சக ஹீரோவாக நடிக்க வைத்த முழு பெருமையும் இயக்குனர் பாரதிராஜாவையே சாரும். அவர் இயக்கிய ‘கடலோர கவிதைகள்’ படத்தின் சின்னப்பதாஸ் என்ற கேரக்டர் மூலம் சத்யராஜை பிரபலமாக்கினார். இளையராஜாவின் பாடல்கள், பாரதிராஜா இயக்கம் என எல்லாமே சிறப்பாக இருந்த அப்படத்தில் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சத்யராஜ் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்த நேரத்தில் ஹீரோ அல்லாத, ஆனால் பலம் வாய்ந்த பாலுத்தேவன் என்ற கேரக்டர், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பாரதிராஜாவால் மீண்டும் கிடைத்தது. அதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், சத்யராஜை கட்டிப்பிடித்து பாராட்டிய ‘வேதம் புதிது’ திரைப்படம். பாலுத்தேவன் என்ற கேரக்டரில் ஜாதி ரீதியான பிரச்னைகளையும் மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவராக சத்யராஜ் வாழ்ந்திருப்பார். சத்யராஜின் திரையுலக வாழ்வின் திருப்புமுனை படம் இது.

இதுபோல சத்யராஜ் நடித்து மணிவண்ணன் இயக்கத்தில் வந்த அமைதிப்படை படமும் சத்யராஜ் திரைப்பயணத்தில் சிறந்த படங்களில் ஒன்று. வசனம் பேசுவதில் சத்யராஜை மிஞ்ச ஆள் இல்லை என்பதை உணர்த்த அமைதிப்படை படத்தில் அதற்கான காட்சிகளையும் சத்யராஜுக்காக நிறையவே வைத்திருப்பார் மணிவண்ணன். அதே போல கவுண்டமணி - சத்யராஜ் கூட்டணி என்றாலே மறக்கமுடியாத அளவுக்கு இவர்களின் தாய்மாமன், புது மனிதன், மாமன் மகள், நடிகன், மதுரை வீரன் எங்க சாமி, பங்காளி, மகுடம் படங்களின் காமெடிகள் பட்டையைக் கிளப்பின.

சத்யராஜ் நடிப்பில் வால்டர் வெற்றிவேல், ரிக்‌ஷா மாமா, பாகுபலி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, முதல் மரியாதை என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சத்யராஜ். பல விதமான விருதுகளை தனது நடிப்புக்காக வாங்கி குவித்தவர் சத்யராஜ். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனது பணியை தன் சொந்த படமான ‘வில்லாதி வில்லனில்’ செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பாகுபலி கட்டப்பா வரை இன்றைய தலைமுறையையும் கவர்ந்திழுக்கும் அற்புத ஆற்றல் கொண்ட நடிகர் சத்யராஜுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!