Cinema
“எளிய கதைகளின் நாயகன்” : பாண்டியராஜன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
தமிழ் சினிமா இதற்குமுன் இப்படி ஒரு ஹீரோ இன்ட்ரோவை பார்த்ததில்லை. அந்தக் காட்சியில் பாண்டியராஜன் வெளிப்படுத்தியது ஒரு அசல் இளைஞனுக்கான சேட்டை. தமிழ் சினிமாவில் மில்லினியல்களுக்கான அறிமுகம் இவரிடமிருந்துதான் தொடங்குகிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்த மில்லினியல் ஹீரோவைப் பற்றிய சிறப்பு கட்டுரைதான் இது.
பாரதிராஜா அலை, சினிமாவில் நடிக்கும் ஆசையோடு பல இளைஞர்களை சினிமா பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்த காலகட்டம். பாண்டியராஜனும் அப்படித்தான் சினிமா வாய்ப்புத் தேடி வந்தார். வழக்கம்போல் அவரது குள்ளமான உருவத்தால் நிராகரித்தனர். அதனால்தான் தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவனிடம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தார்.
இந்த நேரத்தில்தான் இயக்குனர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜி.கே.குமார் போன்றோர் சக உதவி இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். இந்த கூட்டணி தான் தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டை தொடங்கிவைத்தது. அதுதான் தாம் நடிப்பதற்கு ஏதுவான ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் ஸ்டைல். ஆண்பாவம், பாட்டி சொல்லை தட்டாதே படங்களெல்லாம் இந்த ஸ்டைலின் உச்சம்.
தனது குருநாதரான இயக்குனர் கே.பாக்யராஜிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, அவர் இயக்கிய 'மெளன கீதங்கள்', 'அந்த ஏழு நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'விடியும் வரை காத்திரு', 'இன்று போய் நாளைவா' போன்ற படங்களில் உதவி இயக்குனராய் இருந்து, அவர் இயக்கிய 'டார்லிங்...டார்லிங்', 'முந்தானை முடிச்சு' படங்களில் மூலக்கதை மற்றும் திரைக்கதை உருவாக்கம்வரை உடனிருந்து, இணை இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
பாண்டியராஜனின் இயக்குனர் அறிமுகம் ஒரு மாஸ் மசாலா கதைக்கு நிகரானது. 'கன்னிராசி' படம் பல நடிகர்களால் தட்டிக்கழிக்கப்பட்டு, பல தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சகோதரரான சண்முகம் இந்த கதையைக்கேட்டு ஓகே சொல்ல, பிரபு, நதியா நடிப்பில் கன்னிராசி உருவானது. அப்போதும்கூட படம் வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருந்தது.
ஆனால், படம் வெளியாகி ஃபாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளித்தந்தது. அந்த வெற்றியின் மூலம்தான் அந்த வருடமே அவர் கதாநாயகனாக ‘ஆண்பாவம்’ படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் இடம்பெற்ற இசைஞானியின் புகழ்பெற்ற பாடலான "காதல் கசக்குதய்யா" பாடலுக்கு பாண்டியராஜன் கொடுத்த விஷூவல் இன்றைக்கும் ரசிக்கக்கூடியது.
ஆண் பாவம் படத்தில் தான் நடிகை சீதா அறிமுகமானார். ஒரு திருமண கேசட் வீடியோவில் சீதாவைப் பார்த்து நடிக்க அழைத்துவந்தார் பாண்டியராஜன். இவர் மட்டுமல்ல கிராமிய பாடகரான கொல்லங்குடி கருப்பாயி அவர்களை ஆண் பாவம் படத்தில் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகப்படுத்தினார். மயில்சாமி என்னும் அற்புதமான நடிகனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் பாண்டியராஜனுடையது தான். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இவரின் 'டபுள்ஸ்' படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ஒரு இயக்குனராக வெறும் ஒன்பது திரைப்படங்களே இயக்கிய பாண்டியராஜன் அதில் பெரும்பாலானவற்றை வெற்றிப்படங்களாக மாற்றினார். கல்லூரி காலத்திலேயே 'இசை செல்வம்' என பட்டம் பெரும் அளவிற்கு இசை மீது ஆர்வம் இருந்ததால் தான், தான் இயக்கிய 'நெத்தியடி' படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஒரு முயற்சி செய்தார்.
இவற்றையெல்லாம் தாண்டி அவரது அடையாளமானது நடிகர் என்பதுதான். நூற்றுக்கணக்கான படங்கள் நடித்துவிட்டார்.
80, 90-களில் இளம் கதாநாயகனாக நடித்த அத்தனையிலும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இப்போதுவரை குணச்சித்திர வேடங்களில் மாஸ் காட்டுகிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துக் காட்டியிருக்கிறார். பாண்டியராஜன் என்னும் நடிகனை வரையறுக்க நினைத்தால் நான் ‘அஞ்சாதே’ படத்தைத் தான் மேற்கோள் காட்டுவேன்.
பாண்டியராஜன் செய்த அந்த கதாபாத்திரம் வழக்கமான வில்லனாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் கொடூரமாக கொலை செய்துகொண்டு, இன்னொரு பக்கம் 'கத்தாழ கண்ணால' என கொண்டாடுவான், சூழல்களுக்கு பயப்படுவான், இப்படியான ஒரு கதாபாத்திரத்தை பாண்டியராஜன் தான் அத்தனை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய முடியும்.
மூன்று தலைமுறைகளாக திரைப்படத்துறையில் பங்காற்றிவரும் பாண்டியராஜனை சில நிமிடங்களில் பாராட்டி முடிப்பது கடினம்தான். பிறந்தநாள் வாழ்த்துகள் பாண்டியராஜன்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!