Cinema

“தேவலோகத்திலிருந்து கொஞ்ச காலம் பூமிக்கு வந்த தேவதை இவள்! ” - நடிகை ஷோபா குறித்து இயக்குனர் பாலுமகேந்திரா

1966ம் ஆண்டு சந்திரபாபு மற்றும் சாவித்ரி நடிப்பில் உருவான ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபா. பின்னர், நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்' படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகமே வியந்து பார்த்த ஷோபா தனது இளம்வயதிலியே தற்கொலை செய்து கொண்டார்.

ஷோபா மறைந்த போது இயக்குனர் பாலுமகேந்திரா, இப்படி குறிப்பிட்டிருந்தார். ''தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்த தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா... குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா... அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..?

மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை "அம்போ" என்று விட்டு விலகிக்கொள்கிறது. அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன்" எனக் குறிப்பிட்டார்.

ஷோபாவின் அழகையும், நடிப்பையும் கொண்டாட இதைவிட வேறு என்ன சொல்லைச் சொல்லிவிட முடியும்?” .