Cinema
“முற்போக்கு பேசிய நாகரீகக் கோமாளி” : கலைவாணர் நினைவுதின சிறப்புப் பகிர்வு!
கோமாளிகள் காலம் கடந்து நிற்பவர்கள். அதிலும் என்.எஸ்.கே நாகரீகக் கோமாளி. அவரது நினைவு நாள் இன்று. "67-ல் என்.எஸ்.கிருஷ்ணன்" என்ற என்.எஸ்.கே-வின் நினைவு நாள் நிகழ்வு ஒன்றில் பேசிய கலைஞர் "என்.எஸ்.கே-வின் நினைவைப் பேசுவது அவருக்குப் பெருமை அல்ல. அவரைப் பற்றி பேசுகிறோம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அப்படியான ஒரு சுயநலம்தான் இந்த நிகழ்வு" என்று பேசினார். இந்தத் தொகுப்பும் அப்படியே.
தமிழில் உருவான முற்போக்கு சினிமாக்கள் அத்தனைக்குமான முன்னோடி அவர். தன் சினிமா பயணத்தை அவர் செய்தது, இந்தியா மேற்கத்திய கலாச்சாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த 1940-களில். அதனாலேயே இந்தச் சமூகம் பயணிக்கப்போகும் பாதையை உணர்ந்து அதைப் பற்றிய அத்தனை கருத்துகளும் எள்ளல்களாக அவரது நகைச்சுவைக் காட்சிகளில் வெளிப்பட்டிருக்கும். பெண்ணடிமைத்தனம், நுகர்வு மனப்பான்மை, பொருளாதாரம், கடவுள் மறுப்பு, பொதுவுடமை இப்படி ஒரு அரசியல் அறிஞன் பேசவேண்டிய அத்தனை கருத்துகளையும் ஒரு காமெடியனாக என்.எஸ்.கே பேசினார்.
ஒரு படத்தில் என்.எஸ்.கே இந்திரலோகத்திற்குச் செல்லும் ஒரு சாதாரண மனிதனாக நடித்திருப்பார். அங்கு இந்திரனிடம் உங்கள் இந்திரலோகத்தை விட தமிழ்நாடு மிகச்சிறந்த ஊர் என்பார். எப்படி எனக் கேட்கும் இந்திரனிடம் உங்கள் கடவுள்கள் செய்த அக்கிரமங்கள் என ஒரு பட்டியலிட்டுவிட்டு, மாறாக தமிழ்நாடு எத்தனை சமூகநீதியோடு இருக்கிறது தெரியுமா என்று இங்கிருக்கும் கலை,தொழில் வளர்ச்சி பற்றி பேசுவார். இப்படியாக திராவிட அரசியல் பேசிய சமூக சிந்தனையாளர் என்.எஸ்.கே.
ஒரு காமெடி ட்ராக் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான விதிகள் இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. ஆனால் என்.எஸ்.கே தான் எது தேவையோ அதைச் செய்தவர். 'மனோன்மணி' திரைப்படத்தில் வரும் காட்சிகள் ஒரு நேர்த்தியான, அதே நேரத்தில் இப்போது பார்ப்பதற்கும் ரசிக்கும்படியான எழுத்தைக் கொண்டது. மக்களின் மூடநம்பிக்கைகளின் மீது பின்னப்பட்டிருக்கும் காட்சியை, இறைநம்பிக்கையாளர்களும் ரசிக்கும்படியாக மாற்றிவைத்திருப்பார் என்.எஸ்.கே. அதிலும் அந்த தேவபாஷை வசனமெல்லாம் பக்கா மாஸ்!
1949-ல் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான 'நல்ல தம்பி' திரைப்படம் என்.எஸ்.கே-மதுரம் கூட்டணியில் வந்த பொலிடிகல் பரோடி திரைப்படம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் தெறிக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக சீரியஸான ரோல் செய்திருப்பார் என்.எஸ்.கே. இறுதியான ஒரு நாடக காட்சியில் தீண்டாமை, இடஒதுக்கீடு என பல அரசியல் பேசியிருப்பார்.
என்.எஸ்.கே பெரும்பாலான படங்களில் தன் காதல் மனைவியான மதுரம் அவர்களுடன் இணைந்தே நடித்திருந்தார். இந்த ஜோடியின் காதல் காட்சிகளில் அத்தனை யதார்த்தம் இருக்கும். அந்த காலகட்டங்களில் வெளியான படங்களில் ஹீரோவுக்கும்-ஹீரோயினுக்குமான காதல் காட்சிகள் பெரும்பாலும் கற்பனைக்கு எட்டாத ஃபேன்டசியாக இருக்கும். அந்த நிலையில் என்.எஸ்.கே-மதுரம் ஜோடியின் காதல் பாமர மக்களின் வாழ்வியலை எதிரொலித்தது. அதனாலேயே இந்த ஜோடி இணைந்து எத்தனை படம் எடுத்தாலும் அத்தனை படங்களையும் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள்.
1935-ல் தொடங்கி 1960 வரை சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்.எஸ்.கே. அடிப்படையில் ஒரு வில்லுப்பாட்டுக்காரரான இவர் பின்னாட்களில் 'இந்தியாவின் சாப்ளின்' என அழைக்கப்பட்டதில் இருக்கிறது அவர் சினிமா என்னும் மொழியை எப்படி பயன்படுத்தினார் என்பது.
ஒரு துறையில் முன்னோடியே சிறந்த ஒருவராக அமைவது வரம். அப்படியிருந்தும்கூட கலைவாணர் அமைத்துத் தந்த பாதை யாரும் பின்பற்றப்படாமலேயே போனது தமிழ் சமூகத்தின் கலை அவலம். கலைவாணர் என்ற பட்டத்திற்குத் தான் ஆள்வந்ததே தவிர, அவரது கலையைத் தொடர்வதற்கு ஒருவரும் வரவில்லை. சாப்ளின் தந்த காலம் தான், கலைவாணரையும் தந்தது. மற்றபடி நாகரீகக் கோமாளிக்கான தேவை இங்கு எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?