Cinema
“மிஸ் யூ மயிலு” : நடிகை ஸ்ரீதேவி பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
ஸ்ரீதேவி, இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது பிறந்தநாள். இது அதற்கான சிறப்பு தொகுப்புதான். ஆனால், வெறும் சம்பிரதாயத்துக்காக அல்லாமல், நிஜமாகவே நாம் மிஸ் செய்யும் அந்த அழகு மயிலைப் பற்றிய இனிய நினைவூட்டல் மட்டுமே.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவரை மிகப் பரிட்சயமான முகமாக மாற்றியது பாரதிராஜா இயக்கிய `16 வயதினிலே’ படத்தின் மயிலு கதாபாத்திரம். அதில் அவருக்கு என வெளிக்கொண்டுவர முடிந்த நடிப்பு அவரை பலருக்கும் கொண்டுபோய் சேர்த்தது.
`16 வயதினிலே’ ஸ்ரீதேவிக்கு இன்னொரு விதமாகக் கூட அறிமுகத்தை ஏற்படுத்துக் கொடுத்திருக்கிறது. இவரால் கண்டிப்பாக வெவ்வேறு கதாபாத்திரங்களை எடுத்து சிறப்பாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது என்று சொல்லலாம். காரணம் டாக்ஸி டிரைவர், வணக்கத்துக்குரிய காதலியே, மனிதரில் இத்தனை நிறங்கள், பைலட் ப்ரேம்நாத் என சில படங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் `சிகப்பு ரோஜாக்கள்’ நடிக்கிறார்.
வழக்கமாக டூயட், ரொமான்ஸ் பண்ணும் நடிகைகளால் அந்த பாத்திரத்தில் நடித்துவிட முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஸ்ரீதேவி - பாட்டுக்கு, காதலுக்கு என மட்டும் ஒதுங்கிக் கொள்ளும் நடிகை இல்லை. அதனாலேயே சிகப்பு ரோஜாக்களின் மிரட்டலை அவரால் புரிந்து கொண்டு நடிக்க முடிந்தது.
அதே நேரம் கமர்ஷியல் ஹீரோயின்கள் செய்ததையும் புறக்கணித்துவிட்டுப் பயணிக்கவில்லை அவர். ப்ரியா, தர்மயுத்தம், தாயில்லாமல் நானில்லை, குரு என ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதே வேளையில் தன்னை கவனித்து ரசிக்கச் செய்யும் வேடங்களிலும் பிரகாசமாய் நடித்துக் கொடுத்தார். உதாரணமாக ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களைச் சொல்லலாம். எந்த ஹீரோக்களுடன் கமர்ஷியலான நடித்தாரோ, அதே ஹீரோக்களுடன் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் படங்களிலும் நடித்த பேலன்ஸ், ஸ்ரீதேவிக்கான தனி இடம் உருவாக முக்கியமான காரணம்.
நடிப்பில் என்ன இல்லை. முன்பு சொன்னது போல ஜானியும், வறுமையின் நிறம் சிவப்பையும் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை நுட்பமான உணர்வுகளை எல்லாம் காட்டிவிட்டார் என்கிற ஆச்சர்யம் ஏற்படும். ஜானியில், ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை சொல்லும் காட்சி பற்றிச் சிலிர்க்காதவர் யாரும் இருப்பார்களா?
வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் அந்த விருந்து காட்சியில் ஸ்ரீதேவியின் அத்தனை அழகான நடிப்பை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா?
ரஜினியுடன் நடித்த `நான் அடிமை இல்லை’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து விலகி முழுக்க இந்தி சினிமாவில் மிகப்பெரிய காலத்தை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டார். 2008க்குப் பிறகு இந்தியிலும் சின்ன இடைவெளி விட்டவர், கம்பேக் கொடுத்தது இங்க்லிஷ் விங்லிஷ் படத்துக்காக. கண்டிப்பாக அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கம்பேக். குறிப்பாக அப்படி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது.
அவர் மறைவுக்குப் பிறகும் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் `நேர்கொண்ட பார்வை’யாக பிரதிபலித்துக் கொண்டிருப்பது, சினிமாவின் பால் அவர் கொண்டிருந்த காதலைத் தவிர வேறென்ன? கலை இருக்கும் வரைக்கும் அழியாத நபர்கள் பட்டியலில் ஸ்ரீதேவியின் பெயர் எப்போதோ எழுதப்பட்டுவிட்ட ஒன்று!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?