Cinema

“நகலெடுக்க முடியாத அசல் கலைஞன்” : இயக்குனர் மகேந்திரன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

மகேந்திரன் சினிமாவுக்கு செய்தது என சொல்லிக் கொள்ளவும், நன்றியாக நினைத்துக் கொள்ளவும் அவ்வளவு நிறைய இருக்கிறது. சமீபத்தில்தான் அவரது இழப்பை சந்தித்தோம். அவர் பற்றி பலரும், பலதும் பகிர்ந்ததும், நெகிழ்ந்ததுமாக பார்த்தோம். இன்று அவர் பிறந்தநாள். இன்றைக்கும் கூட அவர் பற்றி பலரும் எழுதலாம், பேசலாம். ஆனால், ஒரு நாளை ஒதுக்கி அதில் இப்போது மட்டும்தான் அவரை, அவரது படைப்புகளை பேசுவோம் என்றபடியான கலைஞன் இல்லை அவர். அது அவரது கலையின் மூலம், தனக்கு ஏற்படுத்திக்கொண்ட மரியாதை. இன்னொன்று இந்த மரியாதை கிடைக்கும் என நினைத்து அவர் செய்ததில்லை இது. எல்லாவற்றுக்கும் துவக்கம் தன்னளவில் இந்த சினிமாவை கொஞ்சமாவது நகர்த்தவேண்டும் என்கிற அவரின் எண்ணம்தான்.

இன்றைக்கு நாம் பாராட்டும், பிரம்மித்துப் பார்க்கும் சினிமாக்களை உருவாக்கிய இந்த கலைஞன், அப்போதைய சினிமாக்கள் பக்கம் பக்கமாக வசனங்களாக நிறைந்து நாடகபாணியில் இருந்ததில் தீவிர அதிருப்தி கொண்டிருந்தார். இங்கு சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். ஆனால்,  அவர்கள் காட்டும் சினிமா என்பது சினிமாவே இல்லை என்கிற கவலை கல்லூரி காலத்திலேயே மகேந்திரனிடம் இருந்தது. எந்த அளவுக்கு என்றால், அந்த மாதிரி சினிமாக்களை கேலி செய்து கல்லூரியில் நாடகம் போடும் அளவுக்கு. மற்ற சினிமாக்கள் பற்றி எதற்கு, அவரது சினிமாக்களிலேயே கூட குறைகள் இருக்கிறதென்பதை அடிக்கடி குறிப்பிடும் ஒருவர். தான் இயக்கிய படங்களிலேயே `உதிரிப்பூக்கள்’தான் பிழைகள் குறைந்த படம் என்பார் மகேந்திரன்.

அது மகேந்திரன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நடந்த விழாவில் மகேந்திரனின் பேச்சைக் கேட்டு அசந்து போனார், விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர். அந்த பேச்சைப் பற்றி மகேந்திரனுக்கு ஒரு பாராட்டுக்கடிதமும் அனுப்பினார் எம்.ஜி.ஆர். ஆனால், அப்போதைய குடும்பச் சூழலால், அதை மடித்துப் பெட்டியில் வைத்துவிட்டு வேலை தேட ஆரம்பித்தார் மகேந்திரன். ஆனாலும் சினிமாவுக்கு தான் திறமையானவர்களை இழுத்துக்கொள்ளும் சக்தி இருக்கிறதே. கதாசிரியராகிறார் மகேந்திரன். `நாம் மூவர்’, `சபாஷ் தம்பி’, `நிறைகுடம்’, `திருடி’ `தங்கப்பதக்கம்’, `ஆடுபுலி ஆட்டம்’ என அவரது கதையமைப்பில் உருவான பல சினிமாக்கள் பிரம்மாண்ட வெற்றியும் அடைகின்றன.

ஆனால், மகேந்திரனுக்கு “நாம் எந்த சினிமாவை பரிகாசம் செய்தோமோ, அதே போன்ற சினிமாக்களைதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்கிற கவலை எழுகிறது. சினிமாவே வேண்டாம் என்கிற முடிவுடன் ஊருக்கு சென்றுவிடுகிறார். மகேந்திரனின் அந்த முடிவை மாற்றியது உமாசந்திரன் எழுதிய `முள்ளும் மலரும்’ நாவலைத் தழுவி அவர் எழுதி வைத்திருந்த ‘திரைக்கதையும், தயாரிப்பாளர் வேணு செட்டியாரும்’. இதன் பிறகு நடந்தது எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் அறிந்தே வைத்திருப்போம்.

மேலே இருந்தது அவரது வரலாறு என்று வைத்துக் கொள்ளலாம். அதில் அவர் செய்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். சினிமா பிரசாரமாகவும், நாடகமாகவும் பயன்படுத்த ஆட்கள் இருந்தார்கள். ஆனால், உணர்வுகளை எந்த அடிக்கோடிடுதலும் இல்லாமல், இயல்பாக கடத்துவதை செய்யத்தான் ஆட்கள் குறைந்திருந்தார்கள். அங்கிருந்து மகேந்திரன் சினிமாவை இயக்கினார். மனித மனங்களைப் போல சிக்கலான ஒன்று இருந்துவிடுமா? அதையும் விடவா ஒரு நாயகனுக்கு பெரிய சவால் வேண்டும்? முள்ளும் மலரும் படத்தை எடுத்துக் கொள்ளலாம். காளியின் ஈகோ, போலவே தங்கை மீது அவன் வைத்திருந்த அன்பு இரண்டையும் வைத்து மற்ற கதாபாத்திரங்களை உள்ளுக்குள் கொண்டு வந்து திரைக்கதையை விரித்திருப்பார். எத்தனை எளிமை பாருங்கள். ஆனால், கதையில் இருக்கும் அதிர்வுகள் எல்லாமே தேர்ந்த எழுத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக இருக்கும்.

சமீபத்தில் மகேந்திரனின் மகன் ஜான், ஃபேஸ்புக் பதிவில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். விஜய் சேதுபதி - மகேந்திரனின் சந்திப்பில் நடந்தது அது. அதில் முள்ளும் மலரும் படத்தின் ஒரு காட்சி, சரியாகச் சொல்வதென்றால், ஒரு கையை இழந்த பிறகு சரத்பாபுவை சந்திக்க அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருப்பார் ரஜினி. அந்தப் பக்கமாக வரும், ஃபடாஃபட் ஜெயலக்‌ஷ்மி அவரின் சட்டையைச் செருக உதவுவார். ரஜினி கையால் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தில் பதறுவார். இந்தக் காட்சியை விஜய் சேதுபதி குறிப்பிட்டு சொல்லி “ஒரு ஆண் வெட்கப்படறத ரஜினி சார் எவ்ளோ அழகா நடிச்சிட்டார்ல சார்” என மகேந்திரனிடம் சொல்லி ஆச்சர்யப்பட்டிருக்கிறார். விஜய் சேதுபதி மாதிரி தினமும் யாரோ ஒருவர் மகேந்திரனின் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து, ஒரு காட்சியில் இருக்கும் நுணுக்கத்தைப் பற்றி சிலிர்த்துக் கொண்டுதான் இருப்போம்.

மேலாக பார்ப்பவர்களுக்கு அது அண்ணன் தங்கை பற்றிய படமாகத் தெரியலாம். ஆனால், நிஜத்தில் அது காளி என்கிற ஒருவனின் அகந்தை, அவனின் வீழ்ச்சி, அந்த வீழ்ச்சியிலும் கூட அவனின் அகந்தை என்று செல்லும் ஒன்று. ஒரு கதாபாத்திரம் தன்னுடைய வீழ்ச்சியை உணர்த்தவேண்டிய அவசியம் வரும்போது அது எவ்வளவு இயல்பாக இருக்கலாம் என்பதற்கு இதைக் காட்டலாம். போகிறபோக்கில் ஒரு கதாபாத்திரத்தின் மன உணர்வை எடுத்துவரும்.

வெந்நீர் கொதிக்க வைத்திருக்கும் தங்கையைக் கடந்து காளி செல்லும்போது, ”இதக் கொஞ்சம் இறக்கிக் கொடுண்ணே” என்பாள். சடாரென நிற்கும் ரஜினி விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு நகர்வார். அதே நேரத்தில் கூட அவனுக்குள்ளாக இருக்கிற அகந்தை மறுபடி தலை எடுக்கும். தங்கை தனக்குப் பிடிக்காதவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்கிற ரோஷத்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி கதாபாத்திரத்திற்கு தன் தங்கையை மணம் முடிக்க நினைப்பது. இன்னொன்று கூட இருக்கிறது, படத்தின் க்ளைமாக்ஸ். அங்கும் காளி கதாபாத்திரம் மனம் மாறி திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாது. அவனது தங்கை அவன்தான் முக்கியம் என ஊரார் முன்பு நிரூபித்துக் காட்டியதும்தான், திருமணத்துக்கு சம்மதிப்பான்.

இப்படி எத்தனை நுணுக்கங்கள்.. மகேந்திரன் படங்களுக்கு என ஒரு தன்மை உண்டு. நகலெடுக்க முடியாத தன்மை. மிக உச்சத்துக் போன பல இயக்குநர்களுடைய சாயலை, வேறு எந்த இயக்குநராலும் கைப்பற்றி தன்னுடைய கதையை அதற்குள்ளே புகுத்திப் படம் பண்ணிவிட முடிந்தது. அதற்கு பல உதாரணங்கள் கூட இங்கு உண்டு. ஆனால், மகேந்திரன் ஒரு கதையை கையாளும் விதமும் அதை காட்சியாக்கும் விதமும் அந்த வசதி கொண்டதாக இருந்ததில்லை. ஏனென்றால், அதற்குள் செல்லும் பாதை சிரமமானது. காட்சிகளை எல்லா புறத்திலிருந்தும் இறுகக் கட்டி மேலெழுப்பவேண்டிய சவால் இருக்கும்.

ஜானியில் ஒரு காட்சி, ஜானி தன் பிறந்தநாள் பற்றி அர்ச்சனாவிடம் சொல்வார், அதன் தொடர்ச்சியாக இன்னொரு காட்சியில், அர்ச்சனா தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் இடத்தை எடுத்துக் கொள்வோமே. இதைவிட சகஜமான உரையாடல் கொண்ட ப்ரபோசல் சீன் தமிழ் சினிமாவில் இருந்துவிடுமா? அதிலேயே இன்னொரு உதிரிப்பூக்களில் படம் முழுக்க நீங்கள் வெறுப்பு கொண்டிருந்த சுந்தர வடிவேலு கதாபாத்திரத்தை ஒரே காட்சியில் திருப்பி நிறுத்தியிருப்பார்.

நடிகராகவும் அவரது முகத்தை சில படங்களில் பார்க்க முடிந்தது. அவருக்குள் இருந்த மிகப்பெரிய நடிகரை வெளிக் கொண்டுவரும்படி அது இருந்ததா என்றால், இல்லைதான். காரணம் அவரது உடல்மொழியும், ஸ்டைலும் ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினியே, தன்னுடையதாக நகலெடுத்துக் கொண்டார் என்றால், அவருக்குள் இருந்த நடிகனும் பெரிய ஆளாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும், தெறி, நிமிர், பேட்ட, போன்ற படங்களில் அவரை நடிகராக பார்த்தது நிஜமாகவே வித்தியாசமான அனுபவம்.

சினிமாவை ஒரு வியாபாரமாகப் பார்ப்பதில் மகேந்திரனுக்கு விருப்பம் இருந்ததில்லை. அவரின் மிகப்பெரிய ஹிட்டான படங்களை மற்ற மொழியில் ரீமேக் செய்து கொடுங்கள் என பல முன்னணி நட்சத்திரங்கள் அவரை அணுகியிருக்கிறார்கள். அதன் மூலம் வணிகரீதியாக பெரிய தொகைகூட பேசப்பட்டிருக்கலாம். ஆனால், தனக்கு ரீமேக்கில் விருப்பமில்லை என மறுத்தார் மகேந்திரன். அது கலைக்கு அவர் தார்மீக ரீதியாக அளிக்கும் மரியாதை. கூடவே சக இயக்குநர்களை பாராட்டுவதிலும், புதிய திறமைகளை மதிப்பதிலும் கூட ஒரு கலைஞனுக்கு கடமை இருக்கிறது. அது மகேந்திரனிடம் இருந்தது. எந்த இயக்குநரோ, என்ன மொழிப் படமோ, படம் பிடித்திருந்தால், உடனடியாக அந்த இயக்குநரை அழைத்து அவரிடம் பேசி, பாராட்டுவதை அவரின் மிகப்பெரிய கடமையாகவே வைத்திருந்தார் மகேந்திரன். மலையாளத்தில் ‘ஷட்டர்’, ‘முன்னயிறிப்பு’, தமிழிலில் கார்த்தி நடித்த ‘தோழா’ போன்ற படங்களின் இயக்குநர்களை பாராட்டியது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அவரின் மகன் ஜான்.

படத்தில் பாடல்கள் வைப்பதில் உடன்பாடில்லாதவர் மகேந்திரன். ஆனால், அவரது படங்களில் ஊற்றெடுத்து வந்து நமது ப்ளே லிஸ்ட்டில் வழிந்து கொண்டிருக்கின்றன பல பாடல்கள். எதை எடுத்துக் கொள்ளலாம், அவரது எல்லாப் படங்களிலுமே எவ்வளவு அழகான பாடல்கள். பாடல்களுக்கான சூழல்கள் பற்றி வளர்வது அதன் அழகு. மலைப்பாதை பற்றிச் சொல்வதைப் போல, தான் ரசிக்கும் பெண்ணைப் பற்றி வர்ணிக்கும் “செந்தாழம் பூவில்”.

தண்ணி எடுக்கச் சென்ற இடத்தில் ரேடியோ அணைக்கப்பட, அவளே பாடும் “நான் பாட வருவாய் தமிழே”, புகழ்மிக்க பாடகி, அவரது ரசிகருக்கு ப்யானோ வாசித்துக் காண்பிக்கும்போது வரும் “என் வானிலே” என இது மட்டும் என்று இல்லை, இன்னும் பல பாடல்களை இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.

இப்படியாக மகேந்திரன் நம்மோடு நிரந்தரமாகத் தங்கிக்கொள்ள பல வேலைகளையும் செய்து வைத்திருக்கிறார். அதுதான் அவரை நம்முடன் இத்தனை பிணைப்புடன் வைத்திருக்கிறது. அது என்றைக்குமே அவரை நம்முள் உயிர்ப்புடன் வைத்திருக்கும். நன்றி மகேந்திரன் சார்!