Cinema
சினிமா.. சமூகம்.. இரண்டிலும் நின்று விளையாடும் ‘அகரன்’ சூர்யா! #HBDSuriya
தமிழ் சினிமாவுக்கும், தமிழ் ரசிகனுக்கும் இறுகப் பிணைக்கப்பட்ட சணல் போல, பிரிக்கமுடியாத பிணைப்பு ஒன்று இருக்கிறது. ஒரு நடிகனை வெறும் கலைஞனாக மட்டும் ரசிகன் பார்ப்பதில்லை. அதையும் தாண்டிய அன்போடு அரவணைக்கின்றனர் ரசிகர்கள். நடிப்பு மட்டுமே என் பணி என்று ஒதுங்கிவிடாமல், ரசிகனின் மீதும் அக்கறை கொண்ட ஒருவர் சூர்யா.
தென்னிந்திய சினிமாவின் நிரந்தர இளைஞனாகவும், தன்னிகரில்லா கலைஞனாகவும், சமூகம் சார்ந்த பண்பாளனாகவும் சூர்யாவை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நடிப்பில் சிங்கமாய்; குணத்தில் தங்கமாய் என அடைமொழி இட்டுக் கூட சூர்யாவை வரவேற்கலாம். நடித்த படங்களில் பாதிக்கும் மேல் ஹிட் லிஸ்ட், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் நடிகன், கூடுதல் சேர்க்கையாக, ரசிகன் மீதும், சமூக மக்கள் மீதும் நீங்கா அன்பினை காட்டியும், கல்வியறிவினை புகட்டியும் வரும் ஒரே நடிகனான சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.
ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற அங்கீகாரம் இருந்தாலும் அதை பயன்படுத்தி எளிதாக சினிமாவிற்குள் வந்துவிடவில்லை சூர்யா. தன்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் இருந்தே தன் மீதும் தனது தோற்றத்தின் மீதும் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவே இருந்தவர் சினிமாவில் தன் முகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எண்ணி தனியார் ஜவுளி நிறுவனத்தில் கூலிக்கு வேலை செய்து வந்தார்.
இவருக்குள் இருந்த நடிகனை 1997ல் டைரக்டர் வசந்த் வெளிக்கொண்டுவந்தார். அந்த படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டதே அதில் அவரது நெருங்கிய நண்பர் விஜய்யும் உடணிருந்ததால் தான். ‘நேருக்கு நேர்’ என்ற தலைப்பில் வெளியான அந்தப் படம் தான் சூர்யாவின் முதல் அறிமுகம். அப்போதைக்கு விஜய்யும் ஒரு வளர்ந்து வரும் நடிகராகவே இருக்க இந்தப் படத்துக்கான வரவேற்பும் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதே போல படத்தின் பாடல்களில் சூர்யா நடனமாட கஷ்டப்பட்டது, சிம்ரன் பின்னால் ஓடியபடியே ஒரு பாடல் முடிந்தது எனப் பல வகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் சூர்யா.
இந்த விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கவே சினிமாவில் தொடர்ந்து நடிக்கவும் எண்ணினார் சூர்யா, ஆனால் இதற்கும் பின்னால் விஜய் இருந்ததாகவும் ஒரு செய்திகள் அப்போது உலவியது. ஆரம்பக்காலங்களில் விஜய்யும் இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது தான் சூர்யாவுக்கு விஜய் உதவக் காரணம் என்றும் சொல்லலாம். பின்னர் படிப்படியாக சினிமாவை கற்கத் துவங்கிய சூர்யாவுக்கு, அடுத்தடுத்து வெளியான காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், ஃப்ரண்ட்ஸ் என அனைத்தும் ஏற்ற இறங்கங்களையே சந்தித்தது.
திரைத்துறைக்கு அறிமுகமாகி 4 ஆண்டுகளாகியும் சூர்யாவை ஒரு நடிகனாக ஒரு சிலரே ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனாலும் சூர்யா எந்த இடத்திலும் நடிப்பை விடவேண்டும் என்று நினைக்கவில்லை. எடுத்த காரியத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்பதே சூர்யாவின் ஆல்டைம் கொள்கை. படத் தோல்வி நேரத்திலும் தெளிவுடன் இருக்கவும், பொறுமையாக காத்திருக்கவும் முடிந்தது. அப்போது தான் இயக்குனர் பாலாவின் நந்தா பட வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. தனக்கு நடிப்பு வரவில்லை என்று சொன்ன அனைவருக்கும் அந்த ஒரே படத்தில் மிரட்டலாக பதிலளித்தார் சூர்யா.
2001-ல் விஜய்யுடன் ப்ரெண்ட்ஸ் படம் சூர்யாவுக்கு கமர்ஷியலாகவும் , பாலாவின் நந்தா , நடிப்பில் சூர்யாவின் தனித்தையும் வெளிப்படுத்தி, சினிமாவில் சூர்யாவை நிலைத்திருக்க செய்தது. அடுத்து வந்த உன்னை நினைத்து குடும்ப ரசிகர்களின் கவனத்தை இவரின் பக்கம் திருப்ப தனது கதை தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார் சூர்யா.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நந்தா படத்தில் முதலில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படம் சூர்யாவுக்கு திருப்புமுனையாக இருந்த படம். அதுமாதிரி, விக்ரம் இயக்கத்தில் உன்னை நினைத்து படத்தில் முதலில் ஒப்பந்தமானது விஜய். ஒரு வாரம் படப்பிடிப்பு சென்றுவிட்டு, விஜய் விலக, அந்தக் கதை சூர்யாவிடம் வருகிறது. அந்தப் படத்தையும் தனதாக்கிக் கொள்கிறார் சூர்யா.
இப்படியான தேர்வுதான் சூர்யாவை நடிகனாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. மெளனம் பேசியதே படத்தில் காதலுக்கு வில்லனான கெளதமாகவும், காதல் மட்டுமே வாழ்க்கை எனும் சில்லுனு ஒரு காதல் கெளதமாகவும் இரண்டிலும் ரசிகர்களை கொண்டாட வைத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி, ஹரியின் இயக்கத்தில் வெளியான ஆறு என அனைத்தும் ஹிட்டடிக்க, சூர்யாவை ரசிகர்கள் தங்களில் ஒருவராகவே கருதினார்கள்.
குடும்பங்கள் கொண்டாடும் நடிகனாக இருந்த சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் கொண்டாடும் நடிகனாக மாறினார். ஹரியின் வேல் படத்துக்கு பிறகு இவருக்குத் தொட்டதெல்லாம் ஹிட் தான். வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், 7ஆம் அறிவு என அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இதில் சிங்கம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு அதன் தொடர்ச்சியாக மூன்று பாகங்களை வெளியிடக் காரணமானது.
தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படும் பலரும் ஆரம்பகாலங்களில் பல அவமானங்களையே சந்தித்திருப்பார்கள். ஆனால் அதை மனம்திறந்து பொது மேடையில் சிலரே சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் சூர்யாவும் ஒருவர். தன் தோற்றத்தைப் பற்றியும் தனது நடனத்தைப் பற்றியும் வந்த எதிர்மறையான விமர்சங்களுக்கு தனது படங்களின் மூலமே பதிலளித்தார். 100 கோடி வசூல் செய்யும் படங்களுக்கான பட்டியலில் இவரின் படங்கள் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறதென்றால், இவருக்கான வரவேற்பும் இவரின் ரசிகர் பின்புலமும் சொல்லித் தெரியவேண்டியவை அல்ல.
இந்தத் தொகுப்பில், ஒரு நடிகரான சூர்யாவின் திரைப்பயணத்தைப் பார்த்தோம். நடிகராக மட்டுமல்லாமல், சமூக அக்கறையுள்ள குடிமகனாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் சூர்யா. 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலமான அவரின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. பழங்குடியின குழந்தைகளில் தொடங்கி ஆயிரக்கணக்கில் குழந்தைகளுக்கு கல்வியைத் தந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 'புதிய கல்விக் கொள்கை' என்னும் கல்வி மீதான வன்முறையை எதிர்த்து அவர் கொடுத்த குரல் தனித்துக் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் கல்வி சார்ந்து தொடர்ந்து பல உதவிகளை செய்துகொண்டிருக்கும் நபர், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்களை சந்தித்த ஒரு நபர் அவர்களுக்கான அடிப்படை உரிமை மீது ஒரு பிரச்னை ஏற்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பது இயல்பு. ஆனால் 'அவர்களில் ஒருவனாக' தன்னை நினைத்து, அவர்களின் பிரதிநிதியாக தன்னை முன்நிறுத்தி ஒரு பெருங்கோபத்தையே வெளிப்படுத்துதல் என்பது சூர்யா என்னும் நாயகன் தமிழ் சமூகத்திற்கு எத்தனை தேவையானவர் என்றே எண்ணவைக்கிறது.
இந்த விஷயத்தில் தான் எதிர்ப்பது மத்திய-மாநில ஆளும் கட்சிகளை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தும் மக்கள் மீதும், அவர்களின் கல்வி உரிமை மீதும் அவர் வைத்திருக்கும் நேசம், எந்த தயக்கமும் இன்றி மக்கள் பக்கம் நின்று போர்க்குரல் எழுப்ப வைத்தது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசும்போது அரசுப் பள்ளி மாணவர்களை குறிப்பிடும்போதெல்லாம் “நம்ம பசங்க...” “நாம பேசணும்” என்றே குறிப்பிட்டது தான் யார் பக்கம் இருக்கிறேன் என்று ஆத்மார்த்தமாகவே வெளிப்படுத்தும் இடமாக அமைந்தது.
திரையில் அவர் நடிப்பும், பொதுவெளியில் மக்கள்நலன் சார்ந்த அவர் குரலும் தமிழ் சமூகத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமும் அவசியமுமானது. பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா. இன்னும் இன்னும் வெரட்டி வெரட்டி வெளுங்க சூர்யா!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?