Cinema

சினி அப்டேட்ஸ் 5 : தொடங்கவிருக்கும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்... ரஞ்சித்தின் அடுத்த படம்!

கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. படப்பிடிப்பு 2016ல் தொடங்கினாலும் பொருளாதார சிக்கல்களால் ரிலீஸாக முடியாமல் தள்ளிப்போனது. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கூடிய சீக்கிரமே படம் வெளியாகவிருக்கிறது.

தர்புகா சிவா இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடந்த வருடம் தனுஷூக்கு வடசென்னை, மாரி 2 ஆகிய படங்கள் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றன. இந்நிலையி் இந்த வருடம் தனுஷூக்கு ஹாலிவுட் படமான பக்கிரி வெளியானது. அதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தனுஷ் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு UA சான்றிதழ் வாங்கியது.

இப்படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியது கூடுதல் தகவல். இந்நிலையில் படத்தை ஜூலை 26ம் தேதி வெளியிட முடிவாகியிருக்கிறதாம். ஒருவழியாக படத்தை வெளியிடத் தயாராகியுள்ளது தயாரிப்பு தரப்பு. அதுமட்டுமல்லாமல், இந்த வருடமே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படமும் வெளியாகிவிடும்.

ரஜினி, அக்‌ஷய்குமார் நடிப்பில், ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் 2.0 படம் கடந்த வருடம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் வேலையில் முழு மூச்சாக இறங்கினார் ஷங்கர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி நான்கே நாட்களில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. ஷங்கருக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையிலான சில சிக்கல்களால் இனி, இந்தியன் 2 உருவாகாது என தகவல் வெளியானது. அதை உண்மையாக்கும் விதமாக, பாகுபலி நாயகன் பிரபாஸூடன் ஒரு படமும், விஜய் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க முயன்றார் ஷங்கர்.

இதற்கு நடுவே இந்தியன் 2 பட தயாரிப்பு தரப்பான லைகாவுடன் இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமூகமாக இந்த பேச்சுவார்த்தை முடியவே, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறதாம். இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. இந்தப் படம் மீண்டும் தொடங்காமல் போனால் தொழில்நுட்ப கலைஞர்களின் பல மாத உழைப்பு வீணாகியிருக்கும். மீண்டும் படம் தொடங்குவதில் ஒட்டுமொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறதாம்.

சமந்தா நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியான படம் ‘ஓ பேபி’. இது, 2014ல் வெளியான கொரியன் படமான ‘மிஸ் ஃக்ரானி’யின் தெலுங்கு ரீமேக். இது சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் ஏற்கெனவே ரீமேக்காகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கதைநாயகியாக சமந்தா நடித்திருக்கிறார். நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தெலுங்கில் ரிலீஸான இந்தப் படம் 3 நாட்களில் மட்டும் 17 கோடி வரை வசூலித்துள்ளது.

‘ஓ பேபி’ படத்துக்கு தெலுங்கில் நல்ல ரெஸ்பான்ஸ். அப்படி என்ன கதை என்றுதானே யோசிக்கிறீர்கள்... 60 வயது பாட்டியான லெட்சுமி, திடீரென 20 வயது சமந்தாவாக மாறிவிடுகிறார். பார்க்க 20 வயதாக இருந்தாலும், பண்புகளில் 60 வயது பாட்டி. இப்படி 60 பாட்டி 20 வயது இளம்பெண்ணாக மாறினால் என்ன நடக்கும் என்பதுதான் ஒன்லைன். காமெடியிலும், சென்டிமென்டிலும் அதகளப்படுத்தும் ‘ஓ பேபி’ சீக்கிரமே தமிழுக்கும் வர வாய்ப்பிருக்கிறதாம்.

நிவின் பாலி நடித்து 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான `ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தை இயக்கியவர் ஜி.பிரஜித். இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் `சத்யம் பரஞ்சா விஸ்வசிக்குவோ’. பிஜு மேனன், சம்ரிதா சுனில், அலென்சிர் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்’ படத்தின் கதைக்காக  தேசிய விருது வாங்கிய சஜீவ் பழூர் இந்தப் படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்துக்கான இரண்டு டீசர்கள் வெளியாகி படத்தின் மீது ஒரு ஆவலை ஏற்படுத்தியது. இப்போது இந்தப் படத்தின் முதல் வீடியோ சாங்கான `அம்பரம்’ பாட்டு வெளியாகியுள்ளது. சீக்கிரமே படமும் வெளியாக இருக்கிறது.

தெளிவான கதைக்களமும், சமூகம் சார்ந்த கதையோடும் படங்களை இயக்கக்கூடிய இயக்குநர் ப.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என இவரது ஒவ்வொரு படமுமே ஹிட் மெட்டீரியல். காலா முடித்த கையோடு ரஞ்சித் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பாலிவுட்டில் பிர்ஸா முண்டா என்கிற படத்தை இயக்கப்போவதாக கூறியிருந்தார். அதற்காக ஆறு மாதத்துக்கும் மேலாக ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ரஞ்சித்.  இந்த பாலிவுட் படத்துக்கு நடுவே சின்னதாக ஒரு தமிழ் படம் ஒன்றை இயக்கிவிட முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்தப் படத்தில் ஆர்யா லீட் ரோலில் நடிக்கவிருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் கார்த்தியை நடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் கார்த்தி வேறு படங்களில் பிஸியாக இருந்ததால், ஆர்யாவை டிக் செய்திருக்கிறார்கள்.  தவிர, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.